ஹினேர் சலீமின், “அப்பாவின் துப்பாக்கி” - ஒரு குழந்தைப் போராளி வளரும் கதை


1950, 60-களின் தமிழிலக்கியம் மொழியாக்கங்களின் பொற்காலமாக மலர்ந்தது. தாராசங்கர் பானர்ஜியின் கவி, விபூதி பூஷன் பந்தோபாத்யாவின் வனவாசி, தகழியின் செம்மீன், நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை (சிரஸ்மரணா - கன்னடம் – 1954) பிறமொழிகளின் சுரங்கத்திலிருந்து, புதுப்புது தங்கப் பானங்கள் வெட்டியடுக்கப்பட்டன. இந்திய மொழிகளிடமிருந்து மட்டுமேயல்ல; உலக இலக்கியங்கள் பல தமிழில் மறு பிறப்பெடுத்தன. புதுப்பிறப்பெடுத்த இவை தமிழ் இலக்கியத் திசையைத் திருப்பி வைத்தன.

முதலில் அதிக எண்ணிக்கையில் வந்துடைந்தவை ஆங்கில இலக்கியங்கள்; சேக்ஷ்பியர், மில்டன், ஷெல்லி, வேர்ட்ஸ் வொர்த் போன்று ஆங்கில மொழிக் கவிஞர்கள் அறிமுகமாயினர். அது நிறைவு செய்யாத உரை நடைப்பரப்பில் பிரெஞ்சிலிருந்து விக்டர் கியூகோ, எமிலிஜோலா, மாப்பஸான், ஆல்பர்ட் காம்யூ, சாத்தரே போன்ற நவீன எழுத்துப் படைப்பாளிகள் வந்தடைந்தனர். ஆங்கில இலக்கியங்களுக்கு அடுத்த நிலையில் பிரெஞ்சு மொழியாக்கங்கள் குவிந்தன.

இந்த விரிசையில் காலச்சுவடு பதிப்பக வெளியீடான, ஹினார் சலீமின் ‘அப்பாவின் துப்பாக்கி’ புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரால் மொழியாக்கம் செய்யப்பட்டள்ளது. திரு.நாயகர், தமிழுக்கு நன்கு அறிமுகமான ஒரு மொழியாக்கப் படைப்பாளி. மொழியாக்கம் மூலத்துக்கு விசுவாசமாகவும், அதே பொழுதில் அழகாகவும் இருக்க வேண்டும் என்னும் இலக்கிய விதியை நாயகர் நிறைவு செய்துள்ளார். இந்த ஒரு புதினத்தில் மட்டுமல்ல, அவரது மொழியாக்கம் அனைத்திலும், இந்தச் சலங்கை நாதம் கிலுகிலுத்து, ஒரு இசை இனிமை இழைவதைத் தரிசிக்க முடியும்.

அப்பாவின் துப்பாக்கி பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட குர்தீஷ் இன மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் குறியீடு. அப்பாவான ஷெரோவின் பழைய புரூனோ துப்பாக்கி பயன்பாட்டுக்கு ஆகாமல் போகிறது; ஆனால் ஷெரோ சலீமின் பெருமை பீத்தலுக்கு ஒன்றும் குறைவில்லை. பழைய துப்பாக்கியின் இடத்தில் புதிய துப்பாக்கி வருகிறது; பின்னர் அதுவும் போதாமை; பிறகு சடசட, படபடவென்று கணப்பொழுதில் சுட்டுக் கருக்கிவிடுகிற நவீன ஏகே47. பின்னர் அதன் போதாமை. ஒரு விடுதலைப் போராட்டத்தில் கவனமாய்க் கைக்கொள்ள வேண்டிய இராச தந்திர நகர்வுகளின் போதும் போதாமை, சரி பிழை என்பதின் குறியீடாக அப்பாவின் துப்பாக்கி வருகிறது.

நூலாசிரியர் குழந்தைப் போரளியாய்த் தொடங்கி திட்டவட்டமில்லா போர்க்களப் பயணத்தில் நடந்து, நாடு தாண்டி, பிரான்சில் இளமைப் பருவத்தில் தங்கிவிட்டார். அவருடைய தந்தை ஷெரோ  சலீம் 1996-ம் ஆண்டு டிசம்பரில் இறந்து விட்டார். அவருடைய மரண இறுதிச் சடங்கில் கூட மகனான ஆசாத் கலந்து கொள்ள முடியவில்லை. நாட்டுக்குத் திரும்பிப் போனால் கைது செய்யப்படுவார். பிரான்சிலே தங்கிவிட்ட ஆசாத்தால் பிரெஞ்சு மொழியில்தான் தனது தன் வரலாற்றுப் புதினத்தை எழுத வாய்த்தது.

ஈழத்திலிருந்து தூர தேசங்களுக்குப் புலம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள், ஆசாத்தின் மறு பக்கங்களாக உள்ளனர். ஆசாத் போலவே, இன ஒடுக்கு முறைக்கு ஆளாகி, முதிய பெற்றோர்களை சொந்த பூமியில் விட்டு விட்டு – அவர்கள் பிறநாடுகளுக்கு ஏகினர். முதிய பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டு மரணத்தின் கடைசி வாசலில் நுழைகிற போதும் இந்த இளைஞர்கள் வர முடியாதுஆகி, இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்ள இயலாது போயிற்று.

உணவு விடுதியின் உரிமையாளர் ரஜாப். மேலே ஆகாயத்தில் இருவிமானங்கள் தாழ்வாக வட்டமடித்தன. எங்கும் பீதி. சிலர் ஓடிப் போய்ப் பதுங்கிக் கொள்கிறார்கள். சிலர் தரையில் படுத்துக்கொண்டார்கள். ரஜாப் பால்கனியிலிருந்து குதித்து சிறுவனான ஆசாத்தின் மேல் தாவி, சுவரின் பக்கம் அவனைத் தள்ளிவிட்டு, துப்பாக்கியை உயர்த்தி விமானங்களை நோக்கிச் சுட ஆரம்பித்தார். விமானங்கள் போய்விட்டன. துப்பாக்கியைப் பெருமையாகத் தோள் மேல் போட்டுக் கொண்டு, ஆசாத்தை வாஞ்சையாகத் தடவிவிட்டுக் கொண்டே “உனக்குப் பயமாக இல்லையா?” என்கிறார். இல்லை என்று ஆசாத் தலையசைத்தான்.

“நீ யாருடைய பிள்ளை?” ரஜாப் கேட்டார்.

“ஷெரோவின் பிள்ளை”

ரஜாப்பின் முகம் பிரகாசமானது. “அட! தளபதியின் அந்தரங்க தகவல் தொடர்பாளரான ஷெரோவின் பிள்ளையா?”

“ஆமாம்”

உடனே உள்ளிருந்த உதவியாளனை நோக்கி உரத்தகுரலில் “இந்த வருங்கால போராளிக்கு ஒரு பாட்டில் பானம் கொண்டுவா” என்று கட்டளையிடுகிறார்.

இப்படித்தான், குர்தி இன மக்களின் விடுதலைப் படைத்தளபதி பர்ஸானியின்  தகவல் தொடர்பாளராக, மொழி பெயர்த்துச் சொல்பவரான ஷெரோவின் பிள்ளை என்று குழந்தைப் போராளி ஆசாத் அறிமுகமாகிறான். ஆசாத்தின் அண்ணன்கள் இருபேரும் ஏற்கனவே போராளிகளாக ஆகி, தளபதியின் படையில் களத்தில் நிற்கிறார்கள்.

ஆனால் ஆசாத்தின் தாத்தா செலீம் மாலே எப்படி? தாத்தாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். சுதந்திர பூமியாக குர்திஸ்தான் இருந்தபோது, அவர் ஒரு குர்தியராகப் பிறந்ததாகச் சொல்வாராம், பின்னர் வந்த ஒட்டோமானியர்கள் ஆட்சியின் போது அவர் ஒட்டோமானாக மாறிப் போனாராம். ஒட்டோமான் வீழ்ச்சிக்குப்பிறகு, துருக்கியர் ஆட்சி வந்த போது, துருக்கியராக மாறினார். துருக்கியர் வெளியேறியதும், குர்திய மன்னர் ஷேக் முகமதுவின் ஆட்சியில் மீண்டும் குர்தியராகனார். அடுத்து ஆங்கிலேயர் வந்தனர். ஆங்கிலேயர் ஈராக்கை உருவாக்கிய போது தாத்தா ஈராக்கியராக மாறிப்போனார்; இறுதி மூச்சுவரை, ஈராக்கியர் என்று சொல்லிக் கொள்ளவதில் அவர் பெருமையடைந்தது இல்லை.

இது செலீம் மாலே என்ற ஒரு தாத்தாவின் சித்திரமல்ல; அன்றைய குர்திய மக்களில் பெரும்பான்மையோரின் மனநிலையும் இவ்வாறே இருந்தது. மாறி மாறிவந்த அடக்கு முறையாளர்கள் சவாரி செய்ய - வளைந்து கொடுக்கும் குதிரைகளாகவே மாறியிருந்தனர்.

பொதுவாக மக்கள் எந்த வம்புதும்புக்கும் போகாது அமைதியான வாழ்க்கையின் காதலர்களாகவே வாழ முற்படுகிறார்கள். அதிகாரத்திலிருப்போர் இந்த அமைதியை அனுமதிப்பதில்லை. ஆதிக்கத்தில் தொடர்வதற்கும் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், அடக்குமுறை ஏவி தம்மை தகவமைத்துக் கொள்வது ஆட்சியாளர்களின் இயல்பான பிறவிக்குணமாக அமைந்திருக்கிறது. ஆனால் அதே வேகத்தில் அடக்கு முறையை எதிர்த்துப் போராடும் முனைப்பு இயல்பூக்க உணர்ச்சியாக மக்களிடம் விசை கொள்கிறது.

ஒரு பஞ்சாபிக் கவிதை விவரிக்கிறது.
“என் தோள்களில் ஒருபோர்வை இருந்தது
என் கைகளில் ஒரு புல்லாங்குழல் இருந்தது
நான் எங்கும் செல்லவில்லை
ஏதொன்றும் செய்யவில்லை
என் தோள்களில் துப்பாக்கி வந்தது எப்படி?
என் கைகளில் பிணங்களைத் தந்தது யார்?”
மாறி மாறி அடக்குமுறையாளர்களால் இன ஒடுக்கு முறையால் துவம்சம் செய்யப்பட்ட குர்தியர்கள் ஆயுத தாரிகளாக மாறியது இவ்வாறுதான். எதிர்ப்பின் வடிவமாக தளபதி பர்ஸானி தோன்றி முன்னெடுக்கையில், ஷெரோவா, ஆசாத் போன்றோர் இணைந்தார்கள்.

தேசிய இன அடையாளம் என்பது யாது? அந்த அடையாளங்கள் பெருமிதத்துக்குரியவை தானா?

அது உணவாக இருக்கிறது. உடையாக இருக்கிறது. பேச்சாக, எண்ணமாக இவையிரண்டின் வெளிப்பாடான மொழியாக இருக்கிறது. பண்பாடாக இருக்கிறது. அது வாழ்வியலாக உள்ளது. வாழ்வியலை அழிப்பதுதான் இனத்தை அழிப்பது; வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்குவது; இந்தப் பேரழிவுக் காரியங்களை, குர்தியர்கள் மீது ஈராக்கிய அரசு, அதன் அதிபர்களான சதாம் உசேனும், அவருடைய புட்சிஸ்டுகளும் கட்டவிழ்த்து விடுகின்றனர். ஈராக்கியரின் அரபு மொழி குர்திஸ்தானில் கல்வி மொழியாக்கப்படுகிறது.

“ஆசிரியர் சொல்வது எதுவுமே எனக்குப் புரிவதில்லை. அவர் அரபு மொழியில் மட்டுமே பேசுகிறார்” என ஆசாத் அழுதான். அம்மா அவன் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொண்டே “அரபு மொழியில் தானே பாடம். அது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது எப்போதும் நல்லதுதான்” என்று ஆறுதல் சொல்கிறார்.

“ஒரு பாடம் மட்டும் இல்லையே. எல்லமே அரபு மொழியில் தானே இருக்கிறது” என ஆசாத் படபடத்தான். “தம்பி, கவலைப்படாதே. இந்த வருடம் முடிவதற்குள் குர்திய மொழிக் கல்வி வந்துவிடும். அரசாங்கம் நமக்கு உறுதி அளித்திருக்கிறார்கள். நீதான் வகுப்பில் முதல் மாணவனாக வரப் போகிறாய்” என்று அவனைத் தேற்றினார் அம்மா.

நடந்ததோ எதிர்மாறானது. அரபு மொழியை மாற்றவேயில்லை. அரசாங்கம் புரட்சியாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை மதிக்கவே இல்லை. கொஞ்சம், கொஞ்சமாக போலீசாரும் இராணுவத்தினரும் நகரில் இறக்கப்படுகிறார்கள். அங்கங்கே இராணுவ முகாம்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

தன்னைச் சுற்றி நடந்த அடக்கு முறைகளைக் கண்டு வளர்கிற ஆசாத் - அன்று நடந்த கொலைவெறித் தாக்குதலில்   குடும்பத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டனர். “எப்படியும் பழிவாங்க வேண்டும் என்ற நிலையில் மீதியிருந்த எங்கள் குடும்பம் பிலே நகர் வந்து சேர்ந்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் வருகிறது” சிறுவன் ஆசாத் வார்த்தைகளில்.

“ஒரு சிறுவன். அவன் கண்முன்னால் அவனுடைய தாயும் சகோதரியும் சிங்கள இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு இரையாக்கப்படுகிறார்கள். பெண்கள் கதறக் கதற அழுதது மட்டுமல்ல, அவன் கதறிக் கதறி அழுகிறபோதும் வன்கொடுமை செய்கிறார்கள். அவன் குடும்பத்தினரைக் கொலை செய்கிறார்கள். இந்தக் கொடுமைகளை நேரில் கண்டு அனுபவித்த சிறுவன் எதைத் தேர்ந்தெடுப்பான்? துப்பாக்கி ஏந்துவதையா, அமைதியாக வாழ்வதையா? எங்களிடம் வந்து சேர்ந்த சிறுவர் போராளிகள் இவர்கள் தாம்”

விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளராயிருந்த சுப.தமிழ்ச் செல்வன், தெரிவித்த வார்த்தைகளின் உள்ளில் இருக்கும் நியாயத்தை ஆசாத்தின் எழுத்துக்களில் உணரமுடிகிறது.
பக்கத்துப் பக்கம், வரிக்குவரி இந்நூல் ஈழ விடுதலைப் போராட்டத்தின் சித்திரமாக வெளிப்படுகிறது.

ஒரு இனத்தின் வாழ்வியல் அதன் தாய்மொழி வழியாக நடக்கிறது. இன அடக்குமுறையைச் செயல்படுத்த முதல்வழி மொழி அழிப்பு.

1956-ல் இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டம். 1972-ல் கல்வியில் தரப்படுத்தல் என்ற பெயரில், தமிழர்களின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு போன்றவைகளைப் பறித்தல். தமிழ் மாணவர்கள் இதை எதிர்த்துக் கொந்தளித்தனர். அரசியல் கட்சிகளைக் கடந்த ‘தமிழ் மாணவர் பேரவை’ அங்கு உருவாயிற்று.

அது போல் குர்திஸ்தானிலும் ஈராக்கியரின் மொழியான அரபு மொழி கல்வி மொழியானது; குர்திய இனத் தலைமைகளுடன் ஈராக்கின் சதாம் உசேன் பேசி, அமைதி உடன்பாடு செய்யப்பட்ட பின்னும், நிலைமை சீராகவில்லை. அமைதி ஒப்பந்தம் என்பதற்கு அடக்கு முறைகளின் ஒப்பந்தம் என்று பொருள் தருவதாக மாற்றப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் தான் ஆசாத் ஓவியனாக மாற, ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பினான். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கேட்டார் “நீ பாத் (ஈராக்கிய ஆதிக்கத்துக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்ட இளைஞர்கட்சி) இளைஞர் அமைப்பில் சேர்ந்து விட்டாயா?”

“ஸார், என்னுடைய வாழ்க்கையில் ஓவியம் மட்டும் தான் முக்கியம். என்னுடைய கனவெல்லாம் ஐரோப்பாவுக்குச் சென்று நுண்கலை பயில வேண்டும் என்பதுதான். அதன் பிறகு நான் கட்சியில் சோ்ந்து பணியாற்றத் தகுதி கிடைத்து விடும்”

பதில் சொன்ன ஆசாத்தின் உண்மையான முகத்தை எதிரிலிருப்பவர் அறிவார். அவர் சொல்கிறார்.

“சபாஷ், கட்சி உனக்கு உதவி செய்யும். உனக்கு இரண்டு வழிகள் உள்ளன. நீ கட்சியில் சேர்ந்து விடு. கட்சி உன்னை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைக்கும். நீ சேராவிட்டால் கட்சி உன்னைக் கொன்று விடும்”

நூலகர்கள் அனைவருக்கும் ஒரு புத்தகப் பட்டியல் வந்தது. அதில் உள்ள புத்தகங்களை அழிப்பதற்காக, பாக்தாத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவை ‘பாத்’ இனத்தின் சிந்தனையைப் பின்பற்றத் தவறிய பழைய புத்தகங்கள். ஆசாத் மேல் நம்பிக்கை வைதிருக்கும் அந்த நூலகர் குர்தியப் புத்தகங்களை ஆசாத்திடம் கொடுத்து விட்டார். அவற்றை மறைத்து வைப்பதன்மூலம் அவற்றைக் காப்பாற்றும் தேசியக் கடமையை ஆசாத் செய்கிறான்.

ஒப்பீட்டளவில், இதனினும் கொடூரமான யாழ் நூலக எரிப்பு 1983-ல் நடைபெற்றது.
“தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோக வாத சூத்தீரத்தினைக்
கொளுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்மபதமும் சாம்பலானது”
யாழ்நூலக எரிப்பை ‘புத்தனின் படுகொலை ’ - என எம்.ஏ.நுஹ்மான் சித்தரித்தார். ஓலைச் சுவடி, பழம் அச்சுப் பிரதிகள், கலை, இலக்கியம், வரலாறு, வானவியல், புவியியல் விளக்கும் அரிய தொண்ணூறாயிரம் நூல்களை கொண்ட அறிவுக் கருவூலம்  மொத்தமும் சாம்பலாக்கப்பட்டது.

ஆக்ரே நகரில் சமி என்ற ஓவியர்; எப்போதும் தனிமை விரும்புவர். அது தெரிந்திருந்ததால் மது அருந்தும் விடுதியில் ஆசாத்தும் கூட்டாளிகளும் அமர்ந்திருந்த மேசைக்கு வந்து அமரும்படி அவரை அழைக்கவில்லை; சமி அவர்களைக் கூப்பிட்டு தன்னருகில் அமரும்படி சொன்னபோது வியப்பாக இருந்தது. அவர்களிடம் அவர் “குர்தியர்களாகிய நாம் எப்பொழுதும் பெரிதாக எதுவும் ஆகிவிட முடியாது. நாம் சபிக்கப்பட்டவர்கள். இதுதான் நம் விதி. நம் வரலாற்றைக் கவனியுங்கள். நாம்தான் இந்தப் பகுதியின் தொன்மையான மக்கள். இருந்தாலும் நமக்குப் பிறகு வந்த துருக்கியர்களுக்கென ஒரு நாடு இருக்கிறது. ஆனால் நாமோ இன்னமும் எதுவுமில்லாமலிருக்கிறோம்” என்றார். சொல்லிவிட்டு விரலை நெற்றிப் பொட்டில் வைத்து “ஆனால் விசித்திரமானது என்னவென்றால், பலப்பல படுகொலைகள் நடந்த பின்னும் நாம் உயிரோடு இருக்கிறோம். என்பதுதான்” என்றார்.

இத்தனை இழப்புக்களின் பின்னரும் ஈழம் உயிரோடு இருப்பதும், உயிர்ப்போடு இயங்குவதும் ஆச்சரியமாகவே இருக்கிறது. குர்தியர்கள் போல் பல்லாயிரக் கணக்கில் உயிர் பறிப்புக்கள்; எத்தனை இழப்புக்கள். முப்பது நெடிய ஆண்டுகள் இராணுவ சோதனைச் சாவடிகளுக்குள்ளேயே  கழித்தார்கள். இலங்கை மக்கள் தொகையில் தமிழர்கள் 21 விழுக்காட்டினர். தமிழ் மக்கள் தொகைக் கணக்கோடு ஒப்பிடுகையில் 2 லட்சம் படுகொலை என்பது மிகப் பெரியது. ஈழத்தமிழர்களில் பாதிப் பேர் இன்று அங்கு இல்லை. இந்தியாவில், அய்ரோப்பிய நாடுகளில் அகதிகள். எந்த விடுதலைக்காகப் போராடினார்களோ, அந்த ஈழம் கிடைத்தாலும் அவர்கள் கொடுத்த தியாகத்துக்கு ஈடாகுமா?

ஒரு மொழியாக்க நூல் என்று எண்ணிப் பார்க்க இயலாத அளவு இதனோடு ஒன்றிப் போகிறோம். காரணம் அண்டையில் கடல் தாண்டியும் நீளும் தொப்புள் கொடியின் சித்திரமாக தெரிவதால்தான். இது போன்ற தன்வரலாற்றுப் புதினங்கள் இப்போது தமிழில் ஈழப்பிரதேசத்திலிருந்து நிறைய வெளிவரத் தொடங்கியுள்ளன. சயந்தனின் ‘ஆறாவடு’,  அப்புவின் ‘வன்னியுத்தம்’, ந.மாலதியின் ‘எனது நாட்டில் ஒருதுளி நேரம்’, அ.இரவியின் ‘வீடு நெடுந்தூரம்’, தமிழ்க்கவி அக்காவின் ‘ஊழிக்காலம்’ – போன்றவை அவைகளில் சில.

சிரியா, ஈராக் எல்லையைத் தாண்டி, வாகனம் போய்க் கொண்டிருக்கிறது. புலம்பெயரும் பயணத்தில் ஆசாத். அது கடைசி சோதனைச் சாவடி. வாகன ஓட்டுநா் குர்தியர். கடைசிக் காட்சி இப்படி முடிகிறது.

“நான் கொண்டு வந்த குர்திய உடை, குர்திய இசைக் கேசட், குர்திய கவிதைப் புத்தகம் அடங்கிய பை என் தொடை மேலிருந்தது. வாகன ஓட்டுநர் ஷிவன் தனது கையுறை வைக்கும் பெட்டியைத் திறந்து ஒரு கேசட்டை எடுத்து, ரிக்கார்ட் பிளேயரில் போட்டார். அது சிரியாவில் வசிக்கிற ஒல்லிக் குர்தியர் ஷெகோவின் குரல். 1974-ம் ஆண்டில் ஈரானின் அகதிமுகாமில் ஒலித்த அதே பாடல்.
காலம் செல்லச் செல்ல...
என் இதயத் துடிப்பின் வேகம்
மெல்ல மெல்ல அடங்குகிறது,
என் இனியவளே...
ஆசாத் ஆகிய நான் இன்னமும் சின்னப் பையன் இல்லை

ஆசாத்துகள் வளரவளர, வயது ஏறிக் கொண்டே போகிறது. முதுமையடையலாம். மரணித்தும் போகலாம். ஆனால் தலைமுறைகளுக்கு கைமாற்றித் தருகிற, மடைபோல் பாய்கிற விடுதலை வேட்கை ஒருபோதும் மரணமடைவதில்லை. புதினம் முடிவடைந்து விட்டாலும், முடிவிலா விடுதலைப் பயணம் அதில் தொடர்கிறது.

அப்பாவின் துப்பாக்கி – ஹினேர் சலீம்
பிரெஞ்சிலிருந்து தமிழில் – சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்.
விலை – ரூ. 90

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி