எது மக்கள் அதிகாரம்?

ஏப்ரல் 4, 2017 அன்று தமிழ் ஹிந்துவில் வெளியான சோ.தர்மனின் கட்டுரையில் சொல்லப்படுவது நூற்றுக்கு நூறு உண்மை. 1950-கள் வரை கிராமங்கள் தன்னைத்தானே பராமரித்துக்கொண்டன. ஊர் மக்கள் தமது தேவைகளைக் கூட்டாக நிறைவேற்றினார்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கண்மாய் நீர்தான் குடிநீர். கோடையில் முறை தவறாமல் தூர்வாருதல் நடக்கும். வீட்டுக்கு ஒரு ஆள் வர வேண்டும். வேலைசெய்ய இயலாதவர்கள் ஒரு கூலியாள் ஏற்பாடு செய்வார்கள். அரசின் நிதி ஒரு பைசா செலவில்லாமல் இரண்டு நாளில் தூர்வாரி முடித்தார்கள். இதுபோல் வீட்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் உழைப்புச் செலுத்தி, சரள் அடித்து, ஊரைச் சுற்றிச் சாலை அமைத்துத் தந்ததையும் சிறு வயதில் கண்டுள்ளேன்.

இப்போது கண்மாய் பராமரிப்பு என்றால் பொதுப்பணித் துறை; சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை என்று ஒவ்வொரு துறையும் ஊடே புகுந்ததால், ஊழல் புகுந்து நிலையாய் நிற்கிறது. 1960-களின் தொடக்கத்திலிருந்து அரசு இயந்திரத்தின் வலுவான ‘ஆக்டோபஸ் கரங்கள்’ அனைத்தையும் வளைத்துக்கொண்டன. எல்லாவற்றையும் தூக்கித் தன் கையில் அரசு வைத்துக்கொள்வது ஆங்கிலேயன் நமக்கு விட்டுச் சென்ற நிர்வாக முறை. மக்களுக்கானதை மக்களே நிறைவேற்றிக்கொள்ள அதிகாரம் அளிப்பதுதான், உண்மையான மக்கள் அதிகாரம்!

- பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்
10 ஏப்ரல் 2017
தமிழ் ஹிந்து

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்