பேனா

சீன மூலம்: அய் - குங்                

ஆங்கில வழி தமிழில்:  சூரியதீபன்

மனஓசை:  ஆகஸ்டு 1986


அந்தப் பேனாவை

நீண்டநேரம் நோக்கினேன்

அதனிடம் நான் கேட்டேன்


'என்ன வகைப் பிறவி நீ?'


பேனா அழகு காட்டியது -

ஒரு பதிலும் சொல்லாமல்.


என் மனதில்

கடந்த கால நினைவுகள் ஓடின.


ஒரு உழவன் சொன்னான்

'இந்த பேனா

ஒரு கலப்பையையினும்

கனமாயிருக்கிறது'.


அந்தப் பழம்பெரும் விவசாயி,

பேனா தன் விரலிடுக்கிலிருந்து

தப்பித்துவிடும் போல் பயந்து

இறுகப் பற்றி,

கோடு கோடாய்க் கிழித்தான்.


கடைசியில் தாளும் கிழிந்தது.


ஒரு பேராசிரியன்,

பேனாவை ஏந்தினான்

அது அவனுடைய கைகளில்

வளர்வது போல தோன்றியது.


ஒரு கையில் சிகரெட்டுடன்

பேனா முனையில்

காற்று சுழன்று அடிப்பது போல்

சிந்தனைகளை லாவகமாய்ச் சுழற்றினான்.

ஆனால் அவன் எழுதியது என்னவென்று

யாருக்கும் தெரியாது.


ஒரு தூரிகையின் முனை,

ஓநாயின் மெல்லிய ரோமத்தால்

செய்யப்படுகிறது.


ஆனால், ஒரு கத்தியைப் போல்

எதிரியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பாயும்.


ஒரு பேனாவின் முனை உலோகத்தால்

செய்யப்படுகிறது.


ஆனால்,

சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளை

'எம்பிராய்டரி' செய்யும் ஊசி போல்

பூவேலை செய்யும்.


பேனா முனையின் கோடுகள்

பல இதயங்களை வளைத்திருக்கிறது.


ஆயிரக்கணக்கான மக்களுக்கான

கண்ணீர்,

அந்த முனையில் வடிகிறது.


அதை குற்றங்களைப் பதிவு செய்யப்

பயன்படுத்தலாம்;

சுரண்டல் குபேரர்களை துதிபாடப்

கையில் ஏந்தலாம்.

வலிமை மிக்க எதிரியை கழற்றி எறியப்

பயன்படுத்தலாம்.


பாருங்கள்

அந்தக் காகிதத்தில்

உலகின் நெருப்பும் புகையும்!


பாருங்கள்

அந்தப் பேனா அடியில்

குமுறும் கடல் அலைகளும்,

கர்ஜிக்கும் மேகங்களும்!


அது நேராக இருந்தாலும்,

யுத்தங்களின் முதுகில்

சாட்டை விளாசுகிறது!


நான் கடைசியில் கண்டுகொண்டேன்.

அந்தப் பேனா -

அதற்கு உணர்ச்சியோ, விருப்பமோ, ஆற்றலோ

எதுவும் இல்லை.

எழுதுகிறவனின் கையிலேதான்

எல்லாம்.

அந்தக் கடல்களும், மேகங்களும்,

நெருப்பும், புகையும் எல்லாம்!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்