அன்புள்ள ஏவாளுக்கு


பெண் ஏன் அடிமையானாள்?

 ”ஆதாமை ,

ஏனோ எனக்கு பிடிப்பதே இல்லை

ஆதாமுக்கும் எனக்கும் 

ஒரு பகை உண்டு .

பகைக்கு காரணங்கள் எதுவும் இல்லை 

அவன் ஆதாம் என்பதைத் தவிர“ 

கவிஞர் மனுசியின் இந்தக் கவிதை பறை அறிவிப்பாய் வருகிறது. என்ன அந்த அறிவிப்பு? அவன் ஆணாக ஆக இருக்கிறான் என்ற பிரகடணம் தான்.

ஆண் உலகம் முழுவதையும் அடிமையாக்கினன். நிறம், பால், வர்க்கம், சாதி  மேல் கீழ்கள் மட்டுமல்ல, புல் பூண்டு தாவரம் இயற்கை அனைத்தையும்  கீழாக்கிச் சிதைத்தான். உலகத்தை போரால், யுத்தத்தால், வஞ்சகத்தால் நிறைத்தான். ஆதாமின் இடத்தில் ஏவாள் இருந்திருந்தால் இத்தனை அநீதி, அக்கிரமம், வஞ்சனை நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்னும் ஏக்கக் கனவுகள் உருவாகின்றன. 

இந்து சமூகம், இஸ்லாமியச் சமூகம், கிருத்துவச் சமூகம், சீக்கியம், ஜைனம்,  எல்லா மத சமூகங்களையும் ஆண் உருவாக்கி நிலைப்படுத்தினான். மேலாண்மை செய்கிறான்; எல்லா மத சமூகங்களும் பெண்ணை கீழாக்கி வைக்க இவனே காரணம். தனி ஒருவனாகவோ, குடும்பத்தினனாகவோ,  குழுவினனாகவோ, கட்சியினனாகவோ, சிற்றரசன், பேரரசன், அரசு,  முதலாளியம், ஏகாதிபத்தியம் எல்லாவற்றிலும் அதிகாரத்தால் நிரம்பிய மூளை அவனுடையது. எல்லா நிலைகளிலும் ஆண் அதிகாரத்தை அண்டியும்  எதிர்த்தும் வாழ்வைக் கடத்திய பெண்களின் துயர வரலாறு இந்த நாவல். அழுகையிலிருந்து நெருப்பு உண்டான கதை.

சீலி, ஷூக் ஆவேரி, நெட்டி, ஸ்வீக், சோபியா போன்ற கருப்பினப் பெண்டிர் தங்கள் குடும்ப ஆண்களிடமே விடுதலைக்குக் கலகம் செய்கிறார்கள். சோபியா  சுதந்திர சிந்தனை உடைய கருப்பினப் பெண், வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து மனிதம் காக்க வீதியில் போர் புரிந்தவள்.  ஹார்போவின் மனைவியான சோபியா மேயரின் மனைவியின் கட்டளையை ஏற்க மறுத்ததற்காக, மேயரை பதிலுக்கு தாக்கியதற்காக நீதிமன்றமும் போலீஸூம் - அவைதாம் அரசெனபடுவது- அவளைத் தண்டித்து பன்னிரண்டு  ஆண்டுகள் கொடுஞ்சிறையில் அடைக்கிறார்கள். முதலில் சிறைச்சாலை கூடத்தில் துணிகளை துவைத்து வேலைச் சுமையால் செத்தாள்; பிறகு மேயர் வீட்டின் பணிப்பெண்ணாய்ச் செத்தாள்; அடுத்து, வீட்டின் கீழ் நிலவறையில் ஈக்கள் கொசுக்கள் குப்பைகளுக்கு மத்தியில் தூங்கிச் செத்தாள்; செத்து வாழ்ந்த அவள், உயிருள்ளவளாய் ஒருபோதும் வாழவில்லை. 12 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து அவள் தன்வீடு திரும்பிய போது, அவளுடைய மூத்தகுழந்தைகள் திருமணமாகிப் போயிருந்தார்கள். இளைய குழந்தைகளுக்கு அவளை யாரென்று அடையாளம் தெரியவில்லை (பக்கம் 242).

வெள்ளைஅதிகாரம் உச்சத்தில் நின்று ஆடிய ஆட்டத்தில் ஒரு இணுக்கு இது. 

“அன்புள்ள ஏவாளுக்கு” புதினம் இத்தகைய நெடுங்குருதியின் தொடர் கதைகளைக் கொண்டிருக்கிறது; வெள்ளை இனத்தின்கீழ் மூச்சுப் பறியாமல் தொண்டைக்குழல் நெறிக்கப்பட்டு, விடுதலைபெற்ற அடிமைகளின் இனமும்      தனக்கு கீழே பெண்ணை அடிமையாக நடத்துவதில் குதூகலிக்கும் ஆல்பர்ட் போன்ற நீக்ரோ ஆண்களை மாத்திரம்  கொண்டிருக்கிறது. 

அடிமைகள் எங்கிருந்து, எப்படி உருவாக்கப்பட்டனர்? அந்திமழை டிசம்பர் 2019, இதழில் ”சர்க்கரையின் நிறம் வெள்ளை இல்லை. சிவப்பு” என்ற பதிவு காணக் கிடைத்தது.

“1425 சிலியில் இருந்து ’மொடொராய்வுக்கு‘ கரும்பு நாற்று ஹென்றி டி நேவிகேட்டர் கப்பல் கொண்டு போனது. 1493-ல்  கொலம்பஸின் இரண்டாவது பயணம் அட்லாண்டிக்கைக்  கடந்தபோது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கும் கரும்பு பயிர் பரவியது; கரும்பு பயிரிடுதல், வெட்டுதல், சர்க்கரை ஆக்குதல் - கடுமையான உடலுழைப்பை கோரும் செயல்;  பின்தங்கிய நாடுகளின் மனிதர்கள், முதலாளிகள் வியாபாரிகளின் கண்களுக்குள் வந்தனர். கரும்பு வளர்ப்பதற்காகவும் சர்க்கரை உற்பத்தி செய்வதற்காகவும் உலகில் அதிகமான மனிதர்கள் அடிமைகளாக தேசம்விட்டுத் தேசம் கடத்தப்பட்டார்கள்.

ஆப்பிரிக்கர்கள் மேற்கிந்தியத் தீவுகள், பிரேசில், அமெரிக்காவுக்கு. 

இந்தியர்கள் பீஜித் தீவுகளுக்கு.

ஜப்பானியர் ஹவாய் தீவுகளுக்கு. 

தென்கடல் தீவு மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு -  

அடிமைகளாக   கடத்தப்பட்டார்கள்.

1570 வாக்கில் அமெரிக்காவுக்கு கடத்திவரப்பட்ட 2000 ஆப்பிரிக்கர்கள் எண்ணிக்கை 1790 -ஆம் ஆண்டில் 80 ஆயிரமாக உயர்ந்தது. தொடர்ச்சியாய் வேறொரு விபரீதமும் நடந்தது. ஆப்பிரிக்க அடிமைகள் நியூயர்க் மக்கள்தொகையில் 20 விழுக்காட்டுக்கும் மேல். இந்த எண்ணிக்கை அதிகம் என்பதால் எதிர்ப்பு போராட்டம் முளைத்துவிடக் கூடாது என்பதற்காக நியூயார்க் பொதுச்சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது; மூன்றுக்கு மேற்பட்ட அடிமைகள் ஒன்று கூடினால் அது சட்டவிரோதம் என 1730 இல் சட்டம் இயற்றியது.144 போன்ற மனித உரிமை பறிப்புச் சட்டங்கள் ஆங்கிலேயே ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். வரலாறு நம்மை அடிமைகளின் எதிர்ப்பு வரலாற்றில் சொல்லமுடியாத வேதனைகளுக்குள் நடந்து போகச் சொல்கிறது .

ஆலிஸ் வாக்கரின் வாசகத்தில்: 

”பதினைந்தாம் நூற்றாண்டில் சிறைப்பிடிக்கப்பட்டு, வெப்ப மண்டலப் புல் வெளிகளிலும் மழைக்காடுகளின் ஊடாகவும் இழுத்துச் செல்லப்பட்டவர்களை அடிமைக் கப்பல்களில் ஏற்றி, தங்களுக்கான புதிய உலகத்தை உருவாக்குவதற்காக அழைத்துச் சென்றார்கள் அமெரிக்கர்கள். கொசுக்கள் நிரம்பிய, சேறும் சகதியுமான சதுப்பு நிலங்கள் அதிகமிருந்த வாஷிங்டனை திடீர் பாரிஸாக மாற்றவும், நியூயார்க்கை லண்டனை விடவும் பெரிய அருமையான நகரமாக்கிக் காட்டவுமான கனவு அடிமைத் தொழிலாளிகள் இல்லாமல் நிறைவேறாது. நான் பிறந்த அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலமும் இத்தகைய அடிமைகளால் நிறைந்திருந்தது; அவர்களின் உழைப்பைச் சுத்தமாக சுரண்டிய போது எதிர்த்த, உழைக்க லாயக்கற்றுப்போன அடிமைகளை எஜமானர்கள் கொன்று எந்த ஆரவாரமும் எழும்பாமல் புதைத்தார்கள். இன்றைய அமெரிக்காவும், அதன் பெருமைமிகு நகரங்களும் கேவலமான புதைகுழிகளின் மேல் எழும்பிய சமாதி மேடுகளே! அமெரிக்காவின் தென்பகுதியில் அப்படிப்பட்டவர்களின் எஞ்சிய பாகங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடங்களிலெல்லாம் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. நியூயர்க்கின் ’வால் ஸ்ட்ரீட்’ என்றழைக்கப்படும் இடத்தில்  அடிமைகளின் எலும்புகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன” ஆலிஸ் வாக்கர்  முன்னுரையில் குறிக்கிறார்.

நாவலாசிரியர் உட்பட, அவருடைய நாவலின் சீலி,   தங்கை நெட்டி, ஷூக் ஏவாரி,  சோஃபியா போன்றோர் இப்படி கொண்டு வரப்பட்ட அடிமைகளின் இருபதாவது தலைமுறையாக இருப்பார்கள். கொடூரத்துக்குப் பேர்போன ”அடிமை முகாம்களில் “ ஏசு கிறித்துவின் சிலைக்கெதிரில் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மண்டியிட்டார்கள். மழிக்கப்பட்ட அவர்களின் தலைகளில் புனித நீர் தெளிக்கப்பட்டது. அவர்களின் பூர்வீகப் பெயர்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் மீது கிறித்துவப் பெயர்கள் பொறிக்கப்பட்டன.

ஆலிஸ் வாக்கருக்கு பைபிளின் மீது பல கேள்விகள் எழுகின்றன. 

பைபிள் என்று சொல்லப்படும் நற்செய்தியில் மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படும் ஒரு வசனம் ”அடிமைகளே உங்கள் எஜமானருக்கு கீழ்படிந்திருங்கள்”  என்பதாகும். அதற்கான விளக்கத்தையும் அந்த எஜமானரே போதித்து இருப்பார் என்பதில் ஆச்சரியமில்லை என்கிறார் வாக்கர்.  இயேசுவுக்கும் பைபிளுக்கும் இன்று தரப்படும் புனித உருவத்தை, புரட்சிகர சாயத்தை அவர்  உதிர்த்துக் காட்டுகிறார். 

இங்கு தமிழகத்தின் புலமைத்துவ சான்று ஒன்றைத் தருவது என் கடமையாகும். ஈராயிரம்  மூவாயிரம் ஆண்டுகள் முந்திய வேதத்தை இப்போது நமது தலைகள் தாங்காது. எக்காலத்துக்கும் கேள்விக்குட்படுத்தக் கூடாதவை அவை. எந்த ஒன்றையும் சமகால நிலைப்பாட்டில்  விமர்சனம் செய்வது அந்த புள்ளியை நோக்கிச் செல்வது பாவலர் இன்குலாபின் நிலைப்பாடு. இந்த அடிப்படையில்   திருவள்ளுவரின் பெண்ணியப் பார்வையை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். அதன் காரணமாக அவரது ஆய்வு, மேற்கொண்டு செல்ல இயலாது முடக்கப்பட்டது. சலிப்பு சோர்வு என எதனையும் வாழ்வில் கண்ணுற்றிராத   அவர் எதுக்கு இந்த   மாரடிப்பு என்று ஒதுங்கினார். சமுதாய அறிவியல் வளர்ச்சியில் கண்டடையும் விமர்சனத்தை ஏற்காத மனம்தான் மனுசனுக்கு முதல் எதிரி. 

“ஒரு மனிதனின் ஆன்மாவைச் சிறை பிடிப்பதில் உள்ள புத்திசாலித்தனம் அந்த கண்ணுக்குத்தெரியாத சிறை அவனுக்கு ஏதோ ஒரு வகையில் சுகமாக தோன்றிவிடும் என்பதுதான்” ஆலிஸ் வாக்கர் பதிவிடுகிறார். சீலிக்கு அறுபது ஆண்டுகளாய் அடிமையின் சிறை சுகமாகவே தோன்றியது. மிஸ்டர் ஆல்பர்ட் என்ற ஆண் உண்டாக்கிய  சிறையிலிருந்து வெளியேறி – அதுவும் பையப் பைய, ஒரு குழந்தையின் தத்தக்கா புத்தக்கா நடையில் புதிய இடத்துக்கு , பரிதாபத்துக்குரியவளாய் வந்து சேருகிகிறாள். ஷூக்  ஏவாரி ஒரே தாவலில் வந்தடைந்த புள்ளியை சீலி வந்து சேர வாழ்நாள் ஆனது.  

ஆல்பர்ட்டிடமிருந்து வெளியேற சீலி வெளியேற முடிவு செய்ததை ஷூக் அவனிடம் தெரிவிக்கிறாள். 

”சீலி எங்களோடு வருகிறாள்” 

ஆண் மகனின் தலை சுழன்று பின் நேரானது. ”என்ன சொன்னாய்?”

 ”சீலி என்னோடு மெம்பீஸூக்கு வருகிறாள்”

“அது என் பிணத்தின் மீதுதான் நடக்கும் ”

 “உனக்கு அதுதான் திருப்தி அளிக்கும் என்றாள் நான் என்ன செய்யமுடியும்”  ஷூக் கொஞ்சம்கூட அலட்டிகொள்ளாமல் சொன்னாள் (பக்கம் 243).

 சீலி, மிஸ்டர் ஆல்பர்ட் என்ற ஆணின்  சிறையிலிருந்தது வெளியேறிய பின் அந்த ஆண் ஒன்றுமே இல்லாத நோயாளியாக ஆகிப்போனான். “நான் அங்கிருந்து போன பிறகு ஆல்பர்ட் ஒரு பன்றியைப் போல் வாழ்ந்ததாய்ச் சொன்னாள் சோபியா. வீட்டை மூடியே வைத்திருந்ததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியிருந்தது. விடாப்பிடியாக மகன் ஹார்ப்போ உள்ளே நுழையும் வரை அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டைச் சுத்தம் செய்து உணவு கொண்டு வந்தான். அவனுடைய அப்பாவை குளிப்பாட்டவும் வேண்டியிருந்தது; அதில் எதையுமே தடுக்க இயலாத அளவுக்கு அவர் பலவீனமாகவும்  புத்திசுவாதீனமற்றும் இருந்தார்”   

சீலியின் விடுதலை தெரியப்படுத்தும் சேதி ‘ஒவ்வொரு பெண்ணும் விடுதலையாகிற போது. ஒவ்வொரு ஆணும் ஒரு புத்தி பேதலித்த சீக்காளியாகி விடுகிறான் என்பது தான்’.   

”நான் அந்த வயதான மனிதனிடமிருந்து முதலில் நகர்ந்தது மரங்களுக்கு. பிறகு காற்றுக்கு, பிறகு பறவைகளுக்கு, பிறகு மனிதர்களோடு”  (பக்கம் 139) என்கிறாள் சீலி.

நாவல் முழுவதும் சீலி,நெட்டி,  ஷூக், சோபியா, ஸ்வீக் என்று பெண்கள் இயக்குகிறார்கள். ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் அவர்களின் பயணம்  இருந்தபோதும், ஆண்களிலிருந்து விடுதலை பெற்ற பிறகும் ஆண்களை இயக்குபவர்களாகவே இருக்கிறார்கள்.

அதிகாரம் என்பது சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காடு. அது பூத்துக் காய்த்து வெடித்தால் நெருஞ்சிமுட்கள் கால்களில் பொத்தும்; கைகளால்  எடுக்க கைகளில் பொத்தும்.  விடுதலையான சீலி கத்துகிறாள் ”பிரபஞ்சமே இதையும் கேள். நான் ஒரு பிச்சைக்காரி, கறுப்பி, குரூபி, சமைக்கத் தெரியாதவள். ஆனால் நான் உன்னிடம் வந்து விட்டேன்” .

’ஆமென்’ என்றாள் ஷூக் ஏவாரி. 

ஏற்கனவே பேசப்பட்டதும் எழுதப்பட்டதுமான மொழியிலிருந்து இது வித்தியாசப்பட்ட மொழி. இது பெண்ணின் மொழி. ஆலிஸ் வாக்கரின் அத்தனை பாத்திரங்களும் பேசும் மொழி. முந்திய தலைமுறைகளின் பெண்கள் தவறவிட்டிருந்த மொழியை அவர்களுக்கும் சேர்த்து இந்தப் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள்.  

இந்தப் பெண்களில் மதிப்புறு மனுஷிகளாக ஷூக்கும் சோபியாவும் தென்படுகிறார்கள். உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் நல்லா வாய்ச்ச ஆள் சோபியா. மேயர் மனைவியையும், தன்னைத் தாக்கிய மேயரையும் நடுத்தெருவில் புரட்டி புரட்டி எடுத்தவள் சோபியா. சுதந்திர தாகம் கொண்டவள். ஷூக் ஏவாரி  மிஸ்டர் ஆல்பர்ட்டின் காதலியாக இருந்தவள். மனைவியாக வந்திருக்க வேண்டியவள்.. பெற்றோர் சொல் தட்ட இயலாமல் ஆல்பர்ட் இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறான். மூன்று குழந்தைகள் பெற்ற முதல் மனைவியின் மறைவுக்குப்பின் சீலி இரண்டாம் தாரமாக  வாழ்கிறாள். எங்கே அவள் வாழ்ந்தாள், ஒருபோதுமில்லை. ஒருவேளை ஷூக் அவனுக்கு மனைவியாக ஆகியிருந்தாலும். அவனுடைய ஆணாதிக்க கொடூரத்தை தாங்கிக் கொண்டிருந்திருக்க மாட்டாள் அந்தக் கலைவாணி, பாடகி, பேரழகி, சுதந்திரப் பறவை. அவளுடைய இயல்புக்கு உடனே பிரிந்து சென்றிருப்பாள்.  

ஒவ்வொருவரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எந்தளவு முதன்மையானதோ, அந்த அளவு முக்கியமானது அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பது.

’நான் சொர்க்கபுரி வாழ்விலிருந்து இந்த மண்ணைப் பார்ப்பவன் அல்ல. சாதாரணர்களிலிருந்து உலகுக்கு வந்தவன்; நானொரு தொழிலாளி குடும்பத்தில் தோன்றி வந்தவன்; நானொரு கருப்பு அடிமையாய் உதித்தவன்; தாழ்த்தப்பட்ட அடையாளத்துக்குள் வளர்ந்தவன்’ - போன்ற உணர்த்தி இருந்தால் போதும். எழுத்து பேச்சு உரையாடல் சமூகத்தின் உள்ளில்  விதைத்தல் என ஏதோ ஒரு தளச் செயல்பாட்டில் இருப்போர் அனைவரும் வழிகாட்டும் தகுதி கொண்டோரே.

வெள்ளைக் கொழுப்புக்கு மினுமினுப்பு சேர்க்க, ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டல மண்ணிலிருந்து தாவரங்களிலிருந்து அவன் உரையாடிய மரங்களிலிருந்து பறித்து அடிமைக் கப்பல்களில் இழுத்து வரப்பட்ட உடன்பிறப்புகளின் கதையை ஆலிஸ் வாக்கர் பேசியிருக்கிறார்.    

சீலியின் தங்கை நெட்டி ஆல்பர்ட்டிடமிருந்து தப்பிக்க ஆப்பிரிக்க கண்டத்தின் ’ஒலிங்கா’ என்னும் பிரதேசத்திற்கு சென்று, அந்த மக்களிடையே சமூகப் பணியாற்றுகிறார். மிஸ்டர் ஆல்பர்ட் வஞ்சகமாய் வெள்ளைக்காரர்களுக்கு விற்றுவிட்ட சீலியின் இரு குழந்தைகளை நெட்டி அங்கு காண்கிறார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அக்காவுக்கும் தங்கைக்குமிடையி கடித விசாரிப்புகள் மட்டுமே. நெட்டி ,சீலியின் இரு பிள்ளைகளோடு மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து சகோதரியை நேரில் கண்டு இணைகிற காட்சி;    

”நெட்டியின் பாதம் வாசலில் பட்டதுதான் தாமதம். நான் ஏறத்தாழ இறந்து போனேன். ஆல்பர்ட்டுக்கும் ஷூக்குக்கும் இடையில் நானும், சாம்யெலுக்கும் ஆதமுக்கும் இடையில் நெட்டியும் ஊசலாடினோம். பெருங்குரலெடுத்து அழத்துவங்கிய நாங்கள் குழந்தைகளாக இருந்தநாட்களில் போல தளர்நடையிட்டு  நெருங்கினோம். அந்தத் தொடுகையில் பலகீனமடைந்து  கால்மடங்கி விழுந்து, கட்டியணைத்துக் கொண்டு அங்கேயே சிறிதுநேரம் கிடந்தோம்” (பக்-350).

எழுத்து ஒரு தவம் என்றால் மொழியாக்கம் மற்றொரு தவம். நண்பர்கள், குடும்பத்தினர் கூட்டமைப்பின் துணயுடன் இத்தவத்தில் நிறைய வரங்கள்  பெற்றிருக்கிறார் ஷஹிதா. ஒரு படைப்புக்கு எத்தனை சிந்திப்பும் உழைப்பும் ஆற்றலும் ஒருமை மனோவியலும் தேவைப்படுமோ அத்தனையும் கோருகிற ஒன்று மொழியாக்கம். ’தி கலர் பர்ப்பிள்‘ என்ற ஆங்கிலத் தலைப்பை தமிழில் அதன் தாத்பரியம் குன்றாமல் கொண்டுவர பெரும் முயற்சி கொண்டிருக்கிறார் ஷஹிதா. தலைப்பை அப்படியே பெயர்க்கமல்  ‘கடவுளின் படைப்பு’ சீலியின் கடிதங்கள் என்று இன்னும் என்னவெல்லாமோ எழுதிப் பார்த்ததாக தெரிவிக்கிறார். “அன்புள்ள ஏவாளுக்கு” என தலைப்பைத் தேர்கிறார்.  

“அன்புள்ள ஏவாளுக்கு என்பதில் தொனிக்கும் நாவலில் பயிலும் கடிதத் தன்மையிலும், கறுப்பினப் பெண்களின் வாழ்க்கையையும், அவர்களுக்குள் நிலவும் சகோதரத்துவமும் நட்பும் அவர்களின் துயர் துடைத்து நிமிர்ந்து நிற்க உதவுவதில் இருக்கும் உலகளாவிய தன்மையை ஏவாளின் பெயர் குறிப்பாய் உணர்த்துவதிலும் நிறைகிறேன்”   

வாக்கரின் நாவல் மொழியை உள்வாங்கி அதன் தன்மை மாறாமல் தருவது அசாத்தியமான பணி. இந்த அருமையான பணி அவரைக் கவுரவிக்கும் விருதைக் கோருகிறது. விருதுகளின் காலமிது; திசையெங்கும் விருதுகள்; ஆனால் போர்க்குணப் படைப்புக்களை இங்கு யாரும் கவுரவிக்க மாட்டார்கள்.  கவுரவிப்புக்கும், கனப்படுதலுக்கும் உரியது என்பதை  நிரூபிப்பது இந் நாவலை வாசிப்பதுதான்.

- பா.செயப்பிரகாசம், 19 டிசம்பர் 2019

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி