மரணத்துள் வாழ்வு


(பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடப் பிறந்த பாரதி பிறந்த பூமி -
விடுதலை வீரர் பரலி சு.நெல்லையப்பர் நடந்த மண் -
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ –
என்று பதை பதைத்து ஈரல் குலை துடித்து செக்கிழுத்துச் செக்கிழுத்துச் செத்துச் செத்துச் சுண்ணாம்பாகிய வ.உ.சிதம்பரனார் என்ற புயல் பயின்ற சீமை -
வீரம் விளைந்த அந்த தென்மாவட்டங்களின் மண்ணில் 1990 தொடக்கத்தில் சாதி இடி இடித்து, ஊரூராக மனிதர்களை வெட்டி வீழ்த்தி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

வா மகனே என்று வாஞ்சையோடு நெஞ்சைத் தடவினால் வயிற்றிலிருப்பதையும் வாந்தி எடுத்துக் கொடுக்கும் வாஞ்சையுள்ள சனம் வாழுகிற பூமி -
இப்போது தாழ்த்தபட்டமகனின் ரத்தத்தால் மெழுகப்பட்டது. மரணக் காங்கை வீசுகிற கரிசலில், கொஞ்சம் மண்ணெடுத்து முகர்ந்தேன். ரத்த வாடை!

மனித நெறிகளின் விளிம்புகளுக்கு அப்பால் புரண்ட அந்தக் கொடூரங்களை ஒரு கவிதையாக்கித் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.)

அவன் ஒருவன்
வந்தவர் பலர்

கர்ப்பவதியாய்
அசைந்தது காற்று;
அத்துவானக் காட்டில்
அழுதது நிலா -
ஈசான மூலை
இருண்டு இருண்டு
மைக்கூடாய் கறுத்தது
மழை மேகம்.

"எங்கிருந்தடா நீ?”
எதிர் வந்தவர்
கேட்டனர் அவனை.

வாது சூதறியா வெள்ளந்தி.
வந்த ஊர் காட்டினான்.

”பள்ளர்புரமா நீ!
பழி எடுங்கடா அவனை”

தலை மேல் உயர்ந்த மரணத்தை
அடையாளம் கண்டு அலறினான்
”அண்ணே நா நம்ம சாதி”

கேட்பதற்கு இல்லை மனித சாதி.

இரவு முழுவதும் பெய்கிறது மழை,
மீண்டும் பகலிலும்.
வெட்டரிவாளுக்கு மழையா வெயிலா?
மழை நீரின் நிறம் சிவப்பு!

மற்றவர்க்கு
வாழ்வில் மரணம்
எம் காட்டில்
மரணத்தில் வாழ்வு.

- சூரியதீபன்
- தாமரை, நவம்பர் 1996

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

Mother languages that reflect India’s soul

வாசிப்பு வாசல்

சிவன் கோவில் தெற்குத் தெரு: எழுத்தாளர்களின் கிழக்கு!

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் - நூல் மதிப்புரை