கி.ரா - நூற்றாண்டை நோக்கி நடந்த கால்கள்

“தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்”

- பாரதியைப் போற்றிப் பாவேந்தர் உரைத்ததுபோல், வாய்மொழி வழக்காறுகள், மண்ணின் கலைகள் இமைதிறவாமல் கிடந்த நிலையில், அவைகளுக்கு விழி தந்தார்.

கவிதைக்குப் பாரதி.
உரைநடைக்கு கி.ரா.

கரிசல் இலக்கிய வட்டார அகராதி முதலாக சொலவம், வழக்காறுகள் என வண்டிவண்டியாய்க் கொட்டிய கைகள், இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் என எண்ணியிருந்தோம்.

நூறு வயது வாழுதல் அபூர்வம். எழுத்தாளர்கள் வாழ்வது இன்னும் அபூர்வம். கி.ரா என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923 - இல் உற்பத்தியாகி, தீராநதியாய் இன்றும் ஓடிக் கொண்டிருந்தது; இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16 - இல் , தன் 99 – ஆவது வயதில் கி.ராஜநாராயணன் அடியெடுத்து வைப்பார் எனக் காத்திருந்தோம்.

“கிராமங்களில் தான் மொழிகள் ஜீவனுடன் வாழ்கின்றன” என்பதை அருத்தம் திருத்தமாக கி.ரா சாதித்துக் காட்டியுள்ளார். இலக்கியம் என்றால் அப்படித்தான். அவரவா் மொழியில் எழுதப்படவேண்டும்.

வட்டார மொழியும் அதன் வகைதொகையில்லாச் செழுப்பமும் கி.ரா என்னும் பெருமரத்தை கொப்பும்கிளையுமாய் செழிக்கச் செழிக்க வளர்த்தன. தாத்தா சொன்ன கதைகள், சிறுவர் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சொல்லாடல், விடுகதை என நாட்டர் வழக்காறுகளினுள்ளிருந்து புதிய இலக்கியவகைகளைக் கண்டெடுத்தார்.

இவையெல்லாமும் இன்ன பிறவும் நாட்டாருக்குள் இருந்தவைதாம். அவைகளத் தேடிக்கண்டடைய ஒருவர் தேவையாயிருந்தது. அது அவராக இருந்தார். எல்லாமும் சேர்ந்து அவராகி, பள்ளிக்கூடம் கண்டிராதவரை ’வருகைதரு பேராசிரியர்’ என்ற படித்தவர்கள் அமரும் கல்விப்புல நாற்காலியில் உட்காரச் செய்தது. புதுவைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் அளித்த ’வருகைதரு பேராசிரியர்’ - வட்டார எழுத்துக்குக் கிடைத்த கவுரம்.

கி.ரா கரிசல் எழுத்துக்களுக்கு முன்னோடி என்கிறார்கள் பலர். அது முழு உண்மையல்ல. நடப்பு உரைநடைத் தமிழுக்கு முன்னத்தி ஏா் பிடித்தவா். 

கி.ரா என்ற சகாப்தம், தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. இனி சகாப்தத்தின் நாட்கள் நடக்கும்.

தமிழர் கண்ணோட்டம் (2021 சூன்), பேசும் புதிய சக்தி (2021 சூன்), உயிரெழுத்து (2021 சூன்)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை