அவனே போர் வீரன்
தொகுப்பு முழுதும் பயணிக்க கை கொடுக்கிறது அபூர்வமான கதைமொழி. அரிதிலும் அரிதான கதை மொழி அகரமுதல்வனுக்கு அனாயசமாய் வருகிறது. வேறு எவர் போலவும் எழுதவில்லை; எவருடைய பின் தொடரும் நிழலில்லை. இதுவரை பேசபடாத அவரது அனுபவங்கள் தனித்துவமானவை.
அந்த நிலத்தில் வாழ்வு கனவாக இருந்தது. சாவு இயல்பாக இருந்தது. வாழவேண்டுமெனும் கனவு வாழ்க்கை முழுதும் வந்து கொண்டிருக்கிறது; மரணம் அன்றாட நிகழ்வாக நடக்கிறது. அது நெல் விளையும் வயல்வெளி அல்ல. மரணம் விதைக்கும் போர் விளையும் பூமி.
நமக்கு வாழ விருப்பம்; சாகப்பயம். ஒரு அழகான கனவு போன்ற வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை இந்தப் போராளிக்குள்ளுமிருக்கிறது. களம் நீங்கி, இருளடித்த காட்டுக்குள் ஒடி முனையை எய்துகையில், அது வெட்ட வெளியாய் முடிகிறது.
தொகுப்பு முழுதும் பயணித்து முடிக்கையில், ஒரு உண்மை புலனாகிறது. இந்த யுத்தத்துக்கு முடிவு கொண்டு வருவது எப்படி? பஃபி செயிண்ட் மேரி என்ற பாடகி சொல்வார்:
“இனியும் கட்டளைகள்
மேலிருந்து,
தொலைதாரத்திலிருந்து இறங்குதல் கூடாது
அவனிடமிருந்து, உங்களிடமிருந்து
என்னிடமிருந்து உதிக்க வேண்டும்
சகோதரர்களே,
யுத்தத்துக்கு முடிவு கொண்டு வருவது
இதுகாறும் நடந்த வழியிலல்ல”.
- பா.செயப்பிரகாசம்.
கருத்துகள்
கருத்துரையிடுக