பிரபாகர் - இன்னுமொரு வெளிச்சம்

கி.ரா எழுத்து ஒரு தினுசு என்றால், பிரபி எழுத்து இன்னொரு தினுசு. பிரபி என்று தான் நாங்கள் அழைப்போம்: பெற்றவர்கள் அழைத்ததை நாங்கள் வழி மொழிந்தோம். இயல்பாக பிரபாகர் - என்ற பெயரை கி.ரா சூட்டிவிட்டார். பிரபாகரன் என்றால் வெளிச்சம் என்று பொருள்.

தமிழுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்ச வந்த கி.ரா என்னும் படைப்பாளிக்கு இப்படியாய் எழுத்தெழுதும் பிள்ளை எப்படி வாய்த்தார்? இதற்கெல்லாம் யாருக்கு வந்த விருந்தோன்னு ஈரெட்டாகவோ, அல்லது வேர்த்து விறுவிறுத்து வலுவந்தமாகவோ பதில் தேடி அடைய வேண்டியதில்லை.

சட்டியிலிருந்து அகப்பைக்கு வந்தது என்ற எளிதினும் எளிதானது இதற்கான பதில். இடைசெவல்க் கரிசல் வீட்டிலும், செம்மண் புலமான புதுவை வீட்டிலும் கி.ரா என்ற குடும்பப் பானையில் திரண்டதை - கி.ரா பேசியது, எழுதியது, பார்த்தது, பதில் தந்தது, கி.ரா.வைக் சந்திக்க எறும்புக் கூட்டம் போல் வந்து சேருவோரிடம் பகிர்ந்து கொண்டது - எல்லாவற்றிலுமிருந்தும் பிரபி எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கிருந்துதான் பிரபி கிரகித்தார். கி.ரா.வின் எழுத்து தன்னூக்கம் என்னும் ஊற்றிலிருந்து பிறப்பெடுத்தது எனில், பிரபிக்கும் அந்தத் தன்னூக்கம் கொடையாக மாறியுள்ளது.

கி.ரா பள்ளிக்கூடம் ஒதுங்கிய போது, மழை பீச்சியடித்தது. மழையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெளியேறி விட்டார். பிரபிக்கும் வாய்த்தது பள்ளிக் கூடம். ’என்னடா பெரிய தொந்தரவா இருக்கே’ என்று விலகி வந்துவிட்டார். தந்தைக்கும் பிள்ளைக்கும் கல்விப் பெருங்கடல் நீந்தி வர கொடுப்பினை இல்லை. இந்த விசயத்தில் கொஞ்சமும் விட்டு விலகாமல், கணுக்கிடை அளவும் மாறாமல், ஒன்னு போல அடி வைத்து ஒரே மாதிரி நடந்திருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொண்டு எழுத்தாக்குவதில் கொஞ்சமும் இளைத்ததில்லை குட்டி.

“இணைவு குறுங்கதையில் வருகிறவர்கள் இன்னும் எங்கள் ஊரில் உயிருடன் இருக்கிறார்கள்” - என்று என்னுடன் நேர்ப் பேச்சில் பிரபி சொன்னார். என் மறுமொழி இதுவாக இருந்தது ”அவர்கள் உயிருடன் இருக்கிறார்களோ இல்லையோ, கதையில் வரும் பாத்திரங்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கதை செய்யும் மிகப் பெரிய சேவை இது” என்றேன்.

மரித்துப் போனவர்களையெல்லாம் உயிருடன் இருக்கச் செய்வதும், மரணித்துப் போய்விட்ட சம்பவங்களை மறு உயிர்ப்புச் செய்வதும் கலையின் வேலை. அனுபவங்களை, அவைகளை வாழ்ந்த மனிதர்களை அடக்கம் செய்து விடாத படிக்கு, கல்லறைக்குள் உயிர்த் துடிப்பைக் கேட்கச் செய்கிறது கலை. இணைவு கதையின் சுந்தரம்மா, குருசாமி இந்தப் பாத்திரங்கள் நம் வாசிப்புணர்வை தங்களின் முந்தானைக்குள் முடிச்சிட்டபடி கூடவே இழுத்துப் போகிறார்கள்.

மொழியை மக்களுக்கு அவர்களுடனதாகவே கொண்டு போய் நிறுத்தி இந்த வெற்றியை சாத்தியப்படுத்துவதில், கி.ரா என்ற பெரிய புள்ளிக்காரரின் வழியில் இளைய புள்ளி பிரபி கூடுதல் பிரயாசை, முயற்சி எடுக்கிறார். பேச்சுக்கு, பேச்சுஒலிப்புக்கு நெருக்கமாகவும், எழுதத் தக்கனவாய் தோதுகொண்டும் மொழி அமைய வேண்டும்.

பேச்சு மொழி என்னவோ, அது பிரபியின் எழுத்து நடையாகவும் இருக்கிறது. தன் மக்கள் கூட்டம் பேசுகிற மொழியில் எழுத வருகிறது பிரபிக்கு. அவர்களுடைய ஒழுங்கிலேயே நடந்து போகிறார்.

“பதக், பதக்குங்கு, இந்த லெச்சை உண்டா (இந்த வெக்கம் உண்டா?), அவதாண்டமா (அவதூறா) பேசாதே, வசவு உரிச்சிட்டான், ஒரு சுண்டு சுண்டிட்டான்,காத்து மாதிரிகுரல் - போன்ற சொற்களைப் பாருங்கள். இவை எந்த வீச்சில் உருட்டினாலும் கேட்கும் தாயம் விழவைக்கிற சோழிகள். எந்த இடத்துக்கு என்ன அர்த்தம் வேண்டுமென்று அந்தந்த வார்த்தைச் சோழிகளை உருட்டி கலைச் சூதாட்டத்தில் வெற்றி நோக்கி அடிவைத்துப் போகிறார். எழுத்து என்பது ஒரு கலைச் சூதாட்டம் தானே!

இப்பேர்ப்பட்டவர்கள் எழுத முன் வந்திருப்பது தான், மொழிச் சீர்திருத்தம் செய்வதற்கான பதக்கால். (விதைப்புக்குத் தோதாக பதப்படுத்திய மண்)

“என்ன ஆளுக” - இது நாம் எழுத்தில் சொல்வது: ஆனால் கரிசல் மாவட்டங்களில் “ஆளுக்க” என்று க்-இல் அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சு உச்சரிப்பை அப்படியே கொண்டுவருகிறார். ‘அந்த வீட்டு ஆளுக்க’ என்று வாக்கியம் வருகிறது. ஒலிப்புக்கு ஏற்ப தமிழை வளைக்கிறார் பிரபி.

“இனிமே நீ தனியா எங்கயும் போகக் கூடாது. அப்படி எங்க போனாலும் எங்குடத்தாம் வரனும்னு சொல்லீட்டான்” -
இங்கே கூட - என்ற இடத்தில் கு - என்று நெடிலை சுழிக்கிறார். (சுழித்து எழுதும் இந்த எழுத்து தட்டச்சில் வரமாட்டேனென்கிறது. கையெழுத்தில் வருகிறது). இது போன்ற, சிற்சில மொழிச் சீர்திருத்தம் வேண்டுமென அதையும் இந்த சாதாரணன்தான் நடைமுறைக்குக் கொண்டு வந்து காட்டுகிறார்.

எடுத்துக் காட்டாக சு என்ற குறில் சூ என நெடிலாகும் போது, ஒரு கு-வை மேலே ஒரு சுழி சுழித்து நெடிலாக ஏன் எழுதக்கூடாது? என்ற இவருடைய இந்தத் தர்க்கம் நியாயமானதாகத் தெரிகிறது. இப்படி சாதாரண மக்களின் வாசிப்புக்குரியதாக, மொழியை நாம் ஏன் வசப்படுத்தவில்லை? இந்த வகையில், எத்தனையோ எழுத்துக்கள் குறைத்து, நந்தமிழ் நம் மக்களுக்கு கல்வியை வசப்படுத்தியிருக்கலாமே.

மக்களின் வாழ் நிலையை அதள பாதாளத்துக்கு அடித்துத் தள்ளிய வர்க்க, சாதி – அநியாயங்கள் ஒரு புறம்: பாதளத்துக்குத் தள்ளப்பட்ட மக்கள் - கொஞ்ச நஞ்சமாவது கற்று வெளிச்சத்தைத் தீண்ட விடாமல் அவர்களைத் தமிழிலிருந்து அந்நியமாக்கியது மறுபுறம். எளிதினும் எளிதாய் செய்யப்பட்ட எங்களுக்குரிய மொழியெங்கே என்று கேட்கிறார்கள் பாவப்பட்டவர்கள்.

பிரம்பை எவ்வளவு வளைக்க முடியுமோ, அவ்வளவு அரைவட்டமாய் வளைத்து கூட்டு வண்டி செய்யப்படுகிறது. மொழி என்பது கூட்டு வண்டி போல. நம் வாழ்க்கைக்கான கூட்டு வண்டி! நம் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மொழியை வளைப்பதில், எளிதாய்க் கற்கப் பயன்படும் முயற்சியில் போதுமான வெற்றியை நாம் தொடவில்லை என்றே தோன்றுகிறது. இத்தகைய இணைவுக்கு பிரபாகர் மொழி வெளிச்சம் தரும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்