மக்களின்‌ கண்களால்‌

பகிர் / Share:

(1989ல் வெளியான இன்குலாப்‌பின் "யாருடைய கண்களால்" புத்தக முன்னுரை) 1989 சனவரி 1-ந்‌ தேதி டெல்லி கார்பெட்‌ பூங்காவில்‌ அவருக்கெனத்‌...

(1989ல் வெளியான இன்குலாப்‌பின் "யாருடைய கண்களால்" புத்தக முன்னுரை)


1989 சனவரி 1-ந்‌ தேதி

டெல்லி கார்பெட்‌ பூங்காவில்‌ அவருக்கெனத்‌ தனியாக தயாரிக்கப்பட்ட சிறப்புப்‌ பொமுது போக்கு நிகழ்ச்சிகளை, தனது பரிவாரங்களுடன்‌ ரசித்துக்கொண்டிருந்‌தார்‌ இந்தியாவின்‌ இளைய பிரதமர்‌.

அதே பொழுதில்‌ தொழிலாளர்கள்‌ நிறைந்த டெல்லி காசியாபாத்‌ பகுதியில்‌, வீதி நாடகத்தில்‌ மக்கள்‌ பிரச்னைகளை உணர்ச்சிப்‌ பிரவாகமாய்‌ வழங்கிக்கொண்டிருந்‌தார்கள்‌ சப்தர்‌ ஹஸ்மியும்‌ அவரது கலைஞர்களும்‌.

சப்தர்‌ ஹஸ்மி கொலை செய்யப்படுகிறார்‌.

ஒருவர்‌, இந்தியாவை 21-ம்‌ நூற்றாண்டுக்கு அலக்‌காகத்‌ தூக்கிக்கொண்டு போவதாகப்‌ பிரகடனம்‌ செய்த பிரதமர்‌.

"எனது நாடகங்கள்‌ மூலம்‌ போராடும்‌ அமைப்புகளுக்கு மக்களைக்‌ கொண்டு வருவேன்‌" என்று அறிவித்தவர்‌ ஹஸ்மி.

மக்கள்‌ நீந்திக்‌ கழிக்கவென இருந்த நீர்த்தடாகத்தை, ஏகாதிபத்திய முதலைகளின்‌ நீச்சல்‌ குளமாக மாற்றிய பணியை வேகமாக முடுக்கிவிட்டிருப்பவர்‌ ஒருவர்‌.

உற்பத்தி சாதனங்கள்‌ அனைத்தும்‌ உழைப்‌பவர்களுக்குப் பொதுவுடைமையாக்கல் வேண்டும் என்று விரும்பிய ஹஸ்மி,

'மகாபாரதம்‌, இராமாயணங்களை' எலக்ட்ரானிக் புராதணங்களாக  மாற்றியதிலிருந்து, குடும்பம்‌ வரை ஏகாதிபத்திய கலாச்சாரமாக மாற்றி வாழ்ந்தும்‌ கொண்டு ஓருவர்‌,

“வாழ்வுக்கு எது முக்கியமோ, அதைத்‌ தேர்ந்தெடுத்து அதிலேயே என்னை முழுமையாக ஈடுபடுத்‌திக்கொள்ளப் போகிறேன்‌ என்று தான்‌ வகித்த அரசுப் பணியை உதறிய பின்‌ மக்களின்‌ குடும்பக்‌ கலாச்சாரத்தோடு ஒன்றிப் போனவர்‌ ஹஸ்மி. 

புதிய ஜவுளிக்‌ கொள்கை, புதிய ஆலைக் கொள்கை என்று நிறைய புதியதுகளை அறிலித்து, இயந்திரச் சக்கரங்களுக்குக் கீழே தொழிலாளர்களை நசுக்குகிற ஒருவர் -

சக்கரங்களைக்‌ கீழே வைத்து, தொழிலாளர்களை மேலே வைத்து 'சக்கரங்கள்‌ நசுக்கப்படுகின்‌றன' என்று நாடகம்‌ செய்த ஹஸ்மி

இந்தத்‌ தரம்‌ பிரித்தல்‌, நமக்கு என்ன சொல்கிறது?

இந்தியாவின்‌ இளைய பிரதமர்‌ கண்டுகளித்த 'கார்பெட்‌ பூங்கா' நாடகமும்‌, காசியாபாத்‌ தொழிலாளர்ககளின்‌ வீதிகளில்‌ ஹஸ்மி நடித்த நாடகமும்‌, வெறும் இருவேறு தனித்தனி நிகழ்ச்சிகள்‌ அல்ல; இருவேறு காலாசாரங்களின்‌ பிரதிபலிப்பு என்பதுதான்‌.

"21-ம்‌ நூற்றாண்டுக்‌கு இந்தியாவைக்‌ கெண்டு செல்வேன்" என்று ஒருவர்‌ அறிவித்ததும்‌;

"எனது நாடகங்கள் மூலம் போராடும் அமைப்புகளுக்கு நெருக்கமாக மக்களைக்‌ கொண்டுவருவேன்‌'' என்று ஹஸ்மி தெரிவித்ததும்‌

வெறும்‌ அறிக்கைகள்‌ அல்ல; இருவேறு வர்க்கங்களின்‌ அணிவகுப்பு.

வரலாற்றின்‌ ஒவ்வொரு குறிப்பிட்ட கட்டத்திலும்‌ ஒரு குறிப்பிட்ட வர்க்கமானது வரலாற்றை முன்னோக்கி நகர்த்துகிறது. மற்றொரு வர்க்கம்‌ அதைத்‌ தடுத்து நிறுத்த முயல்கிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றில்‌, வளர்ச்சி என்ற முனையிலிருந்து பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட வர்க்கம்‌ மக்களாகவும்‌, மற்றொரு வர்க்கம்‌ மக்களின்‌ எதிரியாகவும்‌ மாறுகின்றன.

சம்பவங்கள்‌ வெறும் சம்பவங்களாக அல்லாமல் அதற்குள் ஊடாடுகிற வர்க்கச்சரடும், செய்திகள் வெறும் செய்திகளாக அல்லாமல் அதன் பின்னுள்ள சொல்லாத சேதிகளும் நமக்குக்காட்டுபவை அதுதான்; கூடவே அதை உணர்வுப் பூர்வமாக மக்கள் மேடையில் வைத்து அணி திரட்டி முன்னெடுத்துச் செல்வதால் மட்டுமே காரியம் சித்தியாகிறது.

“மண்‌ மீது ஒரு கனவு" என்று வர்ணிக்கப்பட்ட தாஜ்மகால்‌, புரட்சி பண்பாடிய நெரூடா, இப்போதும் உச்சரித்தபடி வாழும் நீக்ரோ விடுதலை போராட்டங்கள், போராளிகள், மக்கள் கலைஞர்கள், சனாதனிகள் என்று எல்லா விசயங்களுக்கும்‌ மேம்போக்கான ஓரு பார்வை உண்டு. உள்ளீடான குறுக்கு வெட்டுத்தோற்‌றம் ஒன்றுண்டு. வர்க்க நிகழ்வை உந்திச்‌ செல்லும்‌ புதிய கண்களால்‌ பார்த்து, புதிய பேனாவால்‌ குறுக்‌குவெட்டுத் தோற்றத்தை இன்குலாப்‌ தீட்டி இருக்கிறார்‌.

காலாவதியாகிப போன பழமைக்குப்‌ புத்துயிரூட்ட பொற்காலப்‌ போதைகள்‌ அள்ளித்‌ தெளிக்கப்படுகின்றன.

துருப்பிடித்துப்போன பழைய கலாச்சார ஆயுதங்களை மேலெடுத்து வருகிறார்கள்‌. இரண்டாயிரம்‌ மூவாயிரம்‌ ஆண்டுகளுக்கு முந்திய ஆதிக்க உறவுகளை முன்னிறுத்‌தி சங்ககால இலக்கியங்கள் புதிய தமிழ்ச் சமூகத்துக்கான கலாச்சார அச்சுகளாகக் காட்டப்படுகின்றன. சங்ககால உடமையாளரின் காதல் வாழ்கை இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கல்லறையிலிருந்து எழுப்பப்பட்டு நடமாட விடப்படுகின்றன.

கனகவிசயனின் தலையில் கல் சுமக்க வைத்த ஆதிக்க வெறி இங்கே வீரக் கனவுகளாக விரிக்கப்படுகின்றன. தமது இன விடுதலைக்கெனப்‌ புரவி ஏறி வாளேந்தி வரும்‌ கரிகாலர்களுக்காகக்‌ காத்திருப்பது என்ற நிரந்தரக்‌ கனவுநிலைகளை உருவாக்க முயல்கிறார்கள். பழைய அடிமை நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின்‌ தத்‌துவங்கள்‌ நம்பிக்கைகள்‌, கடவுட்கோட்பாடுகள்‌ சிந்தனை முறைகளை மீண்டும்‌ சவக்குழிக்கு மேலே எடுத்துவந்து பூச்சூட்டி நடமாட விடுகிறார்கள்‌.

'பிணத்தைத்‌ தொட்டிலில்‌ போட்டுத்‌ தாலாட்டுவது போல' என்று இதை இன்குலாப்‌ சொல்கிறார்‌.

மற்றவகள்‌ பழமையை உணர்வதற்கும்‌ ஒரு மக்கள்‌ கலைஞன்‌ பழமையைத்‌ தீண்டுவதற்கும்‌ அவர்களின்‌ கண்ணோட்டம்‌ வேறுபட்ட அளவுகோலாகிறது,

"நிகழ்காலத்தை நம்பிக்கையோடு பார்த்த நெருடாவிற்கு இயற்கையின்‌ சுவடு ஒவ்வொன்றிலும் இறந்த காலமும்‌ கதை சொல்லிக்‌ கொண்டிருந்தது. ஓடும் 'பையோ பையோ' நதி தனது ரகசிய நாச்குகளால்‌ பேசுவதை அவரால்‌ கேட்க முடிந்தது. பூமியின்‌ கனிம ரகசியங்களைத்‌ தேடி, சுரங்கங்களில்‌ புதையுண்டு போனவர்களின் பெருமுச்சையும்‌ கண்ணீரையும்‌ அவர்‌ தொட்டு உணர்ந்தார்‌. இருளில்‌ மூழ்கிய ஆன்மாக்களின்‌ ஒலங்களை அவர்‌ குரல் ஓலித்தது" (பக்கம்‌ 23) என்று நெருடா உணர்ந்ததும்‌ இத்தகைய நோக்கில்தான்‌.

"நம்‌ கண் முன்‌ நிறுவப்பட்ட அதிசயங்களும்‌, அவற்றைச்‌ சுற்றிப்‌ பின்னப்பட்ட கதைகளும்‌ நம்‌ விழிகளை விரியவைத்த அதே சமயத்தில்‌ மூளையை முடமாக்கின. எல்லா அதிசயங்களுக்குப்‌ பின்னாலும்‌ ஒரு மறைக்கப்பட்ட வரலாறு உண்டு, இப்பொற்காலத்‌ திரைகளை நெருடாவின்‌ பேனாமுனை கிழித்தது" (பக்‌-25).

தாஜ்மகால்‌, தஞ்சைப்‌ பெரிய கோயில்‌ போன்ற விழிகொள்ளாப்‌ பிரம்மாண்டமான அதிசயங்களை யாரோ ஏற்கனவே நமக்குத்‌ கொடுத்த கண்களால்‌ அல்ல; இதுவரை நமது பாடப்‌ புத்தகங்களால்‌, நமது பெற்றோர்‌களால்‌, ஆசான்களால்‌, புலவர்களால்‌ அரசியல்‌ பெருந்‌தலைகளால்‌ கொடுக்கப்பட்ட கண்களால்‌ அல்ல; நமது சொந்தக்‌ கண்களால்‌ -

"தரையின்‌ கனவான தாஜ்மகாலில்‌

மும்தாஜை மூடிய சமாதிக்கு முன்‌னால்

எமது எலும்புகள்‌ இறைந்து கிடக்கின்றன"

என்று நோக்குகிற பார்வை நெருடாவிலிருந்து இன்குலாப்‌ வரை விரிகிறது.

அதற்காக இந்தப்‌ பழைய அதிசயங்களை, சின்னங்களை இடித்துத்‌ தரைமட்டமாக்க வேண்டுமா? அல்ல; இந்தப்‌ பொற்காலச்‌ சாதனைகள்‌ பற்றிய பழைய கருத்துகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதுதான் கருத்துக்கள்‌, பார்வைகள்‌ தூள்‌ தூளாக்கப்படுகிறபோது புதிய செயலூக்கத்திற்கான வெளிச்சத்தை மக்கள் பெறுகிறார்கள்.

மக்களுடைய படைப்பாற்றல்‌ அதிசயமானதுதான். ஒரு ராஜனின் காதலுக்காக, சரியான விதத்தில் சாந்துக் கலவை செய்தவன்‌, கரணம்‌ தப்பினால்‌ மரணமாய்‌, ஒவ்வொருமுறையும்‌ சாந்துக்கலவையை மேலேற்றிய உழைப்பாளி பெண்கள்‌, கட்டிடக்கலை வரைபடம் தந்த கலைஞன் என்று மும்தாஜின்‌ சமாதி முதல்‌ தாஜ்மகால்‌ உச்சி வரை, மனிதனின்‌ படைப்பாற்றல்‌ மகத்தானது.

"ஆனால்‌ அது சகமனிதனுக்காகப்‌ பயன்பட வேண்டும்‌. மனிதனை சுரண்டுபவர்களுக்காக அல்ல"


***


மக்களுக்கென்று ஒரு மரபு இருந்திருக்கின்‌றது. அது பழமையானது சிறப்பானது. வீரம்‌ மிக்‌கது. அந்த ஏடுகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டன. ஒளித்துவைக்கப்பட்டன. அத்தகைய வீரம் செறிந்த பக்கங்களையெல்லாம் பொற்கால போதைகளுக்கு எதிராக நிறுத்துவது அவசியம்‌:

50-களில்‌ சங்ககால காட்சிகளை மேலே கொண்டு வருகிற வேலைகள்‌ துரிதப்படுத்தப்பட்டன. சங்ககாலக் காட்சிகள்‌ அகம்‌, புறம்‌, காதல்‌, வீரம்‌ என்று சமகால வாழ்க்கைக்குப்‌ பொருத்தித்‌ தீட்டப்பட்டன. உயர்வு நவிற்சியாக மு.வ முதல்‌ பல பேராசரியர்களும் செய்தனர்‌. பேராசிரியர்களின்‌ 'சங்ககால விருந்து' மேசையிலிருந்து சிதறிய பருக்கைத்‌ துளிகளை, திராவிட முன்னேற்றக்‌ கழகத்தினர்‌ கொத்தித்‌ தின்று துப்பிப்பரப்பினர்.

இன்று சங்ககால அலை ஓய்ந்து, ஓரம்‌ ஓதுங்காவிட்டாலும்‌, கலாச்சாரத்‌ தாக்கம்‌ இன்னும்‌ தலைகாட்டாமல் இல்லை - இன்குலாப்‌பின்‌ எழுத்துக்களில்‌ அந்த 'பொற்காலப்‌ போதை'யின்‌ சித்திரங்கள்‌ வருகின்றன. ஆனால் அவை - சங்ககாலக்‌ காட்சிகள்‌ முதல்‌ சமகாலக் காட்சிகள் வரை, மக்களின்‌ மரபில்‌ ஆராயப்படுபவைதான் இன்குலாப்‌ எழுத்துக்கள்‌.

அதன்‌ வழி மக்களுடைய சிந்தனைக்‌ கருவூலத்தைக்‌ தொட்டு, உயிர்ப்பிக்கச்‌ செய்கிறோம்‌. நமது சிறப்புமிக்க வரலாற்றிலே உள்ள புரட்சிகரமான படிப்பினைகளோடு, இன்றைய கடமைகளை இவட்சியத்தெளிவோடு உணர்ந்துகொள்ளச்செய்ய முடியும்‌.

'ஸ்பார்ட்டகஸ்‌' முதல்‌ சோழர்கால உழவர் கலகங்கள்‌ வரை, நீக்ரோ வீடுதலைப்‌ போராட்டம்‌ முதல்‌ தெலுங்‌கானா வரை இப்படி இன்குலாப்‌ தொட்டு விவரிப்பதெல்‌லாம்‌ இந்த நோக்கில்தான்‌.

மனிதன்‌ தன்‌ வாழ்க்கையின்‌ துவக்கத்தில் வாழ்க்கையை அமைத்துக்ககொள்ளும்‌ பொருட்டு, இயற்கையை எதிர்த்து போராடினான்‌. இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்தி அவற்றை வாழ்க்கைக்குப் பொருத்தமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டான். ஏங்கெல்ஸ் சொல்வதுபோல் "ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையுள்ள மானிட நாகரிகத்தின் வளர்ச்சி முழுவதுமே, இயற்கைச் சக்திகள் மீது மனிதன் பெற்றுள்ள வெற்றிகள் பற்றிய வரலாறுதான்". ஆனால் இயற்கையை மாற்றுவதற்காக மனிதரின் கூட்டு முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் வழிமுறைகள், மனிதர்களிடையே குறிப்பிட்ட உறவை உருவாக்குகின்றன. கூட்டு உடமை அல்லது சமுதாய உடமை மறைந்து தனி உடமை உருவாகிறது. இந்நிலையில் இயற்கைக்கு எதிராகச் சமுதாயம் முழுவதும் ஒரே மனிதனாக நின்று போரிட்ட தன்மை மாறுகிறது. பதிலாய் சமுதாயத்துக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கும் போராட்டம் முதன்மை பெறுகிறது. இதைத் தீர்த்தாலொழிய மனித வாழ்கை செப்பமடையாது என்ற நிலை இப்போது மனித வாழ்க்கைக்கான போராட்டம் வேறு திசைமுனை கொள்கிறது. இயற்கைச் சக்திகளுக்கும் மனிதனின் உழைப்புப் சக்திகளுக்குமிடையே இருந்து வந்த போராட்ட வாலாறு இப்போது வர்க்கப் போராட்டமகா மாற்றம்‌ பெறுகிறது.

வர்க்க சமுதாயத்தின் தோற்றத்திற்குப் பிறகு, கூர்மையடைந்த வர்க்கப் போராட்டத்தின் மூலம் தான் வரலாற்றை முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டியுள்ளது. இந்த வரலாற்றை உருவாக்குபவர் மக்கள்.

ஏற்கனவே நடந்த வரலாறுகளை அல்லது உடமை வர்கத்தின் மூளைகளால்‌ தீட்டித்தரப்பட்ட சித்திரங்களை விளக்குவது மட்டுமல்ல; இன்‌றைய கால கட்டத்‌தில் வர்க்கப்‌ போரட்டத்தை முன்னெடுத்துச்‌ செல்வதற்கான சமுதாய நிகழ்வுகளை விளச்குதலும் அவசியமானதாகும்.

அதற்கான சகல ஆயுதங்களையும்‌ எல்லாத்துறைகளிலும்‌ தயார்‌ செய்ய வேண்டியுள்ளது. இதுவரை தத்துவம்‌ என்ற பெயரில்‌ இழுத்துவிடப்படும் திரைகளை, வரலாறு என்று வரையப்பட்ட சித்திரங்களை - இதுவரை சொல்லாமல்‌ விடப்பட்ட மக்களின்‌ மரபுகளை - எல்லாவற்றின்‌ மீதும்‌ புது வெளிச்சம்‌ தந்து தயார்‌ செய்ய வேண்டியுள்ளது.

இந்த நூல்‌ இவ்வகையில்‌ மூன்று பகுதிகளாக, அதன் விசயப்‌ பகுப்புத்தன்மைகளால்‌ பிரிகிறது எனலாம்‌,

  1. பொற்காலப்‌ போதைகளை எதிர்த்த சாட்டை வீச்சு.
  2. நிகழ்கால அரசியல்‌, சமூக நிகழ்வுகள் பற்றிய விமர்சனம்‌.
  3. கலாச்சாரம், கலை இலக்கியங்கள் பற்றிய ஒளி பாய்ச்சல்.

ஒரு கவிஞன் கவிஞனாக மட்டும்‌ நின்றுகொண்டிருந்த காலம்‌ கடந்து போய்விட்ட து. அவன்‌ மக்கள்‌ பணியாளனாகவும்‌ விரிவுபடுத்திக்‌ கொள்ளவேண்டிய வேளை வந்துவிட்டது. அப்போது கவிதை என்ற கூடு மட்டும்‌ அவனுக்குப்‌ போதும் என்றிருந்த 'தன்மோகச்‌' சீராட்டுதல்‌ தூக்கியெறியப்படும்‌. மக்களுக்கான பணிகளை எடுத்துச்‌ செல்கிறபோது பல்‌வேறு வடிவங்களை ஏந்துவது தவிர்க்கமுடுயாததாகிறது.

'மனுசங்கடா நாங்க மனுசங்கடா' பாட்டை இன்குலாப்‌ எழுதி மேடையேறிப்‌ பாடியதும்‌ இதனால்‌ தான்‌. பேச்சாற்றல்‌ மிக்கவராக, இப்போது எழுத்தாற்‌றலைக்‌ கட்டுரை ரூபத்துக்கு விரித்திருப்பதும்‌ இந்த அவசியத்தால்தான்‌.

முதன்முதலில்‌, சமுதாயக்‌ காட்சிகளை சமுதாயப் பார்வைகளாக, பத்திரிகைகள்‌ மூலம்‌ வெகுஜன ரூபத்துக்கு எடுத்துச்‌ சென்று காட்டியவர்‌ இன்குலாப்‌. இந்தப்பணி தமிழில்‌ இன்னும்‌ விரிந்து செய்யப்பட வேண்டும்.

- சூரியதீபன்‌, 1989

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content