சூரியதீபனின் மூன்றாவது முகமும் அதன் முன்னுரையும் - கோ. கேசவன்
சூரியதீபனின் மூன்றாவது முகம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு மக்கள் கலாச்சாரக் கழகத்தின் வெளியீடாக அண்மையில் (டிசம்பர், 1988) வந்துள்ளது. இதற்கு முன்னரே சூரியதீபனின் கதைத் தொகுதிகள் நான்கு வெளியாகியுள்ளன. மூன்றாவது முகம் தொகுப்பில் உள்ள கதைகளையும் அதன் முன்னுரையையும் குறித்துச் சில கருத்துகளைப் பரிமாறிக் கொள்தலே இங்கு நம் நோக்கமாகும்.
இத்தொகுப்பில் 1981-1986ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பத்துக் கதைகள் உள்ளன. வாழ்விலிருந்து எனது இலக்கியம் - புரட்சிகர அரசியலும் அமைப்புமே எனது உலைக் களன் எனத் தலைப்பிட்ட நீண்ட முன்னுரை, வெறும் சம்பிரதாய முன்னுரையாக இல்லை. அம்முன்னுரை ஆசிரியரின் வாழ்க்கையையும் இலக்கியக் கோட்பாட்டையும் தெரிவிக்கிறது. ஒரு கலைஞனைப் பற்றித் தெரிந்துகொள்ள இவை இரண்டும் அவசியங்களாகும். சிறுகதைகளுக்குள் போகும் முன் முன்னுரையில் உள்ளனவற்றை காண்போம்.
சூரியதீபன் தன் பாலிய, இளமைக் காலங்களின் வறுமையைத் தெரிவிக்கின்றார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டமையையும், பின்னர் அதிலிருந்து விலகி புரட்சிகர அரசியலுக்குத் திரும்பியதையும் எழுதுகின்றார். இதன் பின்னர் இலக்கியம், அமைப்பு, இவை இரண்டுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவை பற்றிக் குறிப்பிடுகின்றார். இவற்றிலிருந்து இவரது இலக்கியக் கோட்பாடுகளைத் தொகுக்கலாம்.
அ. கதைகள் அனைத்தும் கலைஞனின் நேரடி, மறைமுக அனுபவங்களாக உள்ளன, ஒரு கலைஞனுக்கு மறைமுக அனுபவங்களே அதிகம்.
ஆ. தனது/பிறர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஒரு கலைஞனின் அனுபவமாக உடனடியாக மாறுவது இல்லை. அனுபவமாவதற்குக் கலைஞன் காத்திருக்க வேண்டும். அனுபவமாகாமல் எழுதப்படும் கலை அரைகுறைப் பிரசவங்களாகவே முடியும்.
இ. ஒரு கதைக்குள் ஒரு அனுபவம் மட்டுமின்றி, இரண்டு மூன்று அனுபவங்களும் இருக்கலாம்.
ஈ. அறிவுஜீவிகளுக்கென கதைகள் எழுதும்பொழுது அவற்றில் கவித்துவ ரொமாண்டிக் வீச்சு இருந்தது. கதைகள் மக்களை நோக்கி நெருங்கி வர வர அது கரைந்து போகிறது.
உ. மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஒரு கலைஞன் தோல்வியடையும் பொழுது அதன் தொடர் விளைவாக மூன்று தவறுகள் ஏற்படுகின்றன. அவை:
- கலையின் உள்ளடக்கத்தைத் தேர்ந்து எடுப்பதில் தவறு.
- கலையை வெளிப்படுத்துவதில் கையாளும் கலை நுட்பக் குறைப்பாடு.
- கலைக்குள் சுட்டிக்காட்டப்படும் முரண்பாடுகளை கையாளும் விதத்திலும் தீர்க்கும் விதத்திலும் தவறு.
ஊ. ஒரு கலைஞன் ஓர் அமைப்புக்கு வெளியே இருக்கும்பொழுது - அவனது சமூகப்புரிதல் குறைவாக இருக்கும்; ஓர் அமைப்புக்குள் இருந்தால் சமூகப்புரிதல் நிரம்ப இருக்கும். அமைப்புக்கு வெளியே தம்மை நிறுத்திக்கொள்ளும் கலைஞர்கள், தேக்கமடைதல் இயல்பு. இவ்வாறு தேக்கமடைதல், இலக்கிய மரணம் ஆகும்.
௭. பெரும்பாலும் நடுத்தர வர்க்க வாழ்நிலையைக் கொண்ட எழுத்தாளர்களே இங்கு உள்ளனர். இவர்கள் தம் குடும்பம், அலுவலகம் போன்ற நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றனர். இவர்கள் ஒரு புரட்சிகர அமைப்புக்குள் பணியாற்ற விரும்பும்பொழுது, இவர்கள் வாழ்க்கை மீது ஆளுகை புரியும் வெளியுலக விதிமுறைகளை விட்டுவிட மனமின்றியும் அதே நேரத்தில் புரட்சிகர அமைப்பு விதிமுறைகளை முற்றிலும் விட்டுவிட மனமின்றியும் 'ஒருவித இரண்டுங்கெட்டான்' நிலையில் உள்ளனர். இரண்டின் விதிமுறைகளுக்கும் இணைப்பை கண்டறிய முற்பட்டு அவ்வாறு இயங்க சுதந்திரம் கேட்கின்றனர். அத்தகைய ஒரு சுதந்திரத்தை ஒரு புரட்சிகர அமைப்பு மறுத்தது எனில், கலைஞனுக்கு சுதந்திரம் இல்லை என்கின்றனர். நடுத்தர வர்க்க வாழ்நிலையை நீட்டித்துக்கொள்ள கலைஞர்கள் கேட்கும் இந்த சுதந்திரம், குட்டி முதலாளிய சுதந்திரம்; ஒரு புரட்சிகர அமைப்பு கலைஞர்களின் சுதந்திரத்தைப் புரட்சிகர அர்த்தத்தில் மறுப்பது இல்லை.
ஐ. புரட்சிகர அரசியலும் புரட்சிகர அமைப்புமே ஒரு கலைஞனுக்கு ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து அவனைக் காப்பாற்றித் தொடர்ந்து புரட்சிகரத் தன்மையில் நீடித்து வைத்திருக்கும்.
இவற்றிலிருந்து மட்டுமே இலக்கியக் கோட்பாட்டை முழுமையாக உருவாக்க இயலாதெனினும் இலக்கியம் குறித்தும் அதன் தோற்றம் குறித்தும் கலைஞர்களுக்கும் அமைப்புக்கும் இடையிலான உறவு குறித்தும் சூரியதீபன் கொண்டுள்ள கருத்துகளைக் கண்டறிதல் சாத்தியமே.
கதைகள் என்பவை வாழ்வின் அனுபவங்களே; மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்பொழுதே கலையின் உள்ளடக்கமும் கலைநுட்பமும் நேர்த்தியாக அமைய முடியும். இவையெல்லாம் சரியே, ஆனால் கலைஞர்களுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் இடையிலான உறவில் இன்னும் சில கருத்துகளையும் தோழர் சூரியதீபன் கருத்துகளோடு இணைத்துக் காணவேண்டிய அவசியம் உள்ளது.
ஒரு புரட்சிகர அமைப்பில் உள்ள ஒரு கலைஞனுக்குத் தனிநிலையில் உள்ள இன்னொரு கலைஞனைக் காட்டிலும் சமூகப் புரிதல் அதிகம் என்பது சரியே. எனினும் இதை எல்லாக் காலங்களிலும் பொதுவான நிலையில் வைத்துக் காண இயலாது. புரட்சிகர அமைப்புக்கு வெளியே இருக்கும் கலைஞனுக்குக் கூட அவனது ஓயாத அறிவுத் தேடலில் கூடுதல் புரிதல் இருக்கக் கூடும். இதையும் மறுக்க இயலாது. இன்னொன்று, அமைப்புக்குட்பட்ட கலைஞர்களின் சரியான புரிதல் என்பது அமைப்பின் புரட்சிகரத் தன்மையைப் பொறுத்த விஷயமாகும். ஒரே அமைப்பு ஒவ்வொரு பத்து - இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் அரசியல் திட்டத்தையும் நடைமுறையையும் மாற்றிக் கொண்டு இருக்கும்பொழுது அதன் முந்தைய நிலை புரட்சிகரமற்றதாக விமரிசிக்கப்பட்டு விடுகிறது. அப்படியாயின் முந்தைய நிலையில் உள்ள அமைப்பில் செயல்பட்ட கலைஞர்களின் சமூகப்புரிதல், தவறானதாக/குறைவுபட்டதாக இருக்கிறது. ஒவ்வொருமுறை அரசியல் திட்டத்தையும் நடைமுறையையும் மாற்றும்பொழுது இது தொடர் நிகழ்வாகவே போகக்கூடிய சாத்தியமும் உள்ளது. எனவே இந்நிலையில் அமைப்புக்கு வெளியே நிற்கிற கலைஞர்களும் ஓயாத அறிவுத் தேடலின் மூலம் கூடுதலான சமூகப் புரிதலைக் கொண்டிருக்கக்கூடும்.
இன்னொன்று, புரட்சிகர அமைப்புக்கு வெளியே உள்ள கலைஞர்கள் என்றாவது ஒருநாள் தேக்கமடைந்து போவார்கள் என்ற சூரியதீபன் கருத்தையும் அனைத்துந் தழுவிய பொதுவான உண்மையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கலைஞனின் இலக்கிய மரணத்துக்கு, புரட்சிகர அமைப்போடு அவனுக்கு இருக்கும் தொடர்பு - தொடர்பின்மை என்பதை மட்டும் காரணமாக்க முடியாது. அமைப்பிற்கு அப்பாற்பட்ட கலைஞர்கள் தொடர்ந்து நல்ல கலை இலக்கியங்களைப் படைப்பதற்கு வாய்ப்பு இல்லையா? இருக்கிறது என்றே கருதுகிறேன். நாம் உயர்வாக மதிக்கும் மாக்சிம் கார்க்கி 1905இன் இடையில் கட்சியில் சேர்ந்து 1917இல் கட்சியை விட்டு விலகிவிட்ட பின்னரும், அவரது இலக்கிய பங்களிப்பு தொடர்ந்து இருக்கிறது. அவர் இலக்கியங்கள் மரணம் அடைந்து விடவில்லை. மரணமடையாத இலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருந்தார். 1928இல் அமைப்புக்குள் சேர்க்க முயன்ற பொழுது 'அமைப்புக்கு'அருகே நின்று பணியாற்றுவதை விரும்புவதாக'க் குறிப்பிட்டார். தொடர்ந்து ஒரு கலைஞன் புரட்சிக்கு நேர்மையாக இருக்கிறானா என்பதே அவனது இலக்கியப் பங்களிப்பைத் தீர்மானிக்கும். 1932இல் வெளிநாட்டு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்க மறுத்தபொழுது, அந்தப் பத்திரிக்கையின் பொதுவுடைமை விரோதத் தன்மையைக் காரணமாகக் கார்க்கி காட்டினார். எனவே தொடர்ந்து புரட்சியின் மீது செலுத்தும் நேர்மை/நேர்மையின்மையே ஒரு கலைஞனின் இலக்கிய மரணம்/இலக்கிய வாழ்வைத் தீர்மானிக்கும்.
இன்னொன்று கலைஞனின் சுதந்திரம். புரட்சிகர அமைப்பிற்குள் இருக்கும் நடுத்தர வர்க்கக் கலைஞாகள் தம் வாழ்நிலையை இழந்துவிடாமல் புரட்சிகர சிந்தனைக்கும் நடுத்தரவர்க்க வாழ்நிலைக்கும் இணைப்பு வேண்டுவதால் சுதந்திரக் கூக்குரல் எழுகிறது என்ற கருத்து சரியே. வடை கீழே விழாமல் பாட்டு பாட நினைக்கும்பொழுது அது முடியாத ஒன்றாகும். இந்நிலையில் தம் போலித்தனத்தை மறைக்க நடுத்தரவர்க்கக் கலைஞர்கள் சுதந்திர முழக்கமிடலாம். இக்கருத்து உண்மையே. ஆனால் இதுவும் ஒரு பகுதியே. கலைஞர்கள் சுதந்திர முழக்கமிடுதலுக்கு இதை மட்டுமே காரணமாக்க முடியாது.
புரட்சிகரக் கலை இலக்கிய அமைப்பு என்பது ஒரு மக்கள் திரள் அமைப்பே. இளைஞர், மாணவர், தொழிலாளர், விவசாயிகள், பெண்கள் என்பன போன்ற அமைப்புகளில் ஒன்றாகும். புரட்சிகர அரசியல் கருத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லவும், புரட்சிகர நடைமுறையில் மக்களைச் செயல்படுத்தவும் ஆன இத்தகைய அமைப்புகளுக்கான சில தனிப்பண்புகள் இருப்பதுண்டு. இவையெல்லாவற்றையும் இயந்திர கதியில் சமப்படுத்தி ஒன்றாக்கிவிடமுடியாது. இவ்வாறு அனைத்தையும் ஒரே நிகராக்கும் பொழுது தோன்றும் எதிர்ப்பை நாம் புறக்கணிக்க முடியாது. இலக்கிய அமைப்புக்கு எனவும் சில தனிப் பண்புகள் இருக்கின்றன. ஒரு படைப்பின் கருத்தைப் பற்றி அமைப்பு, விமரிசனம் வைப்பது நியாயமாக இருக்கும். அந்தப் படைப்பை எப்படி எழுதுவது என்பதில் கலைஞனுக்கு உரிய சுதந்திரத்தில் அமைப்பு தலையிடுதல் நியாயமாகாது. சில நேரங்களில் இலக்கிய வடிவம் பற்றிய அறிவு குறைந்த அமைப்பாளர்களால் இலக்கிய வடிவம் பற்றிய கருத்து திணிக்கப்படும்பொழுது, ஒரு கலைஞன் அதை எதிர்த்துத்தான் தீர வேண்டும். இங்கு பெரும்பான்மை சிறுபான்மை கிடையாது. எழுதும் கலையைப் பொறுத்து எழுத்தாளர்களே முதன்மை நீதிபதிகள் என லெனின் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை இங்கு நினைவு கூரலாம். எனவே கலைஞர்களது சுதந்திரக் குரலை எப்பொழுதும் ஒரே கோணத்தில் காண இயலாது.
கலைஞர்களின் இலக்கியத் நோக்கத்திலாகட்டும், சுதந்திரத்திலாகட்டும், கலைஞர்களுக்கும் புரட்சிகர அமைப்புக்கும் இடையிலான உறவில், சூரியதீபன் எப்பொழுதுமே புரட்சிகர அமைப்பைப் பிரதான அம்சமாகக் காண்கின்றார். குறிப்பிட்ட சில சூழல்களில் கலைஞர்களும் பிரதான அம்சமாகக் கூடும். அமைப்புக்கு அப்பாற்பட்டு இயங்கும் கலைஞர்கள் சமூகப் புரட்சிக்கு நேர்மையாக இருக்கும் வரை இலக்கியம் மரணம் அடைந்து விடுவதில்லை. புரட்சிகர அமைப்புக்கு வெளியே நிற்கும் கலைஞர்களும், கூடுதல் சமூகப்புரிதல் கொண்டிருக்கக்கூடும். கலைஞர்களது சுதந்திரக் குரலை புரட்சிகர அமைப்பின் விதிமீறலாகவே எப்பொழுதும் காணமுடியாது. இயந்திர கதியில் அனைத்தையும் சமப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட சூழலில் படைப்பு விதிமுறைகளுக்குக் கலைஞர்கள் போராடுதல், நியாயமான போராட்டமாகும். புரட்சிகர அமைப்புக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான உறவில் இத்தகைய இயங்கியல் போக்கைக் கடைப்பிடிக்கும் பொழுது (நடைமுறைப்படுத்தும்பொழுது) பழைய தவறுகளைக களைய முடியும். இல்லையெனில் அமைப்பின் சர்வாதிகாரமோ, அன்றி கலைஞர்களின் அராஜகமோ - இரண்டில் ஒன்று - ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு. இதைத்தான் வரலாறு நிரூபித்துள்ளது; நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு குறிப்பிடுதல், அமைப்பைச் சாராதிருத்தலுக்கோ அமைப்புக்குள் சீர்குலைவை உண்டு பண்ணுதலுக்கோ வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது. புரட்சிகர அமைப்புக்கு அப்பாலும் புரட்சிக்குப் புறநிலைச் சாதகப் பங்களிப்பு ஆற்றக்கூடிய இலக்கியவாதிகள் இருக்கின்றனர் என்பதை நம்மில் பலர் ஏற்றுக்கொள்வதற்குரிய நியாயத்தைக் கூறுதலாகும். இலக்கிய அமைப்பின் தனித்துவத்தை மனங்கொள்ளாது அனைத்தையும் இயந்திர கதியில் சமப்படுத்தும் போக்கை எதிர்க்கும் சுதந்திரக் குரலின் நியாயத்தைக் கூறுதலாகும். அமைப்பின் மீது நாம் கொண்டுள்ள உயரிய மதிப்பு, அமைப்பு வழிபாடாக உருத்திரிந்து அமைப்பையே இன்னுமொரு இறுக்கமடைந்த நிறுவனமாக மாற்றுவதில் முடிந்துவிடக்கூடாது.
இதன் முற்றிலுமான எதிர்த்திசை, அமைப்பையே நிராகரித்தலாகும். அமைப்பு சார்ந்த கலைஞர்கள் படைப்புகளில் கலை நளினம் குறைந்து போகும் என்ற சிலரது குற்றச்சாட்டை சூரியதீபன் மறுக்கின்றார். அமைப்பை ஒரு கோட்பாட்டுரீதியில் எதிர்ப்பதற்கான காரணம் தேடி அலைந்து திரியும் இவர்களுக்கு சூரியதீபன் மறுப்புக் கொடுக்கின்றார். புரட்சிகர அமைப்புக்குள் செயல்பட தன் கதைகளில் கவித்துவ ரொமாண்டிக் வீச்சு குறைந்துபோனதை இங்கு சூரியதீபன் குறிப்பிடுகின்றார். அமைப்பு நிராகரிப்பாளர்கள், கலைநயம் என்பதை எதனோடும் ஒட்டாத ஓர் அருவமாகவே காண்கின்றனர். சூரியதீபன் அதைத் தன் கதைகளோடு உயிரோட்டமாக இணைத்து ஒருவிதத்தில் பருண்மையாகக் காண்கின்றார். ஒரு ஜெருசலேம், காடு, ஒரு கிராமத்து ராத்திரிகள் ஆகிய தொகுப்புகளில் உள்ள கதைகளுக்கும் இரவுகள் உடையும், மூன்றாவது முகம் என்ற இரண்டு தொகுப்புகளின் கதைகளுக்கும் இடையிலான குணாம்ச வேறுப்பாட்டில் இவரது ரொமாண்டிக் இழப்பைக் காணமுடியும். இங்கு ஒரு கலைஞனின் படைப்பாக்க மனநிலையே மாறியிருப்பதை நாம் அறியவேண்டும். மார்க்சிய கலைஞனின் இதற்கு முந்தைய படைப்பாக்க நிலையை சிதைத்துவிடுகிறது. மார்க்சியப் புரிதலானது நிலவுடமை, முதலாளிய, குட்டி முதலாளிய, தாராளவாத, தனிமனிதவாத மற்றும் நசிவடைந்த இலக்கியங்களுக்கான படைப்பாக்க மனநிலையை அழித்துவிடும்' என மாசேதுங் தன் யேனான் கலை இலக்கியப் பேருரையில் குறிப்பிடுகின்றார். முற்றிலும் மாறுபட்ட படைப்பாக்க மனிநிலையில் தோன்றிய படைப்புகளில் கலைநயம் வேறுபட்டதாகவே இருக்கும். இங்குதான் அழகியல் என்பது கருத்தியலோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது. சூரியதீபன் கதைகளில் உள்ள அழகியல் அம்சங்களை ஏனைய எழுத்தார்களின் அழகியல் அம்சங்களிலிருந்து வேறுபடுத்திக் காணவேண்டிய அவசியத்தின் அடிப்படையும் இதுவாகும்.
- கோ. கேசவன்
கருத்துகள்
கருத்துரையிடுக