பா.செ…. தலைவர் பிரபாகரனின் தோழர்….. புகழேந்தி தங்கராஜ்

தமிழீழத்துக்கான போராட்டக் களங்களில் மட்டுமின்றி, மானுட நீதிக்கான அனைத்துப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கேற்றவர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள். 2002ல் அவருடன் சேர்ந்து மேற்கொண்ட தமிழீழப் பயணம், இப்போதுதான் நடந்து முடிந்ததைப் போல் இருக்கிறது. அதற்குள் அணைந்துவிட்டது அந்த சூரிய தீபம்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு - என்கிற மையப்புள்ளியில் தான் நானும் அவரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டோம். அது 2000-ம் ஆண்டு. விடுதலைப் புலிகளைப் போற்றுகிற திரைப்படம் என்கிற குற்றச்சாட்டுடன் என்னுடைய ‘காற்றுக்கென்ன வேலி’ தடை செய்யப்பட, அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த தருணம். எந்த முன்  அறிமுகமுமின்றி தானாக முன்வந்து அந்தப் போராட்டக்களத்தில் எங்களுடன் இணைந்து கொண்டார் பா.செ. 

தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் ஆதரவைப் பெறும்பொருட்டு, அவர்களுக்காகவென்றே காற்றுக்கென்ன வேலி பிரத்தியேக காட்சியை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் பா.செ. ஏற்பாடு செய்தார். அந்தக்  காட்சியின் வெற்றிக்காக தன்னை வருத்திக்கொண்டு அவர் பணியாற்றினார். அந்தக் காட்சியில் தான் தமிழ் இயக்குநர்கள் பலரும் படத்தைப் பார்த்தனர். அரசின் தடை எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை உணர்ந்தனர். 


கைமாறு கருதாத பா.செ.வின் அந்த முன்னெடுப்பால் காற்றுக்கென்ன வேலி தடைக்கு எதிரான கருத்து பல மடங்கு வலுப்பெற்றது. ‘விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசினால் கூட என்ன தவறு’ என்கிற கேள்வி விஸ்வரூபமெடுத்தது. அந்த நிகழ்வுக்கான செலவுகளைச் சந்திக்க அவர் எவரையும் அணுகவில்லை. அனைத்தும் அவரது செலவிலேயே அரங்கேறியது. ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ அமைந்தது, அந்த இக்கட்டான தருணத்தில் அவர் ஓடோடிவந்து உதவிய பாங்கு!

ஸ்ரீபெரும்புதூர் சம்பவம் நடந்த ஒன்பது ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படம் என்பதுதான் காற்றுக்கென்ன வேலி தடை செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்று நண்பர்கள் பலரும் என்னிடம் கூறிய நிலையில், பா.செ. மட்டும்தான் ‘சரியான நேரத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறீர்கள்’’ என்றார். விடுதலைப் போர் வீரர்களான விடுதலைப் புலிகள் குறித்த தவறான பிரச்சாரங்களை முறியடிக்க இதுபோன்ற படைப்புகள் நிறைய வரவேண்டும் - என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவருக்கு இருந்தது.

காற்றுக்கென்ன வேலி தடைக்கு எதிரான போராட்டக்குழுவில் பா.செ.வும் இடம்பெற்றார். அறுபதுகளிலேயே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணித் தளபதிகளில் ஒருவராக இருந்த அவரது வழிகாட்டுதல், காற்றுக்கென்ன வேலி போராட்டத்துக்கு வலுச் சேர்த்தது. 

இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான கா.வேலி போராட்டக் குழுவில் எழுத்தாளர்களும் இயக்குநர்களும் இடம்பெற்றிருந்தனர். படத்தின் மீதான தடையை எப்படியாவது தகர்க்க வேண்டுமென்பதில் என்னைக் காட்டிலும் பாரதிராஜா, பா.செ போன்றவர்கள் அதிக அக்கறை கொண்டிருந்ததைப் பார்த்து பல சந்தர்ப்பங்களில் நான் நெகிழ்ந்திருக்கிறேன். அதே அளவு நெகிழ்ச்சியை, தடைகளைத் தகர்த்து 2001 இறுதியில் கா.வேலி வெளியான நாட்களில் பாரதிராஜாவிடமும் பா.செ.விடமும் பார்த்திருக்கிறேன்.


2002 இறுதியில், யாழ்ப்பாணத்தில், விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில் கலந்துகொள்ள பா.செ.வுடன் சேர்ந்து மேற்கொண்ட முதல் தமிழீழப் பயணத்தின் ஒவ்வொரு நகர்வும் இப்போதும் நினைவிருக்கிறது. எங்கள் குழுவில், தோழர் திருமாவளவன்,  மக்கள் கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது ஆகியோரும், நாங்களும்! மொத்தம் 5 பேர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிரபாகரன் என்கிற இயல்பான மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. 

சைவ உணவு மட்டுமே சாப்பிடும் திருமாவளவனிடம் ‘ஓ…. நீங்கள் சைவச் சிறுத்தையா’ என்று ஒரு வெடிச்சிரிப்போடு பிரபா கேட்ட கணமாகட்டும்…… சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்து கேட்ட பா.செ.விடம் ‘மீனம்பாக்கத்தில் போய் இறங்கும்போதே எவிடென்ஸுடன் இறங்கப் போகிறீர்களா’ என்று கேட்டுவிட்டு உடல் குலுங்கச் சிரித்த கணமாகட்டும்…. ‘தமிழீழ விடுதலைக்கான உங்கள் பங்களிப்பு தொடருமா’ என்று கேட்டுவிட்டு புன்னகைத்த கணமாகட்டும்…. ஒவ்வொரு கணமும் கனமானதாக இருந்தது. ‘இவ்வளவு இயல்பான மனிதனை ஊடகங்கள் எவ்வளவு மோசமாகச் சித்தரிக்கின்றன பாருங்கள்’ என்று, அந்தச் சம்பவங்களை நினைவுகூர்ந்து பா.செ. பின்னாட்களில் வருத்தப்பட்டதுண்டு. என்னுடைய பதினாறு ஆண்டுக்கால தினமணி அனுபவத்தை அறிந்ததால், அந்த வேதனையை என்னிடம் அவர் பதிவுசெய்திருக்கக் கூடும்.

எந்த நிகழ்வையும் மறவாது பதிவுசெய்வது பா.செ.வின் தனிப்பெரும் திறன். அன்றன்றைய நிகழ்வுகள் குறித்து இரவுக்குள் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வார். இது எழுத்தாளர்களாக இருப்பவர்களுடைய குணமில்லை, எழுத்தாளர்களாகவே வாழ்கிறவர்களின் குணம்.  

முல்லைத்தீவு கடலில் பெண் புலிகளாலேயே இயக்கப்பட்ட அதி நவீன பீரங்கிப் படகில் பயணித்ததையும், அந்தப் படகிலிருந்து ஒரு இலக்கை நோக்கித் துப்பாக்கியால் சுடக் கிடைத்த வாய்ப்பையும், தனக்கேயுரிய பாணியில் தன்னுடைய நூல் ஒன்றில் துல்லியமாக அவர் விவரித்திருந்தது மறக்க இயலாதது………

“செஞ்சோலைப் பெண் போராளிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், கடற்புலிகளின் படகிலிருந்து நாங்களும் சுட்டதை நினைவுபடுத்தினோம்…. 

‘நாங்களும் சுட்டோம்…. அது எங்கேயோ போயிடுச்சி’ என்றார், கவிஞர் இன்குலாப்.  

‘எங்க, இந்தியாவுக்குப் போயிடுச்சா’ என்று சட்டென்று பகடி அடித்தார் ஒரு பெண் போராளி…”  (செஞ்சோலைப்  சிறுமிகள் இல்லத்தின் ஆளுகையிலிருந்த பெண் போராளிகளுடன்)​

இத்தகைய பதிவுகள் அரிதினும் அரிதானவை. விடுதலைப் புலிகள் என்கிற இணையற்ற இயக்கத்தில் இணைந்திருந்தவர்களின் தெளிவான மனநிலையைச் சுருங்கக் கூறி விளங்க வைப்பவை. எட்டுத்திக்கிலும் ஆபத்து படர்ந்திருந்த ஒரு யுத்தக் களத்தில், அந்த அச்சம் சிறிதுமின்றி நகைச்சுவை உணர்வுடனேயே புலிகள் நடமாடிக் கொண்டிருந்தார்களென்றால், அது தாய்ப்புலியிடமிருந்து அவர்கள் கற்ற பாடம். இந்த உண்மையை எந்த மேல்பூச்சுமில்லாமல் வெளிப்படுத்துகிற பா.செ.வின் பதிவு, ஈடு இணையற்ற வரலாற்றுப் பதிவு.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2009-லிருந்து, தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு  தமிழக அரசியல் இதழில் தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். அதில் வெளியான கட்டுரைகளைப் படித்தவுடனேயே தொடர்புகொண்டு என்னை  ஊக்குவித்தவர்களில் பா.செ, தமிழறிஞர் இறைக்குருவனார் இருவரும் தமிழ் முழுதறிந்த தகைசால் பெருமக்கள். அந்த இதழை வாங்குவதற்காகவென்றே, அண்ணா நினைவு வளைவு அருகேயுள்ள ஒரு செய்தித்தாள் விற்பனையகத்துக்குப் போய்வருவதைக் கூட, ‘என்னை நடக்க வைக்கிறீர்கள்’ என்று, அவருக்கேயுரிய அதிர்வேதும் இல்லாத மெல்லிய புன்னகையோடுதான் சொன்னார் பா.செ. 

தமிழக அரசியலில் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் எஸ்.பொ அவர்களைச் சந்திக்க வேண்டுமென்று  கூறினார் பா.செ! வள்ளுவர் கோட்டம் அருகே இருக்கும் வழக்க்றிஞர் அஜீதா அலுவலகத்தில் சந்தித்தோம். அங்கே போன பிறகுதான், கொழும்பில் ராஜபக்சக்களின் பின்னணியில் நடக்க இருந்த பாரதி விழாவைத் தடுத்து  நிறுத்த பா.செ, எஸ்.பொ, தமிழறிஞர் மா.இலெ.தங்கப்பா ஆகியோர் திட்டமிட்டிருப்பது தெரிந்தது. அறிவாற்றல் மிக்க அந்த மூத்த அறிஞர்களுடன் மனப்பூர்வமாக இணைந்துகொண்டேன்.

அந்தப் பணியில் அவர்களுடன் இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பைப் பெருமையுடன் திரும்பிப் பார்க்கிறேன். சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் பெருந்திரளாக எழுத்தாளர்கள் - கலைஞர்களைக் கூட்டினோம். ராஜபக்சக்களின் பாரதி விழாவில் பங்கேற்பது பச்சைத் துரோகம் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் உணர்ச்சி பொங்க எடுத்துச் சொன்னார்கள்.  இனப்படுகொலைக் குற்றச்சாட்டைக் கூர்மழுங்கச் செய்ய பாரதி என்கிற இந்த இனத்தின் மகா கவியை முகமூடியாகப் பயன்படுத்த முயலும் ராஜபக்சக்களைக் கடுமையாகக் கண்டித்தனர். கொழும்பு பாரதி விழா மோசடி பா.செ, எஸ்.பொ கூட்டணியால் தான் முறியடிக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத வரலாறு.

தமிழக அரசியலின் பயணம் முடிந்தபிறகு, நக்கீரனுக்காக பிரத்யேகமாக ஒரு புத்தகம் எழுதினேன். அது, ராஜபக்ச குடும்பத்தினர் நேரடியாக சம்பந்தப்பட்ட 3 கொலைகள் தொடர்பானது. இலங்கைப் பத்திரிகையாளர்கள் லசந்த, பிரகீத் மற்றும் ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் ஆகியோர் படுகொலைகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய ‘ரத்த ஜாதகக் கதைகள்’ என்ற அந்த நூலை வெளியிட பா.செ அவர்களைத்தான் அழைத்தேன். உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும், புதுச்சேரியிலிருந்து அந்த நிகழ்ச்சிக்காகச் சென்னைக்கு வந்தார். அவருக்கே உரிய தெளிவான குரலில், நூலை அறிமுகப்படுத்தினார்.

இறுதிக் காலக்கட்டங்களில் அவரை நேரில் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் அவர் சென்னையில் இருந்த நிலையிலும், காலச்சூழல் மற்றும் கட்டுப்பாடுகள்  காரணமாக நாங்கள் சந்தித்துக் கொள்ள முடியாது போயிற்று. 

உண்மையான மனிதர்களை தேடிப்பிடித்தாவது சந்தித்துவிடுவது எனது வழக்கம். அப்படியொரு அரிய மனிதர் பா.செ! அவரை அடிக்கடி சந்திக்கிற தருணங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகிறேன். அறிவிலும் வயதிலும் அனுபவத்திலும் என்னைக் காட்டிலும் மூத்தவரான அந்த மானுடப் போராளியை அடிக்கடி சந்தித்திருந்தால், இன்னும் கொஞ்சகாலம் அவரை இருக்க வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பா.செ, இன்குலாப், புலமைப்பித்தன் - போன்ற உண்மையான விடுதலை விரும்பிகளுக்கு  பிரபாகரனின் அடையாள அட்டை ஒருபோதும் தேவைப்பட்டதில்லை. பிரபா படத்தை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்தியதில்லை. தங்கள் சொந்தத் தாய் மண்ணுக்காகப் போரிட்ட புலிகளின் வீரத்தையும், அவர்கள் இதயத்தில் இருந்த ஈரத்தையும் தமிழ் மக்களிடையே எடுத்துச் சொல்ல  வேண்டிய கடமையைத் துல்லியமாக நிறைவேற்றினார்கள், அந்த பிரபாகரனின் தோழர்கள். அந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்றிய பிறகே அவர்களது பயணம் முடிந்திருக்கிறது. அந்தப் பெருமிதத்துடன்தான் அவர்கள் விடை பெற்றிருக்கிறார்கள். 

இன்குலாப், புலமைப்பித்தனைத் தொடர்ந்து பா.செ.வும் விடைபெற்றிருக்கிறார்…..

சென்று வாருங்கள் பா.செ……

பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தோழர் - என்கிற நிகரற்ற அடையாளம் எத்தனைப் பேருக்குக் கிடைத்துவிடப் போகிறது…….

சென்று வாருங்கள் பா.செ..! 

புகழேந்தி தங்கராஜ், 27 Oct, 2022

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை