வட்டார இலக்கியம்

மக்களின் பேச்சு மொழி ஓசை ஒழுங்கு, லயம், இழுவை, இசைத்தன்மை எனப் பல இணைந்து வெளிப்படுகிறது. இந்த ஓசை ஒழுங்கு எதுகை, மோனையாய் சொற்பிரயோகங்களில் ஒலித்தது.
“எண்ணைக்குடம் போட்டவளும்
ஆத்தாடி அம்மாடி
தண்ணிக்குடம் போட்டவளும்
ஆத்தாடி அம்மாடி”
சொலவமாக வெளிப்பட்டிருப்பினும், எதுகை,மோனையுடன் ஒரு கவிதையாக நிற்கிறது. இதன் மொழிப்பண்பு நோக்கி பேச்சோசைக் கவிதை எனச் சொல்லலாம்.
“அறுக்கமாட்டாதவன் இடுப்பில
அறுத்தெட்டுப் பண்ணரிவாள்”
இரண்டு சொலவடைகள் போதும் எடுத்துக்காட்டுக்கு. இணைவு, எதிர்வு (முரண்), லயம், ஓசை ஒழுங்கு என மக்களின் நா வழக்கிலுள்ள இவைகளிலிருந்து எழுத்து வடிவக் கவிதை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக் கொண்டது என்பதினும் கடன்வாங்கிக் கொண்டது என்ற வார்த்தை பொருத்தமாய் அமையும். கவிதை மரபு எல்லாக் காலத்திலும் ஏதேனும் ஒரு கூறினை நாட்டுப்புற வழக்காறு எனப்படும் வாய்மொழியிலிருந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது.

சங்க காலக் கவிதைக் கருவூலத்தில் எதுகை, மோனை என்ற ஓசை ஒழுங்கு பிரதானமாக இருக்கவில்லை; அதன் பின்னரான கவிதைகள் எதுகை மோனை என்ற ஆடை உடுத்திக்கொள்கின்றன. இதுவரை ஆடை அணியாதிருந்த கவிதை மரபுக்கு ஆடைகட்டச் சொல்லிக் கொடுத்தது பேச்சு வழக்கு. விதவிதமான வண்ணங்களில் பிற்காலத்தில் நெய்யப்பட்ட ஆடைகள், இந்த ’வாப்பழக்கத்’ தறியிலிருந்து நெய்யப்பட்டவைதாம்.
வாழ்வியலின் நுண்மையான படிநிலைகளை, குணவகைகளை நாப்பழக்கமாகவே வைத்திருந்தனா் மக்கள். அவா்கள் எது பேசினாலும் புதியதொன்றின் படைப்புக்காக பேசினார்கள். பழையதை, சமகால நடமாட்டத்தைத் சுட்டிக்காட்டும் விமா்சனமாக வைத்தனா்.
“அடுத்த வீட்டுக்காரனுக்கு
உத்தியோகம் வந்தால்
அண்டைவீடு குதிரை லாயம்”
மேலாண்மை அதிகாரம் ஒருவனுக்கு வரப்பெற்றால், அக்கம்பக்க வீடுகள் என்னவாக ஆகும் என்பதை வெப்புராளமாகச் சொல்கிறது. உறவு, சொந்தம், சுருத்து, நட்பு எல்லாமும் இளக்கார கதிக்கு ஆளாக்கப்படும் என்று ” அண்டை வீடு” என்ற சுட்டல் தெளிவுகூறுகிறது.
“அக்னியைத் தின்னு ஜீரணிக்கிற பிள்ளைக்கு
அல்லித் தண்டு என்னவாகும்”
தன் வாழ்வில் எதிர்ப்படும் வெக்கரிப்பான பிரச்சினைகளை, “நம்பாடு என்னைக்கு விடியும்” என்று எச்சி இளைச்சி இருக்காமல், எதிர்த்துப் பந்தாடும் தனிமனிதனுக்கு மற்றதெல்லாம் ’லேசுபாசு’ எனக் காட்டுகிறது தனிமனிதச் செயல்பாடு முதல் கூட்டுச் சமூக எழுச்சிவரை இதனைப் பொருத்திக் கொண்டு போகலாம். எந்தவொரு போராட்ட மூர்க்கத்துக்கும் இணைவாக வருகிறது இதன் அர்த்தம்.

மக்கள் அறம் பேணினர்; அறஉணா்வு சார்ந்து இயங்கும் தொடக்ககால சமுதாய மாந்தர் இருந்தனா். பொருளீட்டல், லாபநோக்குடன் அதீதப் பொருளீட்டல் இன்றைய நவீன காலத்தின் இயல்பாகிவிட்டது. மனிதரின் அற இயல்புகள் மரணிக்கப்பட்டுள்ளன. அற இயல்பிழந்த ஒவ்வொரு மனித உருவும் தீப்பந்தம் ஏந்தி, எதைக் கொளுத்தினால் என்ன கிடைக்குமென ஓடிக்கொண்டிருக்கிறது. அற உணர்வுகளின் ரூபங்களாய் காணப்பட்ட மனிதர் அந்தக் கால அரசாட்சியில் சிக்கலுக்கு உள்ளாகினர்.
“அரசனுக்கு ஒரு சொல்
அடிமைக்கு தலைச்சுமை”
”சிரமறுத்தல் வேந்தா்க்குப் பொழுது போக்கு;
எமக்கோ உயிரின் வாதை”
என்பார் பாண்டியன் பரிசு காப்பியத்தில் முடிமன்னராட்சி பற்றி பாரதிதாசன். அரசனின் இத்தகைய அத்துமீறலுக்கு ஒத்தூதிய நாயனங்களும் அன்றிருந்தனா் இதை அந்தக்கால சனம் பகடி செய்து ரசித்தது.
“ராஜா கல்லின் மேல்
கத்திரிக்காய் காய்த்தது என்றால்
கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பான்கள்”
துருத்தி ஊதும் மனிதக்கூட்டத்தைப் பகடி செய்தனர். அறம் வேண்டிய சனங்களின் நாவில் வெடித்த எதிர்ப்புக் கருத்தியல் கற்றறிந்த கவிஞருக்கும் எழுத்துக்காரர்களுக்கும் அங்கிருந்து பெறப்பட்ட படையல் என்பதில் ஏட்டு இலக்கியத்துக்குப் பெருமையாகிறது. கவிதை, உரைநடை இன்னுமின்னுமான இலக்கிய வடிவங்களுக்கு வடிவரீதியிலும் கருத்தியலிலும் பேச்சுவழக்கு வழங்கிய கொடையை நவீனத்துவம் பேசிய ஏட்டாளா்கள் இன்றளவும் அங்கீகரித்ததில்லை.

மொழியியலில் வட்டார வழக்கு பிரதானமானது.மொழியின் மூலதனம் பேச்சு என்பார் கி.ரா. வட்டார வாழ்வியல் அதன் அடிப்படை வேராக இருக்கிறது. வட்டாரவாழ்வியல் பூரணமாக வெளிப்படுதற்கான லகுவான களமாக மொழியாடல் மாறிவிடுகின்றது. எவ்வகையிலும் ஊணப்படாது, ஒச்சம் ஏற்படாது தம் வாழ்வியலை அதற்குள் குறிப்பிட்டு வெளிப்படுத்திவிடுவார்கள்.

வழக்கமாக கரிசல் கிராமங்களில் ஊர்ப்பொங்கலுக்கு முதல் செவ்வாய் ஊர் சாட்டுவார்கள். மறுசெவ்வாய் பொங்கல்.புதன் அன்று கோயிலில் கிடாவெட்டு. ஊரெல்லாம் அன்னையதினம் கறிச்சாப்பாடு. செவ்வாய்க்கிழமை அன்னைக்கு ஒரு ஆடு போய் ஓடையில் தண்ணி குடித்தது. ”நாலுகால் மன்னா, நாளை ஒனக்கு நாலாடா காலு” வலையிலிருந்த நண்டு கேட்டது. நாளைக்கு சூரியோதயம் தெரிந்ததும் ஆடுவெட்டு; நாளை விடியக்காலம் இந்நேரம் நீ இல்லை. புரிந்து கொண்ட ஆடு கேட்டது.

”விலாவில கண்ணா, ஒனக்கு யாருடா சொன்னா”

நண்டுக்கு விலாவிலதான கண்ணு இருக்குது. “குரல் இல்லாமனுஷன் கூப்பிட்டுச் சொன்னான்” குரலில்லா மனுஷன் என்றால் மேளம்; போனவாரம் மேளம் அடித்து ஊர்சாட்டினார்கள். இந்த செவ்வாய் கிராமப் பொங்கல். புதன்கிழமை மாரியம்மன் கோயிலில் ஆடு வெட்டுப்பட்டது.

அம்மனுக்கு பொங்கலிடுதல், ஆடு வெட்டிப் பலிகொடுப்பது, வீட்டுவீட்டுக்கு கமகமக்கும் கறிவாசனை மக்களது பண்பாடு வெளிப்படுகிறது. தெய்வங்களுக்குப் பலியிடுதல் என்ற கோதாவில் இந்தச்சிறு தெய்வங்களோட வயிற்றுக்குள் போகிறது. முன்னுணர்ந்துகொண்டாலும் ஆடு போன்ற உயிர் அகப்பாடாமல் தப்பித்துக் கொள்ள இயலாது. இந்தக் கவலை ஏதுமற்று ஆடு தன்பாட்டுக்குத் தண்ணீர் குடிக்கப் போகையில் நண்டு கேலியடிப்பது – நாளைக்கு சப்பைவேற சதைவேற ஆக்கப் போறாங்க, ஒனக்கு நாலுகாலாடா என்று எகத்தாளமாய் நாட்டுப்புற வாழ்வு உயிரின உரையாடல்வழி உணர்த்தப்படுகிறது.

ஒருமனுஷன் பதைபதைச்சு நடந்துபோகிறான். எதிர்த்தாப்பில ஒருஆள் வருகிறான். ”இந்தப்பக்கமா ரெண்டுகால் உசுப்பிராணி ஒன்னு போச்சா?” என்று எதிரி தென்பட்ட ஆளைக் கேட்டான். ”எதிரில் வந்தவன், ஆமா, ரெண்டுகாலுள்ள ’ஈருயிர்’ ஒன்னு போச்சு, அது நுனிப்புல்லையும் விட்டுட்டு அடிப்புல்லையும் விட்டுட்டு நடுப்புல்லை மேய்ஞ்சிட்டுப் போகுது“ என்றான்.

புருஷன் – பெண்டாட்டிக்குள் தகறாறு; “வாய்த் தகராறுதான்; கைகலப்பெல்லாம் ஒன்னுமில்லே” என்றில்லாமல். புருஷன் பெண்டாட்டியை கிராமத்து வழக்கப்படி நாலுசாத்து சாத்துகிறான். பெண்டாட்டி கோபித்துக்கொண்டு கிளம்புகிறாள். புருஷன் – பெண்டாட்டிக்குள்ளே இதுபோல் சண்டை சச்சரவு வரும்தான், அதுக்காக வீட்டைவிட்டு கிளம்புவதா என்று பதைபதைப்பாய் புருஷன் தேடிப் போகிறான். பெண்டாட்டி நிறைசூலி. கர்ப்பத்துக்குள் அசையும் உயிரையும் சுமந்துபோகிறாள். கையில் ஒரு குழந்தையைப் பிடித்துக்கொண்டு வெற்றிலை போட்டமானைக்கு நடந்து போயிருக்கிறாள். நுனியைக் கிள்ளிப்போட்டு விட்டு அடிக்காம்ப்பையும் கிள்ளிவிட்டு நடுவெற்றிலையை மடித்து வாயில் போட்டுமென்று கொண்டுபோகிறாள்.

“அய்யோ போச்சே” என்று அலறியடித்து ஓடுகிறான் கணவன். கோபித்துக்கொண்டு வெளியேறுவது சகஜம்தான். கிணத்தில, தண்ணி கண்ட நீர்நிலையில விழுந்தது தொலைச்சிட்டா என்னாவது என்று விதிர்விதிர்த்து தேடிபோகிறான். புருஷனுடைய பதைபதைப்பு வித்துவத்துமாக விளக்கப்படுகிறது. நூதனமான வேரொரு சொல்லாடல் வழியாக குறிப்பிடப்படுகிறது. நேற்றுவரை கிராமத்து வாழ்க்கை இது. புருஷன் – பெண்டாட்டி சண்டை என்றால் நாலுமொத்து மொத்துவது ஆணின் இயல்பு. இன்றும் ஆணதிகாரம் இந்தவடிவில் இருக்கலாம்; அல்லது வேறுவடிவம் கொண்டிருக்கலாம். ஆனால் ஆணதிகாரம் இல்லாத குடும்பம் என்பது தமிழ்ச்சமூகத்தில் தேடித்தேடிப் போனால் ஒன்றிரண்டு இருக்கலாம்.

காற்றடிகாலம் ஆரம்பமாகிவிட்டால் மழைமேகம் ’மூசாக்கு’ப் போடாது; உப்பங்காற்று என்பார்கள். கரிசல்பரப்புக்கு கடல் காற்றை உற்பத்திசெய்து அனுப்பும்; ”உப்பங்காற்றில் மழைக்கு அதிகாரம் கிடையாது” என உள்க்குமைச்சலை விநயமாய் சொல்லில் சோடித்தார்கள். காலகாலமான அனுபவம் சொன்னதை எடுத்துவைத்தார்கள்.

குறிப்பிட்ட வட்டார மக்களின் வாழ்க்கை, பண்பாடு, சிந்திப்பு முறை, பழக்கவழக்கம், நம்பிக்கை, உளவியல்கட்டமைப்பு ஆகியவைகளைப் பேசுகிறது வட்டாரவழக்கு. வட்டாரத்தைத தொட்டுக் காட்டுகிற அல்லது முழுமையாக வரைந்து காட்டுகிற எதுவும் நமது மொழிக்கு இலக்கியம். குறிப்பிட்ட பிரதேச மொழியில் எது இலக்கியமோ அது – கணவாய் வழியாக வீசி, சமவெளியில் பரவுகிற குளிர்காற்றுப் போல் பரந்த உலக இலக்கிய சமவெளிக்குள் நுழைகிறது.

2

ஆங்கிலத்தில் பரிமாற்றமாகிற எந்த இலக்கியமும் உலக இலக்கியம் என்னும் கருதுகோள் நம்மில் நிலைபெற்றுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் மொழியாக்கம் பண்ணப்பட்டதாய் இருக்கவேண்டும். சர்வதேசத்துக்குள் நுழைய ஆங்கில அனுமதி இருக்கவேண்டும். சா்வதேசக் கவனிப்புக்குள் வராமல் போக ஆங்கிலம் ஒரு தனித்தடை. ஆங்கிலத்தை விட எண்ணிக்கையில் அதிகமாக மக்கள் பேசுகிற பலமொழிகள் உலகாளவில இருந்த போதும், அறிவின் அளவீடாக, இலக்கியப் பரிமாற்ற வடிவமாக அந்த ஒன்று மட்டுமே உலகமொழியாக இன்று கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச இலக்கியமாக அங்கீகரிப்பது, அங்கீரிக்கப்படாதது என்பதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம் நவீனத் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் விண் தொடும் இக்காலத்திலும் ஆங்கிலம் மட்டுமே அந்தக் காரணிகளுள் சிகரமாக உள்ளது என்பது சாபக்கேடு. தற்காலம் இத்தடை கடந்து, அந்தந்த நாடுகளின் மொழியிலேயே ஆக்கம்பெறுகிற சாத்தியங்கள் பெருகிவருகின்றன. அதனால் பிரதேசத்தின் குறிப்பிட்ட வட்டார வழக்கில் வெளிப்படுவதினாலேயே இலக்கியத் தகுதி இழப்பாக ஆகாது.

தாய்மொழியில் படைக்கப்படுகிற வட்டார இலக்கியம், ஆங்கில மேலாண்மையைப் புறந்தள்ளுவதால், முதல் அம்சமாய் தன்னளவில் ஒரு எதிர்ப்புத் தன்மை கொண்டதாகி விடுகிறது. எந்த ஒரு வட்டார இலக்கியமாயினும் மொழி அளவில் அது ஏகாதிபத்திய மொழி எதிர்ப்பு இலக்கியமே.

வட்டார இலக்கியங்கள் அபூா்வப் பிறவிகள். இத்தகைய அபூர்வப் பிறவிகளாலேதான் உலக இலக்கியம் மினுமினுப்படைந்திருக்கிறது. ஷோலகோவின் ‘டான்நதி அமைதியாக ஓடுகிறது’ சிங்கிஸ் ஜத்மாத்மாவின் குல்சாரி, செல்மா லாசுர்லேவின் ‘கன்னி நிலம்’, தாரா சங்கா் பானா்ஜியின் ‘கவி’ சரத்சந்திரரின் பாரதி, ‘ராஜலட்சுமி’, தகழியின் செம்மீன் போன்ற மிகச் சிறந்த இலக்கியங்கள் வட்டார மக்களைப் பேசுகிற படைப்புக்கள் தான். அது தன் மக்களைப் பற்றிப் பேசும். தன் பகுதியின் வாழ்க்கையை இசைக்கும்; தன் மக்களைத் தொட்டு, விளக்குவதால் உலக மக்களைத் தொடுகிறது. மண்சார்ந்த, வித்தியாசமான புவியியல் அனுபவங்கள், மற்ற உலகின் பிறபகுதி மக்களுக்கு புதுமையான அனுபவங்களாய் அறிமுகமாகிறது.

அவை மண்சார்ந்து பிறந்தவை: மக்களின் வாழ்வைப் பிசைந்து வடிவு பெற்றவை. தமிழில்

புதுமைப்பித்தனின் - “சுப்பையாபிள்ளையின் காதல்கள், செல்லம்மா”வாக
தொ.மு.சி.ரகுநாதனின் - ‘பஞ்சும் பசியுமாக’
ஆா். சண்முகசுந்தரத்தின் - ‘நாகம்மாவாக’
எம்.வி.வெங்கட்ராமின் - ‘வேள்வித் தீயாக’
சி.ராஜநாராயணனின் - ‘கோபல்ல கிராமமாக’
சுந்தரராமசாமியின் - ‘புளியமரத்தின் கதையாக’
ஹெப்சிபா சேசுதாசனின் - ‘புத்தம் வீடாக’
நீல.பத்மநாபனின் - ‘தலைமுறைகளாக’
சா.கந்தசாமியின் - ‘சாயாவனமாக’
பூமணியின் - ’அஞ்ஞாடியாக’, ‘பிறகாக’
பொன்னீலனின் - ‘கரிசலாக’
நாஞ்சில் நாடனின் - ‘தலைகீழ் விகிதங்களாக’
சோ.தர்மனின் - கூகையாக
அ. முத்தானந்தத்தின் - ‘வாடியபயிருக்கெல்லாம், நல்லம்மாவாக,
பாவை சந்திரனின் - ‘நல்லநிலமாக
இமயத்தின் - கோவேறு கழுதைகளாக
கண்மணிகுணசேகரனின் - அஞ்சலையாக
ஜோ.டி.குரூஸின் - ஆழிசூழ் உலகாக

இன்னும் இந்த வரிசை நீளுகிறது. வித்தியாசமான வட்டாரத்தின் வித்தியாசம் வித்தியாசமான மனிதர்களின் குணநலன்களை எடுத்து வைத்தன.

3

பிராமணரும், ஆதிக்க உயா் சாதியினரும் கல்வி(எழுத்துமொழி) வாய்ப்பைப் பெற்றிருந்தனர். சமுதாய அடுக்கு அத்ற்கான வாய்ப்பை வகுத்து அவர்களுக்கு அளித்திருந்தது. இருபதாம் நூற்றாண்டின் சரிபாதிக்கு முன் (1950-கள்) இடைநிலை சாதியினர், அடிநிலை சாதியினர் பெரும்பாலும் கல்விவாய்ப்பை, அறிவுப்பெருக்க வாய்ப்பை இழந்திருந்தனர். பிராமண மற்றும் உயர்சாதிகளின் கற்றுணர்ந்தோருக்கான புரிதல் மொழியாக பொதுமொழியை உருவாக்கினர். சமுதாயத்தில் கல்வி, அறிவுப் பாராம்பரியத்தைக் கையில் வைத்திருந்த பிராமணரின் சொல்லாடல்களும், பிராமணரின் இடத்தை தலைவைத்துப் படுத்தாவது தொட்டுவிடலாம் என்று முண்டியடித்த மேல்சாதியினரின் வினையாடல்களும் பொது மொழியாக உருவெடுத்தது.

கி.ராஜநாராயணன்
புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், ஆர்.சண்முகசுந்தரம் ஆரமபகர்த்தாக்களாய் இருந்து உரைநடையைக் கையாளுகையில் பார்ப்பனரின், கற்றறிந்த உயர்சாதியினரின் பொதுமொழி உடைபடுகிறது. புதுமைப்பித்தன் கற்றவர் மொழியிலும் படைத்தார். சாபவிமோசனம், அகலிகை போன்ற கதைகளில் தன்கைவசமான பொருட்செறிவுடன், கவித்துவ தெறிப்புடன் மொழி இணைந்தது. அவரின் எண்ணிக்கை அதிகமான படைப்புகள் மக்களின் பேச்சு வழக்கில் வெளிப்பட்டன. எந்த மொழியை வேளாளர்கள் என்று அறியப்பட்ட திருநெல்வேலிப் பிள்ளைமார் புறமொதுக்கினார்களோ, அந்தச் சாட்டையை எடுத்து அவர்களின் மனப்போக்கு, செயல்பாடு, பண்பாட்டின் மேல் வீசியடித்தார். “திருநெல்வேலிப் பிள்ளைமார்களின் பழமைச் சிந்தனைகளை புதுமைப்பித்தன் அளவுக்குக் கிண்டல் செய்தவர் வேறுயாருமில்லை” என்று மறைந்த தி.க.சி குறிப்பிட்டது உண்மைதான். புதுமைப் பித்தன் படைப்புக்களில் வேளாளத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கூறுகள் கருக்களாக உள்ளன என்பதான விமர்சனம் பின்னாளில் எழுந்தது. தான் பிறந்த குலத்தின் சார்பாக இல்லாது, சுயவாத விமர்சனமாக அதனைக் காண வேண்டியிருக்கிறது. பாரதி எவ்வாறு தான் பிறந்த குலத்தின் மீதான விமர்சனமாய் எழுந்து வந்தாரோ அவா் போலவே, உருவானவர் புதுமைப்பித்தன். பேச்சுமொழி என்னும் வட்டாரத் தமிழ் அவர் நிலத்தில் நிறைந்திருந்தது.

வட்டார மொழிப் பயன்பாட்டின் முதல் ஊற்றுப் பீய்ச்சியடிப்பு கரிசல் இலக்கியக் கிணறு தோண்டலில் முழுசாய் அடித்தது. முதலில் கரிசலில் கிணறு தோண்ட ஆர்ம்பித்தவர் கு.அழகிரிசாமி. வாழ்வை அதன் மொழியிலேயே சொல்ல வந்த கர்த்தா அவர். கரிசல் வெள்ளாமை காண முன்னத்தி ஏர் பிடித்து ஆழ உழுது, அகலச் சால்பிடித்தார் கி.ராஜநாராயணன். கி.ரா.வின் கதைகளில் வெளிப்படும் மக்களும் மொழியும் தூரம்தூரமாக இருந்ததில்லை. ஒன்று கலந்ததாக, உயிரும் உடலும் இணைந்ததாக வெளிப்பட்ட்து. எழுதப்படுவது மட்டுமே இலக்கியம் என்றிருந்த இடத்தில், படைப்பாக்கத்தில் வட்டார மொழிப் பரப்பினை விரிவாக்கினார்.

மக்கள் தமிழ் போன்ற நூல்களும், தொடர் வாதாட்டமாமய் அவர் வெளிப்படுத்திய கட்டுரைகளும், ஒரு சாமானியன் இலக்கியத் திசையை மாற்றிவைத்ததை உணர்த்துவன. அவர் தொகுத்துள்ள “கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி” – மற்றுமொரு பாய்ச்சல். நாட்டுப்புற வழக்காறுகளின் ‘தெக்கத்தி மழை’ என்று அறியப்படும் எஸ்.எஸ்.போத்தையாவுடன் இணைந்து, துணையாகக் கொண்டு வட்டாரச் சொல் அகராதியை உருவாக்கினார்.

நாட்டுப்புற வழக்காறுகளின் சேகரிப்பாளர் எஸ்.எஸ்.போத்தையா; பேராசிரியர் நா.வானமாமலையின் தூண்டுதலில் பாடல்கள், சொலவடைகள் சேகரிப்பில் தொடங்கினார். கிராமப் பள்ளியில் ஆற்றிய ஆசிரியப் பணி தோதாய் அமைந்தது. கிணறு, குளம், குட்டை, கண்மாய், ஓடை, ஆறு என ஆகாய மழை பலப்பல ரூபங்களாவது போல், பாடல்கள், கேலிப்பாடல், சிறுவர் பாடல், கதைப்பாடல், சொலவடை, நம்பிக்கைகள், சொற்றொடர்கள் என பல தினுசுகளாய் வழக்காறுகளை சேர்த்துக் கொண்டிருந்தார்.

மக்கள் வழக்கில் விதை போட்டு முளைக்காத நிலமுமில்லை; மறுமாசூல் எடுக்காத வெள்ளாமையும் இல்லை. கரிசல் மண்ணில் நாட்டார் வழக்காறுகளின் மழை சக்கைப் போடு போட்டது. அதற்கு முன்னும் பின்னும் வட்டார வாழ்வை பலர் வரைந்தார்கள். வட்டார வாழ்வை எழுதினரேயாயினும் அந்த மொழியில் தரவில்லை. எழுத்தாளன், வட்டார மக்களிடமிருந்தெல்லாம் வித்தியாசப்பட்ட மேனிலையாளன் என்பதை அவர்கள் நிரூபித்துக்கொண்டிருந்த காலமாக இருந்தது.

எழுத்தாளர் பொன்னீலன் குமரி மாவட்டக்காரா். விளாத்திகுளம் வட்டாரத்தில் கல்வித்துறை அலுவலர் பணியில் சேர்ந்ததை முன்னிட்டு ‘கரிசல்’ என்றொரு நெடுங்கதை எழுதினார். 1976-ல் வெளிவந்தது அந்தப் படைப்பு. கி.ரா.வை முன்னத்தி ஏராகக் கொண்டு, பூமணி, பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி, அ.முத்தானந்தம், ச.தமிழ்ச் செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலண்மை பொன்னுச்சாமி , சோ.தர்மன், உதயசங்கா், கோணங்கி, சுயம்புலிங்கம் என அழுத்தமாக ‘சால்’ அடித்தார்கள். இந்த ‘ஒரு கொத்து’ எழுத்தாளர்கள் எடுத்த மகசூல் அபரிதமானது.
பூமணியின் பிறகு, வெக்கை - நெடுங்கதைகளுக்குப் பிறகு அண்மையில் வெளியான ‘அஞ்ஞாடி’ புதினம் கரிசல் காட்டின் வாழ்க்கை அகராதியாகும். ஒரு தலைமுறையின் கதை அல்ல: தலைமுறைகளின் தொடரும் கதை.குறிப்பிட்ட காலத்தின் தமிழ்ச் சமூக வரலாற்றை நேர்படப் பேசுகிறது. விளையாட்டு, பழக்கவழக்கம், உணவு வகை, விவசாய முறை, வேளாண்பொருட்கள், வசவு, வழக்காறு என ஒருசேர ஆவணப் படுத்த பெருவாய்ப்பாக இந்நெடுங்கதையைக் கையாண்டுள்ளார். மண்ணுக்குள், நீருக்குள்,துவைப்புத் துறைக்குள் அழுத்தப் பட்ட சலவைத் தொழிலாளர்களையும் தாழ்த்தபட்டவரையும் மையமாக்கி, ஒடுக்கப் பட்ட இனத்தின் குரலொலிப்பைத் தந்ததில் அவருக்குரிய கரிசல் மொழி வழிய வழியச் சிந்தியுள்ளது.

ஆர்.சண்முகசுந்தரத்தின் நாகம்மாள், சட்டி சுட்டதடா புதினங்கள் கொங்கு வட்டார மொழி பேசின. கொங்கு மக்களின் வாழ்வுச்சித்தரிப்பில், வட்டார வழக்குச் சொல்லில் முதல் அடி எடுத்து வைத்தன. நாகம்மாள், அறுவடை, பூவும் பிஞ்சும், பனித்துளி, மாயத் தாகம் முதலியன வட்டார வண்ணங்களோடு பிறந்தவை. வாழ்வும் வட்டார மொழி இணைவும் சரிசமமாய்ப் பொருந்திய படைப்புக்களை தருவதில் பெருமாள் முருகன் எழுச்சியுடன் வருகிறார். நிழல் முற்றம், மாதொரு பாகன் என்பன அவரது படைப்புக்களின் உச்சம். பிசிறில்லாமல் வழக்கு மொழியில் கொங்கு வட்டார வாழ்வியலைத் தருகிறவர்களில் சி.ஆா்.ரவீந்திரன், சூரிய காந்தன் போன்றோர் குறிக்கப் பட வேண்டியவர்கள்.

வட்டாரம் வட்டாரமாய் வாழ்வியல் பிளந்து கிடக்கிறது. வட்டாரப் புவியியல் (நிலவியல்) சார்ந்து ஓசை, உச்சரிப்பு முறை, நீட்டல், குறைத்தல், வெட்டல், என ஒவ்வொரு வகைப்பாடாய் பேச்சு வருகிறது. வித்தியாச வாழ்வுமுறை கொண்ட, வித்தியாசமான மொழிவெளிப்பாட்டில் உள்ள பூமி குமரி வட்டாரம். சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ அந்த மக்களின் குணப் போக்கு, மொழி வீச்சு கொண்ட வட்டாரப் புதினம். அந்நெடுங்கதை உருவான போது யதார்த்த இலக்கியப் பரப்பு தமிழில் மெல்ல மெல்ல பயிரிடப் பட்டுக் கொண்டிருந்தது. சுந்தர ராமசமியின் ‘புளிய மரத்தின் கதை’ அன்றைய யதர்த்த இலக்கியத்தில் பெரும் வரவேற்பளிக்கப் பட்டு, புதிய திசையை அளந்து கொடுத்தது. பொன்னீலன், நாஞ்சில் நாடனின் தொடக்க எழுத்துக்கள் எழுபதுகளில் தொடங்கின. பொது மொழிப் போர்வையை அவ்வப்போது போர்த்திக் கொண்ட போதும், இவர்களின் பெரும் பாலான படைப்புக்கள் வட்டாரத் தன்மையுடன் பிறந்தவை. நாஞ்சில் நாடனின் ‘என்பிலதனை வெயில்காயும்’, ‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நெடுங்கதைகள், ’பேய்க் கொட்டு’ - சிறுகதைகள் வட்டாரவாழ்வின் மொழிப் பிரயோகத்தில் பூத்தவை. பொன்னீலனின் ஊற்றில் மலர்ந்தவை முதலான கதைத் தொகுதிகள் குமரிவட்டார வாழ்வை மண்ணின் மொழியில் தந்தன.

பேச்சுவழக்கு வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடுகிறது. மனிதனின் மன, அசைவு, மனுசத் தன்மை போன்றனவற்றை வெளிப்படுத்திக்காட்ட வேண்டுமென எண்ணுகிற தேர்ந்த படைப்பாளி வட்டார வாழ்வின் அம்சங்களைத் திறம்பட வெளிப்படுத்துவான். பனைமரங்களை நம்பி, அதில் உற்பத்தி செய்யபடும் பொருட்களையே விற்பனையாக்கி வாழ்வு நடத்தும் பனையேறித் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஹெப்சிபா ஜேசுதாசனின் ”புத்தம் வீடு” ஒரு பனங்காட்டுப் படைப்பு. கடல்புரத்தில் வாழும் மீனவ கிறித்துவர்கள் பற்றிய வண்ணநிலவனின் ”கடல்புரத்தில்” புதினம் வட்டார வழக்கில் ஒரு மைல்கல் எனலாம்.

தோப்பில் முகமது மீரான்
இடஞ்சார்ந்து மட்டுமல்ல, இனம் (சமுதாயம்) சார்ந்தும் கவனப்படுத்தப்பட வேண்டும். மீனவ மக்கள், ஒன்பது கம்பளத்தார் சமுதாயம், இருளர், இஸ்லாமியர் என சமுதாயக்கலாச்சார நுண்மை, அவரவருக்கே உரித்தான தன்மைகள். இஸ்லாமியரின் தனிக் கலாச்சாரத்தில் அதற்கென தனிச் சொற்கள், வெளிப்பாட்டு முறை உள்ளன, முழு வீச்சில் அவர்களின் மொழியில் தந்தவர்கள் தோப்பில் முகமது மீரான், ஜாகீா் ராஜா ஆகிய இருவா். இஸ்லாமியர் பண்பாட்டு விவரிப்பில் இவர்களுடையது ஒரு கடைசல் மொழி. கடைசல் இயந்திரம் நாலாபக்கமும் நகாசு வேலை செய்து கொண்டே, தொடுபுள்ளியில் துளையிட்டு நிற்கும். தாம் சார்ந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பழக்க, வழக்கம், மனப்போக்கு போன்றவைகளை கலைப்படுத்திச் சொல்லிப் போகும் கடைசல் இயந்திரம், இவர்களின் மொழி.

குறிப்பிட்ட இனச் சமூகக் குழுக்களின் வாழ்வு அந்த வட்டார வழக்கில் படைப்பாவதும், இல்லாததும் உண்டு. எடுத்துக் காட்டாக பிராமண சமூகத்தின் வாழ்வை, மன அசைவுகளை எடுத்து வைத்தவர் தி.ஜானகிராமன். தஞ்சை வட்டார மொழி என்று தனியாக இல்லை. அது ஆதிக்க மேலாண் சாதிகளுக்கென ஒரு மொழியாகவும், நிலமற்ற வறிய விவசாயக் கூலிகளான தலித்மக்களுக்கு ஒரு மொழியாகவும் இப்படித்தான் பிரிவுபிரிவாய் இருந்தது. மேலாண் சாதியான பிராமண சமூகத்தின் மொழி தி.ஜானகிராமன் படைப்புக்களில் துல்லியமாய் வெளிப்பட்டது.
எழுபதுகளில் வெளிப்பட்ட புதினங்களில் குறிப்பிட வேண்டிய ஒன்று சா.கந்தசாமியின் ’சாயாவனம்’. கீழத் தஞ்சை என சொல்லப்படும் (சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை) வட்டாரத்தில் ஒரு வனம் அழிக்கப்படுவதின் சித்தரிப்பு. கிழக்குத் தஞ்சைப் பகுதி மக்களின் வாழ்வுச் சிதைப்பை தீட்டியதாயினும், அப்பகுதி மக்களது மொழியில் பிரிந்து நிற்கிறது. எழுத்தாளனின் பொதுமொழியில் வெளிப்பட்டுள்ளது. வட்டார வாழ்க்கை உண்டு; மொழி இல்லை.

தஞ்சை மக்களின் மொழி அம்மக்களின் பண்பாட்டுக் கூறுகளுடன் வெளிப்பட்ட படைப்பு பாவை சந்திரனின் ’நல்ல நிலம்’.அந்த வெற்றிக்குப் பின் படைப்பாக்கங்களில் அவரது பங்களிப்பு இல்லாமல் போயிற்று. சிலர் கைவசம் நல்ல மூலதனம் இருந்தும் அதனை மறு மூலதனமாக ஆக்க முயலுவதில்லை.

எம்.வி.வெங்கட்ராம், குடந்தையைப் பூர்வீகமாகக் கொண்ட படைப்பாளி; பட்டுநூல்காரர் என்று அழைக்கப்படுகிற செளராட்டிர இன கைத்தறி நெசவாளர்கள் கும்பகோணம், மதுரை, பரமக்குடி போன்ற நகரங்களில் பரந்துள்ளார்கள். பட்டு நூல்கார இனச் சமூகத்தின் வாழ்வுப் பிரச்சினையைச் சித்தரித்த நெடுங்கதை ‘வேள்வித் தீ’. எம்.வி.வெங்கட்ராமின் பிற படைப்புக்களும் அந்த சமூகத்தின் மொழியில் குறிப்பாய் தொழில் சார்பான சொல்லாடல்களுடன் அடையாளம் கொண்டன.

தஞ்சை மக்களின், குறிப்பாக கூலித் தொழிலாளிகளின் பிரச்சினைகளை, பண்பாட்டை, பழக்க, வழக்கத்தை அவர்கள் மொழியில் தருகிறது ச.முத்துவின் ‘கறிச்சோறு’ புதினம்.

விவசாயத் தொழிலாளிகள், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட முன்னெடுப்புகளைப் பேசுகிற நெடுங்கதைகள் தனித்துவமானவை. விழுப்புரம் கடலூா், பண்ருட்டி போன்ற நடுநாட்டு வட்டார கதைப் படைப்புக்கள், இமயம், தங்கர் பச்சான், கண்மணி குணசேகரன் ஆகியோரின் வருகைக்குப்பின் ‘செம்புல இலக்கியம்’ என தனியாகப் பெயர் கொண்டது, இமயத்தின் ‘கோவேறு கழுதைகள்’, தங்கர் பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ – போன்ற புதினங்கள், செம்புல மொழியின் உருவாக்கம்.

வட்டார வழக்குமொழியில் உரத்த சிந்தனையாய் வெளிப்பட்டவை பாமாவின் சிறுகதைகளும், ‘கருக்கு’ புதினமும். தலித் மக்களின் பேச்சு மொழியில் வெளிப்பட்டுள்ள புதினம் ஸ்ரீதரகணேசன் எழுதிய ‘சடையன்குளம்’. அபிமானி குறிப்பிடத்தகுந்த தலித் எழுத்தாளார். காலகாலமாக ஒடுக்கிவைக்கப்பட்ட இனத்துனுள்ளிருந்து, அவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதுவதால் மட்டுமல்ல, அம்மக்களுக்கே உண்டான மொழியின் வட்டாரத் தன்மையைப் பயன்படுத்துவதால், உயிர்ப்புள்ள எழுத்தாக மாறுகிறது.அவர்களின் மொழி அவர்கள் மேல் பாறையாய் அமர்ந்துள்ள மொழியல்ல. அவர் ஒரு தலித்; எடுத்துக்கொள்வது தலித் பிரச்சனைகள்; வெளிப்பாடு உண்மையாக அவர்கள் மொழியில் -இம் முக்கூட்டின் இணைவில் வெடித்துக் கிளம்பிய புதினம் அபிமானியின் “நீர்கொத்தி மனிதர்கள்”. மூன்று கடல்களின் சங்கமத்தைக்காட்டி உலகைத் தன்பக்கம் வரச் செய்கிற குமரிமுனை போல், இந்த ’முக்கூட்டு‘ புதினத்தை தூக்கி உயர்த்தி நிறுத்துகிறது.

தமிழ்நாட்டிலிருந்த போதும், சென்னைப் பட்டிணத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்று பல்லினத்தாரும் குடியேறினர். சென்னை குடியேறிகளின் நகரம் ஆனது. பல்லினக் கலப்பு உறவாடலில் இங்கு பலமொழி பிசைந்த தமிழ் ஒன்று உருவானது. சென்னைத் தமிழ் என்னும் புதிய ரூப மொழி உண்டானது.

சென்னைத் தமிழ் 1950, 60களில் கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘கிந்தனார்’ கதாகாலடே்சபத்தில் சென்னைத் தமிழில் பேசி, நடித்து அகடம், விகடம் பண்ணினார். நல்லதம்பி என்ற திரைப்படத்தில் இக்காட்சி வெளியாயிற்று. சென்னைத் தமிழும் வட்டாரத் தமிழே என்ற அங்கீகாரம் பெற 1990-களாயிற்று.

எங்கெங்கோ இருந்து, பெயர்த்தெறியப்பட்ட, குடிபெயர்ந்த எல்லா எழுத்தாளர்களின் குடியிருப்பாகவும் சென்னை ஆகிய வேளை, அவர்கள் மொழி அதுவாக ரூபம் கொள்ளவில்லை என்பது முரண்நகை. பி.எஸ்.ராமையா ‘தலைக்கு ஊத்திக்கின பொம்பிளே’ என்றொரு கதை எழுதினார். ‘ஊத்திக்கின’ என்பது சென்னை மொழி. அதற்கு மேலும் வலுசேர்க்கிறது ‘பொம்பிளெ’ என்ற வார்த்தை. பட்டணத்து ரிக்ஷாக்காரன் மொழியில் கர்ணன் மனைவியின் சுபாவம் பற்றி விவரிக்கிறது கதை.

நெல்லைத் தமிழ், கரிசல் தமிழ், கொங்குத் தமிழ் வரிசையில் ‘பட்டணத்து பாஷை’ என்ற அங்கீகாரம் பெற்ற சென்னைத் தமிழில் எழுதப்பட்ட புதினம் ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”. இதுவும் ரிக்ஷாக்காரனின் கதை. ரிக்‌ஷாஓட்டியான புருஷனில் பிரியம் கொள்வதை விட, அவன் அணிந்திருக்கும் முண்டாபனியனில் அச்சடித்த, அவன் பச்சை குத்திக் கொண்டிருக்கிற எம்.ஜி.ஆரை காதலிக்கிறாள் குப்பத்து மனைவி அஞ்சலை. அவனிடம் மயங்குகிற காலத்திலும், எம்.ஜி.ஆரிடம் கிறங்குவது போலவே நினைத்துக் கொள்கிறாள். முழுக்க திராவிட இயக்கக் கலாச்சாரத்தை, அவர்களின் திரைப்பட மாயை சாதாரண மக்களைச் சுண்டி இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டதை அம்பலப்படுத்த எழுதப்பட்டது இப்புதினம்.

பேச்சு வழக்கிலேயே, பேசிப் பேசியே பாத்திரங்கள் கதை நடத்துவதில் வல்லவரான பூமணியின் நிறையகதைகள் உரையாடல் போக்கில் வந்துள்ளன. பூமணிக்கு மட்டுமே சாத்தியமான வித்தை இது.

“குறிப்பிட்ட ஒருவட்டாரத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு சிலர். அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்குகளையும், அங்கு மட்டுமே வழக்கத்திலுள்ள தனிப்பிரயோகங்களையும் சொல்சிதைவுகளையும் அளவுக்கு அதிகமாகத் தங்கள் எழுத்திலே திணித்து, எழுத்து நடையின் இயல்பான ஓட்டத்தைக் கெடுத்து ஒரு செயற்கைத் தனத்தைச் சுமத்திவைப்பதில் உற்சாகம் காட்டலானார்கள். இந்த மனோபாவம் எழுத்துக்கு வளம் சேர்ப்பதில்லை. எழுத்தாளரின் வளர்ச்சிக்கும் வகை செய்வதில்லை”

வட்டார வழக்கு என்கிற கிறுக்கு பிடித்து ஆடுகிற இத்தகையோரை ’பலவிதநடைகள்’ என்னும் கட்டுரையில் வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார். தன் எழுத்தை நிலைப்படுத்திக்கொள்ள காலக்கணக்கு முக்கியம். வழக்கு மொழியை இடமும் அளவும் அறிந்து உபயோகப்படுத்துவது முக்கியம்.

“என்னுடைய எண்ணம் நூத்துச் சதமானம் அப்படியே பேசுகிற மாதிரி எழுத வேண்டுமென்பதல்ல. பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்குமுள்ள தூரத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பது நல்லது.” என்பார் கி.ரா.

இங்கு கவனப் படுத்த வேண்டியது இலக்கிய உரைநடைப் போக்கில் இது என்ன காலம் என்பது தான். வாசிப்புணர்வும், படைப்புணர்வும் காலத்துக்கு காலம் எட்டி நடை போடுகிறது. கட்டம் கட்டமாய் நகர்ந்து அது ஒரு எல்லையில் நிற்கிறது. அதுதான் கி.ரா குறிப்பிடுகிற இக்காலத்தின் எல்லை. கால எல்லையை நன்றாய்க் கணித்து, அதற்குத் தக எழுதுவது வெளிப்பாட்டு முறை.

இன்று உலகக் கொள்ளை நடத்திட இனம், மொழி, பண்பாடு போன்றவை தடையாக நிற்பதால், இவைகளைக் ‘கெடாவெட்டு’ வெட்டி ,கறிச்சோறு போடுவது ’ஜோராய்’ நடக்கிறது. உலகமயத்தின் வெட்டுக்கு முதல் கழுத்து வட்டாரப் பண்பாடு, வட்டார வழக்கு.

மாடும், ஏரும், உழவும் கொண்ட விவசாயத்தின் கழுத்தில் ஒரே வெட்டு; வேளாண்மையச் சுற்றி எழும்பிய கிராமியமும், கிராமத்து வாழ்வும் வெட்டுப்பட்டு தலைதுண்டாகாத ’தொங்கு கெடா’ மாதிரி துடித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்பான மொழி வழக்காறுகளும் சிதையில் கிடத்தப்பட்டுள்ளன. மொத்தமாய் வட்டார மக்களின் வாழ்வியலை எரித்துச் சாம்பல் காணுகிறபோதில், அதன் குணாம்சமான வழக்கு மொழியும் அத்துப்போகிறது.

துடிப்படங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நாடிபிடித்துப் பார்க்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு காரியம் செய்துகொள்ள வேண்டும் - வட்டார வழக்காறுகளை ஆவணங்களாக்கி, வழக்குச் சொல்லகராதிகளாக்கி, படைப்புக்களாய் ஆக்கியும் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். வழக்காற்றின் வரலாற்றையும் – அதன் காலம், பிறந்த காரணம், எங்கிருந்து பிறப்பு, வளர்சிதை மாற்றம் என பூர்விகத்துடன் பதியப் படுத்த வேண்டும். செய்தால் கூடுகளைக் காப்பாற்றிய மாதிரியும் ஆகும்.கூடுவிட்டுக் கூடு பாயும் பறவைகளைத் தேடிக் களைப்பதும் இருக்காது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி