பா.செயப்பிரகாசமும் சூரியதீபனும்


(காக்கை சிறகினிலே - டிசம்பர் 2022ல் வெளியான கட்டுரையின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம்.)

இது என் முதல் கட்டுரை. நான் எழுதும் முதல் கட்டுரையே என் தந்தையின் நினைவு கட்டுரையானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவரை பற்றி (என் பார்வையில்) நான் புரிந்து கொண்ட விடையங்களை  நினைவுகளாக பகிர்ந்துகொள்வது, என் தந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமையாக கருதுகிறேன்.

அப்பாவுக்கு விடியர் காலையில் எழுந்திருக்கும் பழக்கம் உண்டு. அதிகாலையின் அமைதியில் பால்கனியில் காலையை ரசித்தபடி எழுதுவது அவருக்கு மிகவும் பிரியம். மழை பெய்தால் இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் இருப்பார். அதிகாலை நேரங்களில் அவர் எழுதுவது அல்லது புத்தகம் படிப்பதை வழமையாக கடைசி வரை கொண்டிருந்தார். அவர் கடைசி நேர்காணலும் அவ்வாறே அவர் மறைந்த அன்று காலை செழுமை செய்து எனக்கு அனுப்பியிருந்தார். 

காலை எழுத்து பணி முடிந்ததும் சிறிது தூரம் நடைபயிற்சி செல்வது, குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது, வாங்கி வந்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் அடுக்குவது, கீரையை சமையலுக்கு ஆய்ந்து தருவது, அதன் பின் அலுவலகம் செல்வது என அவர் வாழ்வில் ஒரு ஒழுங்கை கடைசி வரையிலும் கூடுமான வரை கடைபிடித்தார். வாரக் கடைசியிலும் அதே ஒழுங்கு அவரிடம் இருக்கும்.

அரசு பணி காரணமாக 'சூரியதீபன்' என்ற புனைபெயரில் எழுதிய அவர் அதையே எனக்கு சூட்டி மகிழ்ந்தார். என் பால்ய வயதில் அவர் அரசு வேலையை சில காலம் இழந்து என் குடும்பம் வறுமையில் வாடியதை என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். எனக்கு வீட்டில் இட்லி செய்து கொடுக்க வசதி இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து 2 இட்லி வாங்கி வந்ததாகவும் அம்மா கூறுவார். வீட்டில் மாடு வைத்து, பால் கறந்தே அப்போது ஜீவனம் நடந்தது.


அலுவல் பணி

அலுவலக வேலைகள் அவரின் நேரத்தை பெருமளவு எடுத்து கொண்டது. மாதத்தில் சில நாட்களேனும் அலுவல் சம்பந்தமான வெளியூர் பயணம் செய்ய வேண்டி இருந்தது. இப்பயணங்களை அவர் அலுவலக பணிகளுக்கு அப்பால் - தன் இலக்கிய தோழமைகளையும், உறவினர்களையும், சொந்த ஊர் காணவும், தன் எழுத்துக்கான கருவை தேட, பல தரப்பட்ட மக்களை சந்திக்க என பயன்படுத்திக் கொண்டார். ஜூனியர் விகடனியில் தொடராய் வெளிவந்த தெக்கத்தி ஆத்மாக்கள் கட்டுரைகளையும் அவ்வாறே எழுதினார். அப்பயணங்களிலும் அதிகாலை எழுந்து எழுதுவது அல்லது படிப்பதை அவர் தவறவில்லை. இப்படி பயணம் செய்து கொண்டே இருப்பது அவருக்கு கடைசிவரை (எலும்பு முறிவு அடைந்த பின்னும்) ஒரு இயல்பாய் போனது. அவர் எப்போது வெளியூர் சென்றாலும், அவ்வுரில் கிடைக்கும் நொறுக்கு தீணிகள்  (மதுரை / திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சேவு), வத்தல்கள்  (கொத்தவரங்காய், சுண்டைக்காய்), பழங்கள் என எங்களுக்காக ஏதேனும் வாங்கி வர தவற மாட்டார். அதே போல் அவர்  எங்களை பல வெளியூர் பயணங்களுக்கு உடன் அழைத்து சென்றுள்ளார்.

தொடர் அலுவல் ஓட்டம் காரணமாக அவர் அடைந்த பாதகங்களும், குடும்பத்தாரிடம் செலவு செய்ய நேரமின்மை மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது பற்றி அவர் அப்போது  உணர்ந்திருந்தாரா என தெரியவில்லை. ஒருமுறை அலுவலக பயணம் சென்ற போது பேருந்து விபத்துக்குள்ளாகி சில காயங்களுடன் உயிர் தப்பினார். இன்னொரு முறை பெங்களூருக்கு அலுவலக பயணமாக சென்ற போது, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். மன அழுத்தம் தரும் அந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்ற போது மிகுந்த மகிழ்ச்சி கொண்டு "இன்று நான் பிறந்தேன்" எனும் கவிதையை எழுதினார்.


இலக்கிய பணி 

அலுவலக நேரம் போக மீதி நேரங்களில் முடிந்தவரை இலக்கிய மற்றும் சமூக  செயற்பாட்டு பணிகளை மேற்கொண்டார். என் சிறு வயதில் பல நேரங்களில் அவருடன் சேர்ந்து போராட்டங்களுக்கு செல்வது (போபால் விஷவாயு, ஈழ போராட்டங்கள்), அவர் சார்ந்த இடதுசாரி கட்சி கூட்டம் மற்றும்  மாநாடுகளுக்கு சென்று பணியாற்றுவது (உண்டியல் ஏந்தி நன்கொடை வசூலிப்பது, கட்சி புத்தகங்கள் மற்றும் மனஓசை, கேடயம் பத்திரிகை விற்பது), மனஓசை பத்திரிகை வெளியாகும் போது அவற்றை தபால் கவரில் போட்டு, முகவரி & ஸ்டாம்ப் ஓட்டுவது, அவர் மனஓசை ஆசிரியர் குழுவுடன் எங்கள் வீட்டில் நடத்தும் கூட்டங்களை வேடிக்கை பார்ப்பது, அவர் தோழமைகளுடன் விளையாடுவது என என் பால்யம் கழிந்தது. இளமுருகு என்ற பெருமாள் முருகனும், எப்போதும் எங்களுக்கு அன்புடன் மிட்டாய் வாங்கி வரும் பாரதிபுத்திரனும், பஞ்சுவும், சுரேஷ் என்ற சினிவாசனும், இன்குலாபும், இன்னும் பலரும் எங்களுக்கு மாமா என்று அழைக்கும் சொந்தமாகினர். 

அவர் நிறைய புத்தகங்களை வாங்கி படித்து கொண்டே இருப்பார். வீட்டு அலமாரியில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எப்போதும் நிறைந்திருக்கும் (கேசட் டேப் வெளியான காலங்களில் நாட்டுப்புற பாடல் தொகுப்புகளை நிறைய சேகரித்து வைத்துக் கேட்டு மகிழ்வார்). அதே போல் தன் கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்களையும், அனைத்து மனஓசை இதழ்களையும் கடைசி வரை சேகரித்து வைத்திருந்தார் (ஒரு எழுத்தாளனுடைய பெரும் சொத்தே அவை தானே). அவர் சேகரித்த புத்தகங்களை பல சமயம் எலி அல்லது கரையான்கள் அரித்து விடும். அப்போது எல்லாம் அனைத்து புத்தகங்களையும் எடுத்துப்போட்டு சுத்தம் செய்து காப்பாற்றுவார். சில மாதங்களுக்கு ஒரு முறையேனும் புத்தகங்களை தூசி தட்டி அடுக்குவார். அதே போல் மற்றவர்களுக்கும்  ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொடையாக கொடுத்தார்

அவர் எப்போதும் எழுத்தை பற்றியே சிந்தனை கொண்டிருந்தார். அதனால் என் பால்ய வயதில் அவர் வாகனம் ஓட்டும் போது எழுத்து சிந்தனையிலேயே வாகனத்தை ஓட்டி பெரும் விபத்துக்கு உள்ளாக இருந்தார் என என் அம்மா சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன். அதனால் அப்போதிருந்தே அவர் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கலானார்.  


குடும்ப வாழ்வு 

ஒரு குடும்ப தலைவனாகவும், தந்தையாகவும் அவர் தனக்கு தெரிந்த / இயன்ற வரையில் தன் கடமையை செய்தார் என நான் கருதுகிறேன்.  என் பள்ளி பருவத்தில் அப்பா தான் எனக்கு தமிழ் இலக்கண பாடங்களை எளிதாக சொல்லி கொடுத்து தெளிவுபடுத்துவார். ஆனால் பெரும்பாலும் அவரால் குடும்ப வாழ்வின் தேவைகளை, குடும்ப உறவுகளின் போக்கை முழுதாக புரிந்து கொள்ளவோ அல்லது அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கவோ தெரியவில்லை. அவருடைய கொடை குணமும், பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லாமையும், பல்வேறு உறவுகளின் தவறான வழிகாட்டுதல் / குறுக்கீடுகளும், குடும்பத்தில் பல பிரச்சினைகள் உருவாக்கியது. அப்பிரச்சினைகளை சரியாக கையாள அவருக்கு தெரியவில்லை. அதை அவர் உணர்த்திருப்பது அவரின் கடைசி நேர்காணலில் தெரியும். 

அரசு அதிகாரியாக அவர் நல்ல சம்பளத்தில் இருந்த போதும், மாத கடைசியில் கடன் வாங்கி குடும்பம் நடத்தும் நிலையிலேயே நாங்கள் இருந்தோம். பல சமயங்களில் வீட்டில் உள்ள கட்டில், மளிகை பொருட்கள் உட்பட அனைத்தையும் வீட்டில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் பிறருக்கு கொடுத்து விடுவார். நாங்கள் வாடகை வீட்டில் குடி இருந்த போதும் பல பேருக்கு வீடு கட்ட பண உதவி செய்வார். அதனால் வீட்டில் பல முறை பிரச்சினை எழுந்ததுண்டு. ஆனாலும் அவர் சக மனிதர்களின் பால் கொண்டிருந்த அன்பாலும், எளிதில் இளகும் மற்றும் வெகுளியாய் நம்பும் குணத்தாலும் கடைசிவரை அவரின் போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார். 

என் காதலையும், திருமணத்தையும், என் குடும்பத்தையும் அவரால் கடைசிவரை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நான் கருதுகிறேன். என் திருமணத்திற்கு பிறகு என் குடும்பத்துடன் பழக, அவரை பல முறை சிங்கப்பூர் அழைத்து வந்தேன். மேலோட்டமாக பிரச்சினைகள் இல்லாத மாதிரி தெரிந்தாலும், அடி ஆழத்தில் அது அப்படியே இருப்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.  

பேர பிள்ளைகள் வந்தால் இவை எல்லாம் மாறும் என நான் கருதினேன். ஆனால் பேர பிள்ளைகள் வந்த பின்பும், நான் சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பி வந்து வாழும் காலகட்டத்திலும் எங்களுள் இருந்த இடைவெளியும், பிரச்சினைகளும் தொடர்ந்து அதிகமாகி ஒரு கட்டத்தில் என் குடும்பத்துடன் உறவுகள் முறிப்பட்டு, பல காலம் பேச்சுவார்த்தை அற்று போனது. 

நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது தொடங்கிய குடும்ப பிரச்சினைகள் மேன்மேலும்  அதிகமாகி, விரிசல் விழுந்து பிற்காலத்தில் குடும்பம் பிளவுபட்டு திசைக்கு ஒருவராக (அவர் புதுச்சேரிக்கும், நான் மீண்டும் வெளிநாடு) செல்லும்படியானது. புதுச்சேரியில் அவர் அண்ணன், அண்ணியின் அன்பின் நிழலில் அப்பா அடைக்கலம் ஆனார். அவர்களும் அவரை எந்தவித குறையும் இல்லாமல் தங்கள் குடும்பத்தில் ஒருவராக அரவணைத்து கொண்டார்கள். அவர் புதுச்சேரியில் இருந்த நாட்கள் அவருக்கு மிக மகிழ்ச்சிகரமானதாகவும், மனதுக்கு நிறைவாகவும் இருந்தது. கிரா, பஞ்சு மற்றும் பல இலக்கியவாதிகளின் அருகாமையும் அவருக்கு பெரும் ஊக்கமாகவும், பல படைப்புகளை படைக்கவும் உதவி புரிந்தது. மேலும் அவரின் அண்ணன் மற்றும் அண்ணியின் முயற்சியால் அவர் மீண்டும் என்னுடனும், என் குடும்பத்தாருடனும் பேச ஆரம்பித்தார். நானும் பழைய மன கசப்புகளை மறந்து, அவருக்கு கணினியில் உதவுவது, அவர் வலைத்தளத்தை உருவாக்கி அவர் படைப்புக்களை அனைவருக்கும் கொண்டு செல்வது, அவரை ஆஸ்திரேலியா கூட்டி வந்து என்னுடன் சில காலம் தங்க வைப்பது என அவருக்கு பலவகையில் ஆதரவாக இருக்க முயன்றேன். ஆனால் அவரால் என் குடும்பத்துடன் கடைசி வரை முழுமையாக ஒட்ட முடியவில்லை. ஆஸ்திரேலியாவிலும் அவர் எழுத்து பணிகள் செய்வது, இலக்கிய தோழமைகளை சந்திப்பது என்று ஆர்வம் கொண்டிருந்தார். அவரை மேலும் சில காலம் என்னுடன் தங்க வைக்க முயன்றேன், ஆனால் அவர் ஓரிடத்தில் கட்டுண்டு இருக்க விரும்பவில்லை.

அண்ணன் சண்முகத்துடன் பா.செயப்பிரகாசம்

பா.செ.வின் கடைசி காலத்திற்கு ஏதேனும் பணம் சேர்த்து வைத்து கொள்ளும்படி நானும், அவர் பெரு மதிப்பிற்குரிய அண்ணனும் பலமுறை கூறிய போதிலும் (பா.செ கடைசி நேர்காணலில் இதை குறிப்பிட்டு இருப்பார்), அவர் கடைசி வரை தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் சில சமயங்களில் பிடிவாதமாக இருந்தார். பல சமயங்களில் தன் அண்ணன் மற்றும் தன் மீது அக்கரை கொண்டோரிடமும் (பொய் காரணம் கூறி) பணம் பெற்று பிறருக்கு உதவுவார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பும் போதும் தனக்கு என்று எதுவும் வாங்கி கொள்ளாமல், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொருட்களை வாங்கி தர சொல்லி எடுத்து சென்றார். பரந்து விரிந்து ஓடும் நதி யாரையும் மதிப்பாய்வு செய்து நீரை கொடுப்பதும் இல்லை, தனக்காக சேர்த்து கொள்வதும் இல்லை. பா.செ.வும் அந்நதிகளை போல் அனைத்து மனிதர்களையும் நோக்கி வாஞ்சையுடன் - பள்ளங்களை நோக்கி செல்லும் ஆற்று நீரை போலவும் கடைசி நாள் வரை வாழ்ந்து தனக்கென எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் மறைந்தார் (அவரது கடைசி கையிருப்பு ஒரு சில ஆயிரமும், சில வீட்டு உபயோக பொருட்களும், புத்தங்களும் தான்).

கடைசி வரை அவர் ஒரு கட்டுப்பாடு அற்ற சுதந்திர பறவையாகவே இருக்க விரும்பினார். குடும்பத்தின் முக்கியத்துவத்தை கடைசி காலத்தில் அவர் உணர்ந்து, குடும்பத்துடன் இணைவதற்கு பலவாறு முயன்றார். ஆனால் அது தாமதமான செயலாகவும், கை மீறி போனதாகவும் இருந்தது. இதையும் அவர் உணர்ந்து, தன் கடைசி நேர்காணலில் - தன் குடும்பத்தை மீட்டு எடுப்பதை செய்ய விரும்புவதாகக் கூறி இருப்பார்.


கடைசி காலங்கள் 

புதுச்சேரியில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவர் சென்னை செல்ல முடிவெடுத்தார். தன் அன்பு அண்ணன் புதுச்சேரி விட்டு செல்ல தன்னை அனுமதிக்கமாட்டார் என்பதால் அண்ணனிடம் சென்னையில் எழுத்து பணி செய்ய ஏதுவாக இருக்கும் என ஒரு பொய்யை சொல்லி, அவரின் அனுமதி பெற்றார். அவர் சென்னைக்கு மாறியது எனக்கு சில மாதங்கள் கழித்தே தெரியவந்தது. முன்பே தெரிந்திருந்தால் அதை தடுத்திருப்பேன், அவரும் இன்று நலமுடன் இருந்திருப்பார். 

சென்னையில் என் மாமா மருத்துவர் வெங்கட்ராமன் அவரை அரவணைத்து அவர் தேவைகளை நிறைவு செய்தார். நானும் என்னால் ஆன உதவிகளை செய்தேன். பா.செ சென்னை மாறிய போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருந்தது. அதனால் வீட்டுக்குள் பெரும்பாலும் தனிமையில் அடைபட்டு, யாரையும் காண முடியாத நிலை ஏற்பட்டு மிகுந்த மன சோர்வு கொண்டார். அதனால் சில மாதங்களிலேயே அவர் மற்றொரு நண்பருக்கு அருகில் வீடு மாறினார். ஆனால் அதுவே அவருக்கு பெரும் கேடாக அமைந்து, அவரை மரணத்திற்கு அழைத்து செல்லும் ஓர் ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

2021 அக்டோபர் மாதம், அவர் வீட்டில் வழுக்கி விழுந்து, தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு மூன்று மாதம் படுக்கையில் மிகுந்த அவதியுற்றார். அவர் எலும்பு முறிவு ஏற்பட்ட நாள் முதல் பலவாறு உடல் அளவிலும், மனதளவிலும், தனிமையிலும் வாடினார். அவர் வலியாலும், தனிமையிலும் அவதியுற்று பலமுறை நள்ளிரவு எனக்கு அலைபேசியில் பேசுவார். அப்போது எல்லாம் நான் அவருக்கு என்னால் முடிந்த வரையில் சமாதானம் கூறி மன தைரியம் கொடுக்க முயன்றேன். அவர் தனிமையை போக்க அவர் நண்பர்களையும், உறவுகளையும் தொடர்பு கொண்டு அவரை கண்டு வர கோரினேன். அவரை முன் போல எழுதவும், படிக்கவும் ஊக்குவித்தேன். ஆனால் மிகுந்த வலியாலும், மன வேதனையாலும் அவரால் முழுவதுமாக அதில் ஈடுபட முடியவில்லை. அவர் எலும்பு முறிவையும், பழுதுபட்ட இதயத்தையும் எவ்வாறேனும் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தும் முயற்சிகளை மருத்துவர் வெங்கட்ராமன் மேற்கொண்டார்; நானும் அதற்கு துணை நின்றேன். ஆனால் அப்பாவின் வயது மூப்பு காரணமாக அது முடியாமல் போனது. ஆனாலும் எலும்பு முறிவில் இருந்து முழுமையாக மீண்டு வருவேன் என மனதில் உறுதி கொண்டார். அதன் வெளிப்பாடாகவே தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் "வீழ்வேன் என நினைத்தாயோ" என மாற்றி, கடைசி சில மாதங்களில் ஊன்றுகோல் இல்லாமல் நடக்கவும் செய்தார். அவர் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால், அவர் மேலும் சில காலமேனும் இருப்பார் என நானும், அவரும் உறுதியான நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் எங்கள் இருவரது நம்பிக்கையும் உடைபட்டு, அவர் மன உறுதிக்கு அவர் இதயம் ஈடு கொடுக்க முடியாமல் தன் செயல்பாட்டை 23 அக்டோபர் 2022 அன்று நிறுத்திக்கொண்டது.

இதற்கு இடைப்பட்ட வேளையில் நான் அவரை காண இரு முறை ஆஸ்திரேலியாவில் இருந்து பயண முயற்சி செய்தும், கொரோனா பயண கட்டுப்பாடுகளாலும், அதன் பின்னான விமான சேவை கட்டுப்பாடுகளாலும் - கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டு பயணம் செய்ய முடியாமல் போனது. அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட வேலை இழப்பும், புதிய வேலை தேடுதலாலும், வேலை கிடைத்த பின் விடுமுறை இல்லாததாலும் நான் அவரை நேரில் வந்து காண முடியாமல் அவதியுற்றேன். இதை அவரிடமும் தெரியப்படுத்தினேன். அவரும் என் நிலைமைகளை புரிந்து கொண்டார். நானும் முடிந்த வரை அவருடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவேன். சிறு வயது முதல் என் குடும்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளாலும், நகர வாழ்க்கையாலும் எனக்கு என் தந்தையை போல இலக்கிய ஆர்வம் வரவில்லை. அதனால் அவருக்கு என்னுடன் எப்போதும் பேசுவதற்கு ஒன்றும் இருக்காது. பல சமயங்களில் ஒரு நிமிடத்திற்கு குறைவாகவே என்னுடன் அலைபேசியில் பேசுவார்.


தனிமை

சென்னையில் மீண்டும் தனிமை தாளாமல், சொந்த ஊருக்கு (விளாத்திகுளம்) உறவுகளையும், நண்பர்களையும் தேடி வந்தார். நானும், அவர் மேல் அக்கறை கொண்டவர்களும் - விளாத்திகுளத்தில் போதிய மருத்துவ வசதிகள் இருக்காது என்று அறிவுரை கூறியும், தன் சொந்த ஊரையும், மக்களையும் காண விளாத்திகுளம் வந்தார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ திரு மார்கண்டேயன் அவரை அரவணைத்து பாதுகாத்தார். இங்கும் சிறிது காலம் மகிழ்ச்சியுடனே இருந்தார். எழுத்து பணியையும் ஓரளவு ஆரம்பித்திருந்தார். ஆனால் தனிமையும், சமீப காலங்களில் அவரின் வயதை ஒத்த சக தோழமைகளின் மரணமும் அவரை மிகவும் பாதித்தது. இதனால் உடல் உபாதைகளுடன், மன உபாதையாலும் வாடினார். மரணத்தை பற்றி தான் நிறைய சிந்திப்பதாக என்னிடம் கூறினார். யோகா பயிற்சி செய்து மன அமைதி கொள்ள முயன்றார். ஆனாலும் விளாத்திகுளத்தில் மீண்டும் தனிமையில் இருப்பது போல் உணர்வதாய் என்னிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டார். அதனால் நான் அவரை மீண்டும் புதுச்சேரிக்கு, அவர் அண்ணன் அருகில் நவம்பர் 2022 மத்தியில் மாற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். இதனால் அவர் உற்சாகமாகி அதற்கான முன் ஏற்பாடுகளிலும் இறங்கினர். நான் டிசம்பர் 2022க்கு வருவதாக கூறிய போது மிகவும் மகிழ்ச்சியுற்றார். ஆனால் காலம் எங்கள் இருவருக்கும் மற்றொரு வாய்ப்பு கொடுக்காமல் அவரை பாதியில் அழைத்து சென்றுவிட்டது.

முன்னர் பல முறை மரணம் வரை சென்று மீண்ட அவர், இறக்கும் தருவாயிலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடினர் என கேள்விப்பட்ட போது, மனம் உடைந்து போனேன். எனக்கு முதலில் செப்டம்பர் 2021-இல் அனுப்பிய நேர்காணல் பதிலை, அவர் மரணத்தை உணர்ந்ததாலோ அல்லது பிற காரணத்தினாலோ, அவர் மறைந்த 23 அக்டோபர் 2022 அன்று காலை மறுபடியும் சீர் செய்து அனுப்பினார். ஏன் என்று புரியவில்லை; இனிமேல் தெரிந்து கொள்ள வாய்ப்பும் இல்லை. அதனால் இன்றளவும் அந்த நேர்காணலை படிக்கும் போது என்னால் கண்ணீர் வருவதை தடுக்க முடிவதில்லை. (தளம் - நவம்பர் 2022 இதழில் அவர் கடைசி நேர்காணல் வெளியாகியது).


செத்தும் கொடுத்த சீதக்காதி

முன்பே கூறியது போல், மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு அலாதி பிரியம். கடைசி மாத பென்ஷன் வரை தொடர்ந்து அனைவருக்கும் கொடுத்து கொண்டே இருந்தார். கடைசி காலத்தில் கூட அவர் பிறந்த ஊரில் உள்ள தன் முதையார் நிலங்களையும் விற்று பிறருக்கு கொடுத்தார்.

செத்தும் கொடுத்த சீதக்காதி என்று கேள்விப்பட்டு இருப்போம். அப்படிபட்ட வாழ்வை அவர் மரணத்தின் பின்பும் வாழ்ந்தார். இறந்த பின் தன் புத்தகங்களை கல்லூரிகளுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து, வீட்டில் உள்ள பொருட்கள், துணிமணிகள், அவருக்கு பின்னான பென்ஷன் என்று பிறருக்கு வாரி கொடுத்தும் போதாமல் தன் உடலையும் மருத்துவ மாணவர்களுக்கு கொடையாக கொடுத்த மாமனிதர் அவர். அவர் உடல் கொடை கொடுத்த கல்லூரி டீன்னிடம் அவர் உடல் எப்படி உபயோகபடுத்தப்படும் என  கேட்டபோது - அவர் உடலும், உடல் உறுப்புகளும் பல மாதங்கள் பாதுகாக்கப்பட்டு மாணவர்களால் படிக்கப்படும் என கூறினார். ஆதலால் அவர் இன்னும் அந்த மருத்துவ கல்லூரியில் இருந்துகொண்டு தன் கடைசி அணு வரை தானம் அளித்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன்.


சென்று வாருங்கள் தந்தையே

உன் மேல் எனக்கு எவ்வித கசப்பும் இல்லை, கோபமும்  இல்லை

நீ அருகில் இல்லாத போதும் 

நீ எங்கோ உயிர்புடன் இருக்கிறாய் என நான் அமைதி கொண்டிருந்தேன்.

இனி அதுவும் இல்லை.


நீ பலமுறை என்னிடம் கூறாமல் 

ஒரு சுதந்திர பறவையாய் இடம் மாறி கொண்டே இருந்தாய்

நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று நான் ஆறுதல் கொண்டேன்

ஆனால் இம்முறை நீ என்னிமிருந்து நிரந்தர பிரிவுற்று

என்னை தீரா கண்ணீரில் ஆழ்த்துவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை

ஆனாலும் உன் மேல் எனக்கு கோபம் இல்லை.


நீ இல்லா வருத்தமும், துயரமுமே என் மனதை நிறைத்திருக்கின்றது

எங்கோ நிரந்தர அமைதி தேடி, 

உன் தாயும், தந்தையுடன் இருக்க சென்றாய் என 

நான் அமைதி கொள்ள முயல்கிறேன்; ஆனால் முடியவில்லை.


சென்று வாருங்கள்! என் அன்பு தந்தையே!

உன்னை தந்தையாக நான் பெற்றது என் வாழ்நாள் நற்பேறு.

 

- அன்பு மகன் சூரியதீபன்

21 நவம்பர் 2022




திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

04-12-2022

===========================

ஆவணமாகிய நினைவேந்தல்

===========================

காக்கைச் சிறகினிலே திசம்பர் 2022 இதழின் அறுபத்தியெட்டுப் பக்களில் விரவிக்கிடக்கிறது பா.செயப்பிரகாசம் எனும் படைப்பாளியின் பெருவாழ்வு. அண்மையில் இவ்வளவு விரிவான நினைவேந்தல் பக்கங்கள் யாருக்கும் எழுதப்படவில்லையென்றே கருதுகிறேன்.

இருபத்தியாறு நினைவேந்தல் கட்டுரைகள். பல்வேறு எழுத்தாளுமைகள், தங்களுக்கும் அவருக்குமான பிணைப்பின் நினைவுகளை எழுத்தாக்கியிருக்கிறார்கள். அத்தனையும் அவரது இழப்பின் ஈரம் காயாத எழுத்துக்கள். 

பா.செ குறித்தான பலவிதச் செய்திகள் அவரது பேராளுமையை; அறிந்தவர்களிடத்தில் மீள நினைவுறுத்துகின்றன, அறியாதவர்களிடத்தே அவரை அறிமுகம் செய்துவைக்கின்றன. ஒரு படைப்பாளி என்பததைத் தாண்டி சிறந்த மனிதன் என்பதே பலரது எழுத்துக்களினூடே இழையோடும் உண்மை.

அதிலும்,

“உன் மேல் எனக்கு எந்தவிதக் கசப்பும் இல்லை, கோபமும் இல்லை

நீ அருகில் இல்லாத போதும்

நீ எங்கோ உயிருடன் இருக்கிறாய் என மன அமைதி கொண்டிருந்தேன்

இனி அதுவும் இல்லை”

மேலுதட்டின் ஓரத்தில் மெல்லப் படரும் உப்பின் உவர்ப்போடு எழுதப்பட்டிருக்கும் இந்த வரிகளைக் கொண்ட பக்கங்கள் அவரது வாழ்க்கையின் முகாமையான நிமிடங்களை, மனவோட்டங்களை, அவரது தனிமையை, தவிப்பை, விடுதலையுணர்வை நிறைத்துக் கொண்டிருக்கின்றன.

இளைய தலைமுறை, அவரது படைப்புகளினூடே அவரது ஆக்கத்திறணை இனங் கண்டுகொள்ள முடியும். ஆனால், நிறைவாழ்வு வாழ்ந்த மனிதன் என்று கட்டியங் கூறிக் கிடக்கின்றன காக்கையின் இந்தப் பக்கங்கள். இவற்றை அவரது படைப்புகளில் தேட இயலாது. வாய்ப்பிருப்போர் திசம்பர் 2022 “காக்கைச் சிறகினிலே” இதழை வாசித்துப் பாருங்கள்.

அவர் மறைந்த அன்று நான் இப்படி எழுதியிருந்தேன்.

“எழுத்தறியாத மரணத்திடம் சினங்கொள்ள முடியாது.”

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை