விஷக்கடி
அது மேல் நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை.
வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. ''ஸாரி ஸார்'' என்ற அழைப்புக் குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது.
காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதி விறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகை போல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன.
இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை.
கீழ் வீடு காலியாக இருந்தது. நல்ல வாடகை, கிடைகிற வரை வீட்டுக்காரர் வாடகைக்கு விடப்போவதில்லை. செண்பக தேவியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தார். வீடு பார்க்க வருகிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் வீட்டைத் திறந்த காட்டவேண்டும்.
''இதோ வர்றேன்''
எழுந்து வீடு காட்டுவதற்காக கையில் சாவியை எடுத்துக்கொண்டு கீழிறங்கினாள்.
கீழ்வீட்டுக்கு ஒரு அழைப்பு மணியும், மேல் வீட்டுக்கு ஒன்றும் தனித்தனியாக இருந்தன. அம்புக் குறியிடப்பட்டிருப்பதைப் பார்த்து, வலது பக்க அழைப்பு மணியை அழுத்தியிருக்க வேண்டும்.
அழைப்பு மணிக்கு பதில் அவரே குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார். வந்தவருக்கு அவ்வளவு விபரம் பத்தாது.
களைத்து வாசற்படியில் உட்கார்ந்து முட்டிக் காலில் தலைசாய்த்திருந்தார். செண்பக தேவிக்கு முதுகுப் பக்கம் முதலில் தென்பட்டது.
காலடிச் சத்தம் கேட்டு, விருட்டென்று தலை திரும்பினார்.
''ஐயா நீங்களா?''
செண்பகதேவி அதிசயித்து நின்றுவிட்டாள்.
அந்த மனிதரது கடந்தகாலத்துக்கும், கிழிந்த அழுக்குத் துணிபோல் நிற்கும் நிகழ்காலத்துக்குமிடையே எட்டு வருடம் ஓடிவிட்டது. செண்பகதேவி இரண்டுபிள்ளைகளுக்குத் தாயாகிவிட்டாள்.
''ஞாபகம் இருக்கா தாயீ.....'''
இழந்த குரல் இழுவையாய் வந்தது.
''இல்லாம என்ன?''
ஆதரவாய் மேலே கூட்டிக் கொண்டு நடந்தாள்.''
மதுரைக்கார முருகையா வீடு இதுதானே?''
எட்டு வருசங்கள் முன் ஊரில் அவரை முதன் முதல் செண்பகதேவி சந்தித்தது ஒரு தனீ நாடகம். அவர் கேட்டுக் கொண்டு வந்தது, நத்தையின் ஊர்தல்போல் தயங்கித் தயங்கி விசாரித்தது.
மதுரைக்கார முருகையா வீடு இதுதானே?"
வீட்டு முன் நின்று அவர் கேட்டார். ''நீங்க யாரு?'' செண்பகதேவி எதிர்க்கேள்வியடித்தாள். வீடு தப்பிருச்சா? அவர் ஏறிட்டுப் பார்த்தார்.
''நீங்க யாரு?'' வீடு ஒன்னும் தப்பலை. இங்கதான் இருக்கு''
அவள் கேட்ட கேள்வி பதிலளிக்கப்படாது அப்படியே கிடந்தது.
''நா சோறு வாங்குறவன். கொஞ்சம் கோழிக் கறியும் சோறும் இருந்தா போடு தாயீ'' இரண்டு கையை அளவாய்க் குவித்துக் காட்டினார்.
''அதென்ன கோழிக்கறி, சோறுன்னு திட்டமா கேக்குறீங்க?''
''இன்னைக்கு விசேஷம். பொங்கலுக்கு மறுநாள். கறிநாள். எல்லா வீட்லயும் கவுச்சி இருக்குமின்னு தெரியும் அதான்
கேட்டேன்''.
புதுவெள்ளை வேட்டி, புதுச்சட்டை கோடித் துணி என்பதற்கு வேட்டி முந்தி, சட்டை நுனியில் மஞ்சள் தடவிய அடையாளம் கத்தரிப்பூ வண்ணத்தில் சன்னக்கரையுள்ள துண்டு தோளில் தொய்வாய்க் கிடந்தது. தோற்றத்தில் புதுமாப்பிள்ளை மாதிரியான ஒருவர் சடாரென்ற பிச்சைக்காரராக ஆவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ''அன்னம் போடுங்கம்மா'' என்று இழந்த குரல் அந்தத் தொண்டைக் குழியிலிருந்து எழுந்து வரும் என்றோ, குரல்போகும் திசையில் ஏனம் ஏந்திய இருகைகளும் நிற்கும் என்றோ அறிகுறி தெரியவில்லை. முன்னே போகவிட்டு, பின்னே பார்க்க வைக்கும் அந்த உடற்கட்டுமானம், ஐம்பத்தைந்து வயதைத் தூரத் தூக்கியெறிந்திருந்தது.
''அப்படியும் சோறு வாங்க ஏனம் ஒன்னும் கொண்டு வரலை?''
''ஏனம் இல்லைன்னா என்ன? ஒரு இலை வாங்கிட்டு வந்து ஓரமா உட்கார்ந்து சாப்பிட்டுப் போறேன்''
''ஐயா வாங்க வாங்க ஒங்களத் தேடித்தான் மேற்கே போயிருந்தேன்''
எசப்பாட்டுப் போல் செண்பகதேவி பார்வைக்காரர் உரையாடலை உடைத்துக்கொண்டு முருகையா படபடவென்று உள்ளே வந்தார்.
''பாயை எடுத்து விரிம்மா''
வந்தவர் பார்வை பார்க்கிற சீனி குருசாமி என்பது அப்போதுதான் தெரிந்தது. யாரைத் தேடி மேற்குத் தெருப்பக்கம் அய்யா போனாரோ, அவர் ஏற்கனவே வந்து விட்டார்.
''விசாரணை கடுமையாத்தான் வந்திச்சி'' நைப்பாய் சிரித்தபடியே உள்ளே வந்து உட்கார்ந்தார் பார்வைக்காரர். ''தாயி வேப்பிலைதான் பிடிக்கலை. எல்லாக் கேள்வியும் கேட்டிருச்சி.''
செண்பகதேவிக்கு வெட்கமாக இருந்தது. அய்யா தேடிப்போன ஆள் இவர்தான் என்று முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே என்று நினைத்தாள். இன்னார் வீட்டில் பெண் இருக்கிறது, இன்னின்னார் வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு இணைத்து வைப்பது என்ற சுபகாரிய வேலை அவருக்கு இருந்தது. மதுரைக்கார முருகையா வீட்டில் ஒரு பெண் இருக்கிறது. போய்ப் பாருங்கள் என்று சொல்லி பார்வைக்கார சீனிகுருசாமி வந்தார். வந்த இடத்தில் வேலை மாறிவிட்டது. உழைக்கிற மாடு ஊர்மேல போனா அங்கயும் ரெண்டு ஏரு கட்டி உழச் சொல்வாங்களாம், என்கிற கதையாக அவர் நிலை ஆகிவிட்டது. பெண்ணோட பெற்றோரைச் சந்தித்துப் போக வந்த இடத்தில் கையில் வேப்பங் குலையைக் கொடுத்து, கொஞ்சம் பார்வை பார்த்துப் போகச் சொன்னார்கள். வந்த காரியத்தை வெளியில் விடாமல், மடக்கி உள்ளே வைத்துவிட்டார்.
வலது காலை குத்துக்காலிட்டு, இடதை மடக்கி மணப்பெண் போல் உட்கார்ந்தாள் செண்பகதேவி. அவளது கை வலதுகால் மேல் கிடந்தது.
''கையைக் கீழே போடு தாயி''
பார்வைக்காரர் சொன்னார். எந்த அங்கத்துக்கு பார்வை பார்க்கிறாரோ, அந்த அங்கத்துக்கு மறைப்பு கூடாது. செண்பகதேவிக்குள் குமரிக் கூச்சம் ஓடியது. வலது பாதத்தின் மேல் தொங்கவிட்டிருந்த கையை எடுத்து கீழே விட்டாள். கல்லூரிப் படிப்பு முடித்திருந்தாள். அஞ்சல் வழிக்கல்வியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தாள். அது கிராமம் அவள் பெண். மனிதவெக்கை வீசியடிக்க பெண்டுகள் நெருக்கியடிக்கும் இடத்தில் உடலை கூச்சத்துடன் நெளிந்தாள். அவளுக்கு அண்டக் கொடுத்து உட்கார்ந்திருந்த அம்மா இடுப்பில் லேசாய்க் கிள்ளி ''நெளியாதே'' என்றாள். இன்னும் நெளிந்தாள்.
சீனிகுருசாமி, செண்பகதேவியின் வலதுகால் பாதத்தை தடவினார். கணுக்காலிலிருந்து முழங்கால்வரை ஆமை முதுகு போல் வீங்கி இருந்தது; காலின் மேல் ஒரு ஆமை உட்கார்ந்திருக்க அதைத் தூக்கிக் கொண்டு நடப்பது மாதிரி இருந்தது. விஷக்கடி எதனால் என்று அறிய முடியவில்லை.
இராமநாதபுரம் வரை போய்ப் பார்த்துவிட்டாள். மருத்துவ வகைகள் எவை எவை உண்டோ, அவைகள் இருந்த இடத்துக்கெல்லாம் போய்ப் பார்த்தாகிவிட்டது. கடைசியாய் எம்.டி.டாக்டரிடம் காட்டினார்கள். நீர்க்கட்டு அல்லது வாயுக் கோளாறாக இருக்கும் என்றார். வாயுத்தொல்லையென்றால் உடலின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் வீக்கம் முழுங்காலின் கீழ்ப்பகுதியிலேயே தங்கிவிட்டது; தொடர்ந்து ஊசி போட்டால் சரியாகிவிடும் என்றார். சரியாக இல்லையென்றால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். விஷக்கடி என்பது நாட்டுப்புற வார்த்தை. பொதுவான ஒரு சொல். அப்படியொரு சொல், மருத்துவ அகராதியிலோ, ஆங்கில மருத்துவப் புழக்கத்திலோ கிடையாது என்றார் எம்.டி.மருத்துவர்.
இங்கிலீஷ் மருந்தை உடனே நிறுத்தணும் என்பது பார்வைக்காரர் போட்ட கட்டளையாக இருந்தது; கையில் வேப்பங்குலை எடுப்பதற்கு முன்பே பார்வைக்காரர் போட்ட நிபந்தனை; இங்கிலீஷ் மருத்தின் பேரில் பார்வை வைத்தியத்துக்கு அதிகாரம் இல்லை.
''இந்த வீடு ஒனக்கு சொந்த வீடாம்மா?''
முகத்துக்கு நேரே உயர்ந்த பார்வைக்காரரின் சுட்டுவிரலையே பார்த்தாள் செண்பகதேவி.
''இந்த வீடு ஒன்னது இல்லை, இல்லையா?''
அவளுக்குப் புரியாததால் ஒரு பதிலும் இல்லை. இவர் என்ன கேட்கிறார் என்ற கேள்வி குறியுடன் அம்மா பக்கம் திரும்பினாள். அம்மாவுக்குப் புரிந்தது. சிறு சிரிப்புடன் ''நீங்க சொல்றது நிஜம்தான்'' என்றாள். பார்வைக்காரர் உலக யதார்த்தத்திலிருந்து எடுத்து வைத்ததை நாற்பது வருஷ வாழ்வின் சுயானுபவத்திலிருந்து அம்மாவினால் எளிதாகப் பிடித்துக்கொள்ள முடிந்தது. ''ஆமா, ஆமா'' என்றாள்.
கல்யாணமான பின் இன்னொரு வீட்டுக்கு நடக்க வேண்டியவளாக பெண் பிறவி இருக்கிறாள். இந்த வீடு அவளுடைய வீடு இல்லை. போய்ச் சேருகிற இடம் அவளுக்குச் சொந்தவீடு, வாழ்க்கையின் கால்ப் பகுதி மட்டுமே பிறந்த வீட்டில் கழிகிறது. மீதி முக்கால் வாழ்க்கை அல்லது முழுவாழ்கை, இன்னொரு வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அந்த இன்னொரு வீட்டுக்குச் சொந்த வீட்டுக்குப் போக காத்துக்கொண்டிருக்கிறாள்.
சொந்த வீட்டுக்குப் போய்ச் சேருகிறபோது உடம்பில் ஒரு ஒச்சத்துடன் எந்தப் பெண்ணும் போகக் கூடாது. ''கல்யாணக் குத்தம் எந்தலையில் விழுந்திரக்கூடாது பாரு அதுக்குத்தான் இந்தக் குருவங்குலையை (வேப்பங்குலை) எடுத்தேன்''
வேப்பங்குலை என்ற வார்த்தையை அவர் ஒரு போதும் உச்சரிப்பதில்லை. சில தொழில்களுக்கு தொழில்முறை வார்த்தைகள் இருக்கின்றன. அதைத் தாண்டி வார்த்தைகளை பயன்படுத்துகிறபோது, வீரியமும் மதிப்பும் குறைந்து போகின்றன. தோளிலிருந்த துண்டை இறக்கி, இடுப்பில் சுற்றினார். விபூதிப்பையை எடுத்து நெற்றியில் கைகளில் பூசிக்கொண்டார். ஒரு சிட்டிகையளவு விபூதி எடுத்து, செண்பகதேவியின் நெற்றி உச்சி மேட்டில் வீசினார்.
வேப்பங்குலை உயர்ந்தது. அதற்கு ஒரு உயர அளவு உண்டு. எந்த அங்கத்துக்குப் பார்வை பார்க்கப்படுகிறதோ, அதற்கு ஒரு சாண் உயரத்தில் சுற்றவேண்டும். முதலில் தரைக்கு மேல் பரவிப் பரவி சுற்றியது. படிப்படியாய் அங்குலம் அங்குலமாய் உயரம் கூடிச் சுழன்றது. முகத்துக்கு நேரெதிர் வந்ததும் நின்று கொஞ்சநேரம் தலையை இடப்பக்கம் திருப்பி ஆடியது. பிறகு சர்ரென்ற பறவைபோல் கீழாகப் பாய்ந்து செண்பகாவின் முழங்காலுக்குக் கீழே இப்படியே சுழன்றது. மேலிருந்து கீழாகப் மூன்று தடவை இறக்கினார். இரு கண்களல் நெரியும் நீரை இரு விரல்களால் துடைத்துக் கொண்டேயிருந்தார். வாயிலிருந்து நெரித்துக் கொண்டு வரும் கொட்டாவியை இடது கையால் சுண்டி விட்டுக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் நெரித்துக்கொண்டு வருவது, கொட்டாவி அலகை நெருக்கியடித்து வெளியேறுவது, இரண்டும் பார்வை நன்றாகப் பிடிக்கிறதின் அடையாளங்கள்.
''நல்ல பார்வைன்னா, அப்படித்தான் பிடிக்கும்,'' கூட்டத்தில் ஒருவர் மெதுவாகச் சொன்னார்.
வேப்பங்குலையின் வீச்சுச் சத்தம் தவிர, வேறெதுவும் கேட்காத அமைதி. பேச்சுக் குரலின் சிறு அசைவுகூட அந்த நிசப்தத்தில் கல்லெறிந்தது போல் கெடுத்துவிடலாம்.
இருபுருவங்களுக்கிடையில் நெற்றிப் பள்ளத்தில் பார்வையை நிறுத்தினார். ஓடைக்கரை தெரிந்தது. ஓடைக்கரை மேல் பருவத்திப் பூத்த ஏடை மரம். வெண்குஞ்சங்கள் பின்னிய குடைகள் அடுக்கி வைத்தது போல் பூப்பூத்த நாலடுக்கு ஏடைமரம். பூக்கள் மின்னிய ஏடை மர உச்சியில் உருவு தெரிந்தது. நெற்றிப் பள்ளத்துக்கும் ஏடை மர உச்சிக்குமாக ஒளிப்பாய்ச்சலாய் உருவு வருவதும் போவதுமாக இருந்தது.
"உருவு தெரியுது" தன் புலப்பமாய் வந்தது.
அவரோட ஐயா குருவங்கலை (வேப்பங்குலை) மாற்றிக் கொடுக்கிறபோது, சீனிகுருசாமிக்கு வயது பத்தொன்பது. பரம்பரைக் கணக்கு ஒன்று அதன் பின்னால் இருந்தது. அதை வைத்துத்தான் மாற்றிக் கொடுத்தார். கன்னியாலம்மன் கோயிலில் வைத்து நடந்தது. ஊர் முழுதும் கூப்பிட்டு சாப்பாடு போட்டார். நாலு திசைகளுக்கும் தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பியிருந்தார். நாலு ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், எல்லோருக்கும் சாப்பாட்டுத் திருப்தி முகத்தில் தெரிய, அறிவார்த்தமான ஆட்களெல்லாம் திரண்டிருந்தார்கள். எல்லா கன்னியாலம்மன் கோயில்களுக்கும் முன்னால் வழமையாய் நிற்கும் சூரிமரம் தளதளவென்று பசுமை ஒளியில் சாட்சியாய் நின்றது. தீபாராதனை காட்டி சாமி கும்பிடு நடத்தி குருவாங்குலை மாற்றிக் கொடுத்தார்.
தருமகாரியத்தை ஒப்புக்கொண்ட பிறகு அதை நிறைவேற்றுவதில் கவனம் கொள்ளவேண்டும். ஒழுக்கச் சிதைவு கூடாது. இளவட்ட ஆட்டதை ஒடுக்கிவைத்து விடவேண்டும். துப்புரவாக அதை துடைத்துக் தெளிவாய் பக்தி நிலை பூணவேண்டும். அப்போது உள்சுரப்பு வரும். தெய்வ உரு கிடைக்கும். மூடிய கண்கள் வழியாக பாய்கிற உருவை நெற்றிப் பள்ளத்துக்குள் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அதுதான் நல்ல பார்வை.
சிவலார்பட்டி தாய்க்கிராமம். அதை இட்டுத்தான் சுத்துப்பட்டு கிராமங்கள் முளைத்தன. சவலைப் பிள்ளையாய் தாயின் முந்தானையைப் பிடித்தபடி கிடந்த சுத்துப்பட்டு கிராமங்கள் அதிசயம்போல் சுறுசுறுப்பாக எழுந்து நடமாடிக் கொண்டன. ஈன்ற கன்றுக்குட்டி போல தம்மீது படர்ந்திருக்கிற சோம்பல் கசடுகளை நீக்கிவிட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்றன. படிப்பு, வேலை, வியாபாரம் என்று சேய்க்கிராமங்கள் முந்திக்கொள்ள, வயசாளி போல தாய்க் கிராமம் தவங்கி விட்டது. அய்யா வடக்கே மாடுபிடிக்கப் போனார் ஜோடி 25 ரூபாய். அன்றைக்கு வசமான மாடுகள் சிக்கின. சிவலார்பட்டியில் ஒரு விவசாயி ராத்திரிப் பொழுதில் மாட்டுக்குக் கூளம் பறிக்க படப்புக்குப் போயிருக்கிறார். படப்படியில் கிடந்த ஒரு பாம்பு ''படக்'' கென்று கொத்தியது. நல்ல பாம்பு. விஷம் சிரசுக்கேறி, தள்ளாடிக் கீழே சாய்ந்தார். பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவரைக் கயிற்றுக் கட்டிலில் போட்டிருந்தார்கள். உள்ளூர் மருத்துவன் உள்மருந்துகள் கொடுத்துப் பார்த்தும், அசையாமல் கட்டைமாதிரிக் கிடந்தார். சாயந்தரமானபோது, தேர்கட்டி மயானத்திற்கு எடுத்துப் போனார்கள்.
மாடுகளுடன் அய்யா சிவலார்பட்டிக்குள் நுழைந்தபோது, ஊர் மௌனத்தில் உறைந்து கிடந்தது. காற்றசைவு இல்லை. மயானம் ஊருக்குள் மாறி உட்கார்ந்து விட்டதுபோல் தெரிந்தது. ஒரு பாம்பு, ஊர் மொத்தத்தையும் அரட்டி வைத்துவிட்டிருப்பது தெரிந்தது. அய்யா, கிடு, கிடுவென்று சுடுகாடு நோக்கி நடந்தார். கட்டைகள் அடுக்கிக் கிடத்திய உடல் எருவாட்டிகள் மூடி மூட்டத்திற்குத் தயாராய் இருந்தது. முகம் மீதி வைக்கப்பட்டிருந்தது. சாய்ந்தர இருட்டுக் கவிவைச் சுற்றிலும் அழுது திகைக்கிறவர்களின் முகங்கள் இன்னும் விரைவுபடுத்தியிருந்தன.
அய்யா போனதும் கூட்டம் விலகியது. முகத்துக்கு நேரே காதுகள் வைத்துக் கவனித்தார்.
''ஆள் சாகலே ஊருக்குத் தூக்கிட்டுவாங்க''
எந்தப் படப்புக்கடியில் இருந்து நாகம் தீண்டியதோ, அந்த இடத்துக்கு எடுத்து வரச் சொன்னார். ஒரு குத்து வேப்பங்கொழுந்து, ஒரு கை துளசி இலை, கொஞ்சம் மிளகு, இஞ்சி அரைத்து வரச்செய்தார். கடைவாயை அகட்டி, கெட்டித்த பற்களைத் திறந்து அரைப்படிச்சாறு உள்ளே கொடுத்தார். மளமளவென்று தடையில்லாமல் இறங்கியது. உயிர்கழன்று விட்டதென்றால் அல்லது கழன்று போகிற தருணமாக இருந்தால் பால் விட்டாலும் உள்ளே இறங்காது, மூச்சுக்காற்று தொண்டைக் குழி திறந்து உள்ளே விழுகிறது. கையில் திறமாய் வேப்பங்குலை ஏந்தினார். குருவை நினைத்து வேப்பங்குலையை இரு கைகளிலும் நெற்றிக்கு நேரேவைத்து முருகா...வென்றார்.
"ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வாங்க" என்றார். கண்கள் நீரால் நெரிந்தன. சகல ஜீவராசிகளுக்கும் இரக்கப்பட்டு கருணையால் வாழ்வு எய்திச் செழிக்க வைப்பதாய் கண்ணீர் மளமள வென்று வழிந்தது. அவ்வளவு கண்ணீர் எங்கிருந்தது என்று தெரியவில்லை. வாய், அதக்கி அதக்கி கொட்டாவி பெருக்கெடுத்தது. இடது கையால் கண்களைத் துடைப்பதும், பிறகு அதே கையால் கொட்டாவியைச் சுண்டி விடுவதும் மாற்றி மாற்றி தாளலயமாய் நடந்தது. மந்திரிக்க மந்திரிக்க படப்புக்கு அடியில் ஒடுங்கியிருந்த பாம்பு இருப்பிடம் நீங்கி வெளியில் ஊர்ந்து வந்தது. ஒரு வெள்ளி அருணாக்கயிறு அசைவதுபோல் பாம்பு ஊர்ந்து வந்தது. "பெரிய பாம்பு... பெரிய பாம்பு" கூட்டம் அலறிப்புரண்டது. கட்டையாய்க் கிடந்தவனின் பெருவிரல் முனையில் வாய் பொருத்திய பாம்பு விஷத்தை திருப்பி உறிஞ்சியது. சுழலும் வேப்பங்குலையை நோக்கி தலை தூக்கி நின்றது.
பால் கிண்ணத்தை, அய்யா அதன் முன் வைத்தார். பாலைக் குடித்துவிட்டு அசைந்து அசைந்து கிழக்கு நோக்கி மறைந்தது. விஷம் இறக்க மட்டுமே தெரிந்த ஒரு பாம்பு, சொன்னசொல் கேட்கிற நல்ல பிள்ளையாய், வேப்பங்குலை மந்திரிப்புக்குள் அடங்கிக் கட்டுப்பட்டு நடந்த காட்சி, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
பாம்புக்கடி பட்ட இடத்தை அய்யா பார்த்தார். பல் பதிவு தெரிந்தது.
பாம்பு பல் பதிக்கிற கோணம் முக்கியம். அலகு சாய்த்துக் கொத்தினால் சக்தி கூடுதல். நேரே கொத்தினால் வீரியம் குறைவு கொத்துப்பட்ட சிவலார்பட்டி சம்சாரிக்கு பாம்பின் பல் நேரெ பதிந்திருந்தது. மூன்று பல் மட்டும் தான். நான்கு பல் பதிந்ததென்றால் ஆள் உயிரைக் காலியாக்கி விடும். நல்ல பாம்பு, விரிசங்கட்டை (விரியன் பாம்பு) இரண்டும் பாம்பு வகைகளிலே விஷம் கூடுதலானவை. அந்த சம்சாரியைக் கொத்தி மரணத்திற்குள் அனுப்பியது நல்ல பாம்பு வகை.
மரணத்துக்குள் போன விவசாயியின் உயிரை மீட்டெடுத்துக்கொண்டு வந்த அய்யாவை சிவலார்பட்டி கிராமமே திரண்டு, வண்டிகட்டி, ஊர்வலம்போல் வந்து ஊரில் வந்து விட்டுப்போனார்கள். அவர்களுடன் இரண்டு கோட்டை கம்பம் புல்லும் ஒரு பால்மாடும் வந்தது. அய்யா இறந்தபிறகு அவருடைய சமாதியில் ஒவ்வொரு வருசமும் சிவலார்பட்டிக்காரர்கள் ஊரோடு வந்து குருபூசை நடத்திப்போனார்கள்.
கைக்குள் அடங்கிச் சுற்றிய வேப்பங்குலையில் வேகம் மெல்ல மெல்லக் குறைந்தது. ஓட்டப் பந்தயக்காரன் எல்லையை மிதித்த பிறகு கொஞ்ச தூரம் ஓடி நிற்கிற காட்சிபோல் தென்பட்டது.
''ஒரு குத்து குருவங்குலை'' - சீனிகுருசாமி வேப்பிலையைப் பறித்து அம்மாவின் கையில் கொடுத்தார். அதே மாதிரி கையளவு துளசி இலை, பாகற்கொடி பூவுங் கொளுந்துமாய் அரைத்துச் சாறு எடுத்து உள்ளே கொடுக்க வேண்டுமென்றார். ''இந்தக் கணக்கிலேயே ஒரு வாரம் கொடுங்க, பிறகு நா வந்து பார்க்கறேன்'' என்றார். செண்பகதேவி அர்த்தமுள்ள புன்னகை செய்தாள். இதழ் பிரியாமல் சிரிப்பை உள்ளடக்கினாள். ''என்ன சிரிப்பை மிழுங்குறே?'' கனகு கேட்டபோது ''இல்லே, ஒன்னுமில்லே'' என்றாள்.
மந்திரிக்கிறது மட்டுமல்ல! உள்மருந்தும் கொடுக்கிறார் சுற்றி இருப்பவர்கள் பார்வை பார்ப்பதினால் மட்டுமே நோய் வாசியாகிறது என்று நம்புகிறார்கள். நம்பிக்கையை மட்டுமே கொண்டு அவர்கள் காலத்துக்குள் நகர்கிறார்கள். உடலுக்கு நேருகிற விஷக்கடி மட்டுமல்ல, வாழ்வின் எந்த விஷக்கடியும் இன்றில்லாவிட்டால் நாளை தீரும் என்ற நம்பிக்கையோடு வாழ்வுக்குள் நடக்கிறார்கள். அம்மாவுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது. பார்வைக்காரரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
''பாப்பாவுக்கு இப்ப தூரமா?'' பார்வைக்காரர் கேட்டார்.
''இன்னைக்கு மூனாவது நாள்'' அம்மாவின் வாய்ச்சொல் ரகசியம் போல் மெல்லக் கசிந்தது மாதவிடாய் ஆன பருவத்தில் பார்வை வைத்தியத்துக்கு நோயின் மேல் அதிகாரம் கிடையாது. அதைச் சொல்லிரணுமால்லே என்றார். முடிந்ததுக்குப் பிறகுதான் உள்மருந்து எடுக்க வேண்டும். ஒரு செண்பகதேவிக்கு மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த செண்பகதேவிகளுக்கும் தெரிந்துகொள்வற்கான சேதியாக இருந்தது.
''எல்லோரும் கேட்டுக்கோங்க என்றார்''
சேலைக்குள் பதுங்கியிருந்த கால்களின் நடையில் வித்தியாசம் தெரியவில்லை. கால்கள் பத்திரமாக இருக்கின்றன. ''கால் எப்படியிருக்கு?'' முதல் விசாரிப்பாக அதைக் கேட்க வேண்டுமென்று நினைத்தார் பார்வைக்காரர். கேட்டு அறிந்து கொள்ளத் தயக்கமிருந்தது. நேரடியாகக் கேட்காமல், பார்வையிலேயே தெரிந்துகொள்ள முடியும்.
பார்வை உதவாத இடத்தில் மட்டுமே வார்த்தைகள் உதவமுடியும் கணுக்காலுக்கு மேல் ஆடை கொஞ்சம் தூக்கிக் கொண்டால் போதும்; கண்டு கொள்ளமுடியும் கண்டுகொள்ளும் ஆவலில், கேட்டு அறிந்துகொள்ளும் நினைப்பை மடக்கி உள்ளே வைத்தார்.
''எத்தனை பிள்ளைக?'' பார்வைக்காரர் கேட்டார்.
''ரெண்டு''
பள்ளிக்கூடம் போகுற வயசா?''
''ஆமா, போகுதுங்க''
''எப்ப கல்யாணம் நடந்திச்சி''
பார்வை வைத்தியம் பார்த்து முடித்த அடுத்த வருசமே கல்யாணம் நடந்திருக்கிறது. கல்யாணத்துக்கு கால்கள் தடையாயிருந்திருக்காது. எந்த சொஸ்திக் குறைவுமில்லாததால், கால்களை முன்னிட்டு கல்யாணம் நின்று போகவில்லை என நினைத்தார். ஒரு கத்தைக் காகிதங்களை பையிலிருந்து எடுத்து ''இதப்பாரும்மா?'' என்றார். ''விலாசமெல்லாம் சரியாத்தான் இருக்கு''
''எனக்குத்தான் நிகால் பிடிபடலே.'' ''போன் நம்பர் குறிச்சிருக்கீங்க.
போன் பண்ணியிருந்தா அவருக்குச் சொல்லி கூப்பிட்டு வரச் சொல்லியிருப்பனே''
வெயில் சுருண்ட புழுப்போல் இடம் கண்டுபிடிக்க அலைந்து வதங்கிவிட்டிருந்தார்.
ஒரு விலாசத்தை காட்டி தன் சொந்தக்காரர் இருப்பதாகவும் அங்கே போய் தங்கிக்கொள்ள முடியும் என்றார்.
''ஏன் இங்க தங்கலாம்? அவரு சாயந்தரம் வருவாரு''
பார்வைக்காரருக்கு அது ஒப்புதல் இல்லை. கால்களைப் பற்றி ஐயமறத் தெரிந்து கொள்ளாதபோது, தங்குவது என்ற முடிவு சரியாக வராது. மனசு ஐக்கியப்படாமல் தங்குவது சாத்தியப்படாது. கால்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கின்றன. மனிதனின் மொத்த வாழ்க்கையையும் எடுத்துச் செல்வதாக கால்கள் இருக்கின்றன. கால்களின் நடமாட்டம்தான் மனிதன் இயங்குவதை அடையாளப்படுத்துகிறது. மூளை மண்டலம்கூட, கால் நடமாட்டத்தை வைத்தே அசைவுகளைத் தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது.
சில நேரத்தில் கால்கள், வாழ்க்கையில் உறுதிப்பட தூண்களாக இருக்கலாம், கோபம் கொள்ளும், நேரங்களில் கால் ஒரு துடைப்பம் போலவும் விரியலாம்.
அவர் சாப்பிடுகிற தோரணையைக் கண்டு செண்பகதேவி ஆச்சரியப்பட்டாள். கூர்ந்து கவனித்தாள், சாப்பிடுகிறபோது மன்னன் மாதிரி உட்கார்ந்திருப்பாரே. அவர் இப்போது தென்படவில்லை. விரலால் நோண்டி நோண்டித் தாளித்த கருவேப்பிலை சோற்றில் கிடக்கும் சீரகம், கடுகு எல்லாவற்றைம் நுணுக்கு நுணுக்கி எடுத்து வைத்துவிடுவார். அவர் கழித்து வைத்தது மட்டும் ஒரு குத்து (கையளவு) வரும். இப்போது தென்படுகிறவர் எதையும் கழிக்காத மளமளவென்று உணவை உள்ளே தள்ளுகிற ஒரு புதிய மனுசர்.
அவருக்குள்ளிருந்த பழைய கம்பீரம் கழன்று வெகுநாட்களாகியிருந்தன. வளமான சொல், எடக்கு முடக்காய் பேசும் பேச்சு என சகலமும் காணாமல் போயிருந்தன. அவரிடமிருந்து தொலைந்து போனவைகளில் முக்கியமான பொருள் எந்நேரம் எங்கிருந்து பார்த்தாலும் இருட்டையும் பளிச்சென வெளிச்சமாக்குகிற முகம்.
புறப்படுகிற போது சொன்னார். பரிதாபமாக இருந்தது.
''ஏதாவது ஒரு வேலை இங்ஙன பாக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு தாயீ'''
''என்ன வேலை?''
''கடையில, ஒட்டல்லே கணக்கெழுதுற வேலை''
ஏற்கனவே சில இடங்களில அந்த வேலை பார்த்திருக்கிறார். சொந்தக்காரர் வீட்டு முகவரி கொடுத்தார். அந்த விலாசத்தில் தான் இருப்பதாகவும், சொல்லியனுப்பினால் உடனே புறப்பட்டு வந்து விடுவேன் என்றும் சொன்னார். அவருடன், செண்பகதேவியும் கீழிறங்கிய போது தடுத்து விட்டார். ''வேண்டாம் நா போய்க்கிறேன்'' என்றார். கடைசிப் படிக்கட்டில் நின்றபடி தனக்கு மேலே படிக்கட்டுகளில் இறங்கிவரும் கால்களைப் பார்த்தார்.
வீதியில் இறங்கிய பார்வைக்காரர் கேட்டார் ''அவரு ஒனக்குச் சொந்தமா?''
''ஆமா'' அவள் சிரித்த சிரிப்பில் ஏன் அப்படிக் கேட்டீங்க என்ற கேள்வி வெளிப்பட்டது.
விஷக்கடி நீர் ஏறி வீங்கி பனை நிறத்தில் இருந்த அந்தக்கால் தன் முகத்தில் ஒங்கி ஒரு உதைவிட்டது போலிருந்தது, இரண்டு வழிகளில் மட்டுமே அந்தப் பெண்ணுக்கு சாபவிமோசனத்தின் கதவுகள் திறந்திருக்க முடியும். ஒன்று சொந்தக்காரன் என்பதால் திறக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஏராளமான சீர்வரிசை, சொத்து, ரொக்கம் ஆகியவைகளால் கறுத்து வீக்கமான அந்தக் கால் மறைக்கப்பட்டிருக்கும்.
பார்வைக்காரரின் கால்கள் மண்ணில் உறுதியாகப் பதியாமல் தளர்ந்தன. எதையோ தொலைத்து விட்டவர் போல் கூனிக்குனிந்து நடந்து போனவரை செண்பகதேவி வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக