பா.செயப்பிரகாசத்தின் 'தெக்கத்தி ஆத்மாக்கள்' ஒரு தீவிரமான வாசிப்பு அனுபவம். மண்மேடாகிப் போன கொசக்குடிச் சூளையில் நொறுங்கிக் கி...
பா.செயப்பிரகாசத்தின் 'தெக்கத்தி ஆத்மாக்கள்' ஒரு தீவிரமான வாசிப்பு அனுபவம். மண்மேடாகிப் போன கொசக்குடிச் சூளையில் நொறுங்கிக் கிடக்கும் பானை ஓடுகளையும் வாவளையங்களையும் வெறித்துப் பார்க்கும் ஒரு தெக்கத்தி மனுசனின் பதிவுகளைப் படிக்கும் போது அவை சொந்த அனுபவங்களாகி தண்ணீர் கோலிய கூனைவாலைப்போல் மனசு புடைத்துக் கனக்கிறது.
கண்ணுக்கெட்டியமட்டும் பரந்து கிடக்கும் கரிசல் மையின் காட்சிகள் மெல்ல விரிகின்றன. பாம்பு தவளையை கொஞ்சங் கொஞ்சமாக நமட்டி விழுங்குகிற காலகட்டம். வேலிக்கருவ மரங்களைப்போல் கண்டமானைக்கு முளைத்துக் கிடக்கும் கந்தக ஆலைகள். எறும்புச் சாரியாய் ஆலைகளுக்குப் படையெடுக்கும் குழந்தைகள், குமருகள். கிராமத் தெருக்களில் நாகரீகம் அவுத்துப்போட்டு ஆடுகிறது.
சமூக, குடும்ப உறவுகள், கலை, இலக்கிய மதிப்பீடுகள் என்று சகல கட்டுமானங்களும் இடிந்து சரிந்து நொறுங்குகின்றன. அந்த இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் உழக்கரிசிச் சீவன்களின் முக்கல் முனங்கல்கள் ஊமாங்காடையைப்போல், மாடப்புறாவைப்போல் விட்டுவிட்டுக் கேட்கின்றன. இது பெரிய சோகம். மலைப்பைத் தருகிற, வியக்க வைக்கிற, திகைப்பூட்டுகிற வரலாற்றுச் சோகம். இந்த இழப்புச் சோகந்தான் இந்நூல் முழுக்க இழையோடுகிறது.
எத்தனை மனுசர்கள். சூல்கொண்ட மழைமேகங்களாக, இசைப் பெருக்கில் மருகால் பாயும் கண்மாய்களாக, அத்துவானக்காட்டில் அததுபாட்டுக்குப் பூத்து மணம் வீசும் மஞ்சணத்திப் பூக்களாக நெஞ்சுக்குள் ஈரத்துடன் பதியமிட்டிருக்கிறார்கள். நிறையநிறைய அனுபவங்களைச் சொல்லுகிறார்கள். கனத்த சோகங்களை இறக்கிவைத்துத் தவிப்பாறுகிறார்கள்.
வெள்ளாவிச் சோறு வெறுத்துப்போய் நவதானியச் சோறுகளுக்காக ஏங்கித் தவிக்கிறது முந்திய தலைமுறை. நடப்பு அனுபவங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாத அதிகாரிகள் கிணறு வெட்டிப் பாழாக்கிய பைத்தியக்காரத் தனத்தைச் சொல்லிப் புழுங்குகிறார் ஒரு அனுபசாலி.
அரசியல்வாதிகளில் துப்புக்கெட்டவர்கள் துப்புக்கூலி வாங்குகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் லிங்கம்பட்டி கிட்ணம்மாளின் குணம் மாறவில்லை. கலைச் சமுத்திரமாக விளங்கிய சேதுராமன் சோகச் சின்னமாக மாறுகிறார்.
ஒருகாலத்தில். ரெட்டிப் பெண்ணைக் காப்பாற்றிய கூத்தாடி வம்சத்தின் மிச்சகொச்சமான கழைக்கூத்தாடி வயிற்றை நிரப்புவதற்கு உதவாத ரெட்டி வம்சத்தை நோக்கி மண்ணைவாரித் தூற்றுகிறான். நீதிக்கருப்பனின் இம்சை தாங்காமல் அவன் கதையையே முடித்து நினைவுச் சின்னமாகிறாள் ரங்கம்மா.
மாட்டு வண்டியை விற்று காடை வாங்குகிறார் ஒரு ஜமீன்தார். காடைத் தட்டையும் பத்தாயத்தையும் வீசியெறிந்துவிட்டு மாமிச வாடையற்ற வாழ்க்கையைத் தொடங்குகிறான் அழகர் செண்பகம். தொழில் நேர்த்திக்குப் பரிசாக பதினாறு குருக்கம்வரை கம்பெறிந்து சேர்வைக்காரிடம் நிலம் பெறுகிறார் சாயக்காரர்.
இப்படி எத்தனையோ மனுசர்கள் ஆழத் தடம்பதிக்கிறார்கள். செயப்பிரகாசத்தின் அழகியல் குழைந்த கவிதை நடையிலும் கதைசொல்லும் பாணியிலும் இவர்கள் அசலாக உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே அருமையான சிறுகதைகளாகவோ குறுநாவல்களாகவோ வடிவம் பெற்றிருக்க வேண்டியவர்கள். ஆனால் அசைபோட அவகாசம் இல்லாமலோ அனுபவங்களில் சுவர்ந்து நனையமுடியாமலோ அந்தப் படைப்பு நிலை கைகூடி வரவில்லை.
சிவசங்கு என்ற அடித்தள மனுசன் காவியப் பாத்திரத்துக்கு நிகரானவர். அவரது வாழ்க்கை நல்ல குறுநாவலாக வந்திருக்க வேண்டியது. கம்மியான எஈடுபாட்டினாலோ என்னமோ சேர்மானமில்லாமல் கொலுக்கொலுவாகச் சிதறிவிட்டது. நசிவுக்கு நடுவே பீறிடும் அவரது எதிர்ப்புக் குணங்களின் ஆதங்க வெளிப்பாடும் சோகத்தைத் தழுவும் முடிவும் சிறந்த கதையாகச் செதுக்கப்பட்டிருக்கலாம்.
கரடுமுரடான குளுவக்குடியில் பூத்து ராமக்காளை என்ற கலைஞனைச் சூடிக்கொண்டவள் மூக்கம்மா. இரு கலைஞர்களின் இசை உலகம் மனசுக்கு இசைவான உலகம். அவர்களது இசைச் சேர்க்கையில் அரும்பும் ஒரு அழகிய மொட்டு அனியாயமாகப் பலியாகிறது. இந்த அனுபவங்களை உணர்த்துவதற்கு குறுநாவல் தான் சரியான வடிவமாக இருக்கமுடியும்.
சாவல் சண்டையே தஞ்சமாகக் கிடக்கும் மல்லையா எப்பேர்ப்பட்ட பாத்திரம். கவுத்திக்கிடக்கும் பானைமீது எஞ்செவனே என்று உறங்கும் சாவல்களை உசுப்பி சாராயம் ஊற்றி போதையேற்றி கத்தி கட்டி விட்டு சண்டையிடவைத்து வேடிக்கை பார்க்கும் மல்லையாக்களால் செத்துப்போனவை எத்தனை வெட்டுப்பட்டதும் குத்துப்பட்டதும் சாவல்கள் மட்டுந்தானா. இந்த குரூரமும் சோகமும் குறுநாவல் வடிவம் பெற்றிருந்தால் அதன் தாக்கமே தனிதான்.
“ஜெருசலேம்', “சரஸ்வதி மரணம், “தாலியில் பூச்சூடியவர்கள்” போன்ற கச்சிதமான கதைகளைப் படைத்துள்ள செயப்பிரகாசம் என்ற கலைஞனிடமிருந்து, அனுபவங்களை நேர்த்தியாகவும் நுட்பமாகவும் பின்னத்தெரிந்த படைப்பாளியிடமிருந்து இலக்கிய உலகம் எதிர்பார்ப்பது அவற்றிற்கு நிகரான கதைகளையும் அடுத்தகட்ட குறுநாவல்களையும் ஆழமான அகலமான நாவல்களையுந்தான்.
இந்த நூலில் உள்ளவற்றை கட்டுரைக் கதைகள் என்பதா இல்லை கதைக் கட்டுரைகள் என்பதா. இயல்பான அனுபவங்கள் அமுங்கி கருத்துச் சவாரியில் படைப்புநிலை நீர்த்துப்போய் கட்டுரைத் தன்மை மேலோங்கியிருக்கும் கதைகளை கட்டுரைக் கதைகள் என்று சொல்லலாம். உணர்வுகள் கோர்க்கப்பட்ட, கதையம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாமல்லவா. அப்படியானால் இவை கதைக்கட்டுரைகளே. அந்த விதத்தில் இந்தப் புதுவகையினை வரவேற்கத்தான் செய்யணும்.
- பூமணி (ஏலேய்)

கருத்துகள் / Comments