கலக பிம்பங்கள்

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவகை ஓவியம் மேலெழுந்து வருகிறது. காலம் அழிந்து போனபின்னும் காலத்தின் தொடர்ச்சியில் அந்த ஓவியங்கள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்தின் கருத்துநிலைக்கும் கலை வெளிப்பாடுகளுக்கும் தொடர்பிருப்பது போலவே, ஓவியத்துக்கும் அதே தொப்புள்கொடி தொடர்கிறது. எனவே காலமறைதலோடு அந்த கருத்து நிலை மறைந்துவிட்டபோதும், அப்படியொரு கருத்து நிலவிய சாட்சியாக ஓவியம் நின்று பேசுகிறது. இதன் காரணமாகவே ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சரியாகக் கையகப்படுத்திய எந்த ஓவியமும் நூற்றாண்டுகள் தாண்டியும் நூற்றாண்டுகள் மேலாகவும் நடந்து போகிறது. எனவே நூற்றாண்டுகளாய் நின்று பேசும் ஓவியம் என்ற பெயரைத் தன்மேல் பதிவு செய்து கொள்கிறது.

காலத்தின் மாறுதலை அடையாளப்படுத்துகிற நின்று பேசுகிற ஓவியங்களை நாம் கொண்டாட வேண்டும்.

சமணர்களைக் கழுவிலேற்றிய ஓவியங்கள் சில இடங்களில், குறிப்பாகக் கோயில்களில் காணப்படுகின்றன. சமணரைக் கழுவேற்ற கழிக்கும் என திருவுளமேயன்றும், சமணப் பெண்டிரை கற்பழிக்கத் திருவுளமேயென்றும் பாடிய திருஞான சம்பந்தரின் உள்ளத்து ஆசையை இந்த ஓவியங்கள் நிறைவேற்றியுள்ளன. உயிரோடு தீயில் எரிப்பது கொதிக்கும் எண்ணைக் கொப்பரையில் தூக்கிப் போடுவது, மாறுகால் மாறுகை வாங்குவது என்று நரகத்தில் நிறைவேற்றப்படுவதாக நம்பப்படும் தண்டனைப் பட்டியலில் உடலை நடுவாய்ப் பிளக்கும் கழுமரம் ஏற்றுவது உச்சமானதாக இருக்கிறது. மனிதர்கள் தனிமனிதாக இருந்தபோதும் கூட்டாக, குழுவாக வாழ்ந்த போதும் அதிகாரத்தைச் செயல்படுத்தும் குரூரமனங்களுக்குள்ளிருந்து இந்த விஷக்குருத்து உருவாகியது.

சமணரைக் கழுவேற்றிய அன்றைய சமுதாயச் சீரழிவு, இன்றைய குஜராத்தில் நடைபெற்ற மதவெறியாட்டக் காட்டுமிராண்டித்தனத்துக்குச் சமமானது.

இந்த ஓவியத்தை எவ்வாறு கணிப்பது? அதன் கருத்து வெளிப்பாட்டிலிருந்தா? அதன் சுற்றாடலான கலைநய நேர்த்தியிலிருந்தா?

கால வளர்ச்சியைக் காட்டும் அல்லது அடையாளப்படுத்தும் ஓவியங்களில் இது கரும்புள்ளியாக இருக்கும். மலத்தில் தெரியும் நிலாவைப் போல! வரலாற்றை முன்னெடுக்கும், கால வளர்ச்சியைக் காட்டும் ஓவியம் எதுவோ, அது ஒருபோதும் முற்றுப்புள்ளியாக உருக்கொள்வதில்லை. தன் காலத்தை தனக்கு முன்னிருந்தவைகளோடு நகர்த்திக் கொண்டு எதிர்வருபவைகளை நோக்கி நடப்பதாக நகரும் புள்ளியாக அது மினுமினுக்கும். 

புகழேந்தியின் ஓவியங்களை நகரும் புள்ளிகளாக நான் காணுகிறேன். சாரம் இதுதான். சமூக அக்கறையுள்ள ஒரு கலைப்போராளி தன்னையொரு முற்றுப்புள்ளியாய் ஆக்கிக்கொள்ளாது எப்போதும் இயங்குதல் கொண்டவனாக செயல்படுகிறான் என்பதுதான்.

"இனம், வர்க்கம், பால், சாதி, மதம் என ஏதோ ஒன்றைச் சார்ந்துதான் நாம் ஒவ்வொருவரும் வரையறுக்கப்பட்டிருக்கிறோம். அல்லது வரையறைகளை உருவாக்குகிறோம். நமது இயங்குதளத்திற்கு ஏற்பப் பேசுப்பொருள்கள் மாறுகின்றன. சமூகப் பார்வைக் கோணங்கள் வேறுபடுகின்றன. தன்னிலை சார்ந்த கருத்தியல்கள் (சில விளிம்பு நிலைக் கருத்தியல்கள் விதிவிலக்கானவை) பிற தன்னிலைகளை மறுதலிக்கும். அடக்கி ஒடுக்கும் ஆதிக்கக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன."

- யதீந்திரா, எழுத்தாளர், திருகோணமலை, ஈழம்

முற்பட்ட காலம் முதல், நவீன ஓவியம் வரை ஆணியப் பார்வை சார்ந்த தன்னிலையிலிருந்துதான் ஓவியங்கள் உருவாயின என்கிறார் யதீந்திரா.

எழுத்து, இலக்கியம் போலவேதான் ஓவியமும். எழுதத் தொடங்குகிறவர்கள், பெரும்பாலும் கவிதையிலேயே தொடங்குகிறார்கள். பெரும்பாலானவை காதல், இயற்கை இவைகளைப் பேசுபொருளாகக் கொண்டே எழுதினார்கள். காதற்கவிதைகள் முக்கால்வாசி பெண்ணை முன்னிறுத்தி பெண்பாலைச் சுற்றிச் சுற்றியே பிறந்தன. படைப்பாளிகள் அனைவரும் ஆண்கள். படைத்தவை அனைத்தும் ஆணியப் பார்வை என்ற தன்னிலை சார்ந்து படைக்கப்பட்டவை என்பதுவே மூலகாரணம்.

ஓவியங்கள் சமீபகாலம் வரை, பெண்களைப் பற்றிப் பேசியவைதாம் பெண்ணிலை என்ற கருத்துத் தளத்தில் உருவாகாமல் ஆணியப் பார்வை எனும் தன்னிலையிலேயே பெரும்பாலும் வரையப்பட்டவைதாம். இப்போதும் வணிகப் பார்வை வெளிப்பாடுகள் பெண்களைக் கொச்சைப்படுத்தியே வருகின்றன. இவ்வகை ஓவியம் எத்துணை அழகியல் தன்மையோடு தென்பட்டாலும் ஆண் பெண் மீது செலுத்தும் அதிகாரக் குவியலிலிருந்து தெறிக்கும் ஒரு துளிதான் என்று மட்டுமே நாம் கொள்ள முடியும்.

ஒவ்வொரு விசயத்தையும் இனம், வர்க்கம், சாதி, மதம், ஆண் என்ற தன்னிலைகள் சார்ந்தே ஒவ்வொருவரும் சிந்திக்கிறார்கள் என்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் உலகக் குடிமகனுக்கு இல்லாத ஒரு தனிப்பார்வை, தமிழனுக்கு இருக்கிறது. சாதி என்ற தன்னிலை சார்ந்து அவன் சிந்தித்துக் காரியமாற்றுகிறவனாக இருக்கிறான் என்பதே அந்தத் தனி அம்சம். இந்தத் தன்னிலைகளிலிருந்து அல்லது நோய்க் கூறுகளிலிருந்து தன்னைக் கழற்றிக் கொள்வதற்கான மூலங்களை (தரவுகளை) காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் கொடையளித்துள்ளனர்.

ஒரு விசயத்தை ஒரு பார்வையில் மட்டுமே புரிந்து கொள்ளல், விளக்கப்படுத்துதல் என்பது இந்தத் தன்னிலைகளிலிருந்து தான் உருவாகிறது. தன்னிலை கெட்டிப்பட, கெட்டிப்பட அதிகாரத்துவம் உருக்கொள்கிறது. அதற்கப்பாலும் சிந்தனையை, பார்வையைச் செலுத்த முடியும் என்ற ஒற்றைப் புரிதலுக்கு அப்பாற்பட்ட சாத்தியங்களை மறுப்பதாய் இந்த அதிகாரத்துவம் பரவுகிறது.

ஓவியத்தில் சமீபகாலம் வரை நிலவிய பார்வைகள், இன்று சிலரால் விலக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பிடத்தக்க பெயர்களை சுட்டிக்காட்ட முடியும். ஓவியர் புகழேந்தி ஆணியப் பார்வை என்ற தன்னிலையைக் கழற்றிவைத்தவராக, அறவே தன்னிடம் அது அண்ட முடியாதவராக பல பேசு பொருள்களையும் பலமுனைகளில் புரிதல் கொண்டு பேசுபவராக ஓவியங்களில் கொண்டு வருகிறார் புகழேந்தி.

இது சார்ந்த என் சொந்த அனுபவம் ஒன்றுண்டு.

கிராமங்களில் வீடு, தெரு, முற்றம் என்பவை மனித உறவுகள் சார்ந்து அமைக்கப்படுபவை. குறிப்பாகப் பெண்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாட இவை ஏதுவாய் அமைந்தவை. பெண்கள் தமக்குள் தாமே கூடிப் பேசுதல் அல்லது பொறாது பேசுதலை, 'பொறணி பேசுதல்' என்ற சொல்லாடல் சுட்டுகிறது. தமக்குள்ளிருக்கும் வெக்கையைப் பேச்சுப் பழக்கம் போடுவது என்ற இந்த வெளிப்பாட்டு முறையால் போக்கிக் கொண்டார்கள். எதிர்பாலியலின் அடக்குமுறை, ஆணைச் சார்ந்திருந்தே வாழ வேண்டிய கட்டாயம் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயான முரண், வெளி உறவுகளிலிருந்து காயும் வெக்கரிப்பு. இவைகளை ஆங்காரத்தில், வயிற்றெரிச்சலில், வெறிச்சியில் வெளிப்படுத்துவார்கள். இந்த பொறணி பேசுதலை ஒரு கலையாகக் கருதல் வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். வாழ்வின் மீது வெறுப்பும் ஈர்ப்பும் அந்நியப்படுதலும் தன்வயமாதலும் என இரு நிலைகளின் உராய்வுதான் கலை வெளிப்பாடு என்கிறபோது, அதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல 'பொறணி.' இது தன்னியல்பாக தானறியாமல் லயிப்பாக வெளிப்படுகிற போது கலையாகிறதேயன்றி, தாலாட்டுப் போல் ஒப்பாரிபோல் மறுபடி வினையாற்றி கலையாக வடிவுகொடுக்க முடியுமா என்று எனக்குத் தோன்றவில்லை.

இவைகளுக்கு நகரும் கோடுகளால் ஓவிய வரைவு கொடுத்திருக்கிறார் புகழேந்தி. அதிரும் கோடுகளில் பக்கம் 26இல் இந்தப் பதிவைக் காணலாம்.

இதுவும் இதனோடு இணைந்த இருபது கதைகளுமாக கதை சொல்லி சர்க்கரை என்பவரின் வாய்ச்சொல்லில் அச்சுப் பிசகாமல் பதிவு செய்திருந்தேன். டேப் ரிக்கார்டரில் வாய்மொழியாகப் பதிவு செய்து வாய்மொழியாகவே மறுபதிவு செய்த 'கிராமங்களின் கதை' என்ற எனது நூல் ஒவ்வொரு கதையும் ஒரு ஓவிய வரைவோடு வருதல் தகும் என விரும்புகிறேன். பத்துக் கதைகள் அவருடைய ஓவியங்களோடு சோடிப்பொருத்தம் சரியாக அமைந்துவிட்டது. இம்முறை நகரும் கோடுகள் அல்ல; அடர்த்தியான சாம்பல் வண்ணம் தூக்கலாய் நிற்க, கோடுகள் தாயின் முந்தானை பிடித்து வரும் குழந்தை போல் அமராவதியாய் வந்தன. வெவ்வேறு வகைகளில் கோடுகளைப் பேசவைக்கும் வல்லமை அவர் தூரிகைக்குள் ஒளிந்திருக்கிறது.

சமகால சமுதாயம் ஏற்கெனவே இருந்த சமுதாயம் எந்த சமுதாய அமைப்பிலும் கலைஞன் திருப்தி கொள்வதில்லை. குறிப்பாக நிலவுகிற சமுதாய அமைப்பில் அவன் அதிருப்தி கொண்டே உலவுகிறான். பேனாவோ, தூரிகையோ இந்த வேறுபாட்டிலிருந்து தனது பணியைத் தொடங்குகிறது. உன்னதமான சமுதாயத்தில் கூட சுட்டிக்காட்டப்பட வேண்டிய பல ஓட்டைகள் இருக்கின்றன. கலைஞனுடைய கண்கள் மட்டுமே கட்டுணர்கிற ஓட்டைகளை, ஓட்டைகளாக இல்லாமல், மதகுக கண்களாக மாற்றுகிற பொறுப்புணர்வோடு கலைஞன் செயல்படுகிறான்.

கலைஞனுக்கு மட்டுமல்ல; எந்த ஒரு சமூகஇயல் விமர்சகருக்கும் தென்படுகிற ஒன்றுதான். ஆகவே கலைஞன், சமகாலத்தின் சமூகவியல் ஆய்வாளனாகவும் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே சமூகத்தின் அதிர்வுகள், ஒரு விசயத்தைப் பிரதிபலிப்பது பிம்பம்; கலைஞன் தன்னை இணைத்துக் கொள்கிறபோது, அல்லது முழு ஈடுபாட்டுடன் வெளிக்கொண்டு வருகிறபோது, அந்த பிம்பம் சில புனைவுகளையும் இணைத்துக்கொண்டு வருகிறது. இந்தப் புனைவுதான் கலைபிம்பம். இந்தப் புனைவுகளில் தான் கலைஞன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.

ஓவியர் புகழேந்தியின் கலை பிம்பங்கள் பெரும்பாலும் கலக உணர்வு கொண்டு நிலவும் சமுதாயத்தோடு ஒத்துபோகாத, கலக மனப்பான்மையில் உருவாகின்றனவாக வெளிப்படுகின்றன. யதார்த்தமும் புனைவும் ஒன்றோடொன்று பொருந்துகிற பிம்பங்களாய் உருக்கொள்கின்றன. எந்தக் கலைஞன்தான் யதார்த்த வாழ்வியலிலிருந்து தனக்கான கச்சாப் பொருளை எடுத்தாளவில்லை? எல்லோரும் இந்த பூமிக்கு மேலே, ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற வாழ்வியலிலிருந்து தான் எடுக்கிறார்கள். அதை மனித மனங்களுக்குச் சொரணை ஏற்றுகிற கலகப் புனைவாக எத்தனை பேர் மாற்றுகிறார்கள்? 

திண்ணியத்தில் நான் மலம் தின்ன வைக்கப்பட்டேன். வெண்மணியில் நான் தீக்கொளுத்தப்பட்டேன். அரியானாவில் பசுவைக் கொன்று தோலுரித்தேன் என்று உயிரோடு தோலுரிக்கப்பட்டேன். நான் சித்திரவதைப்படுகிற போதெல்லாம் சிறுமைப்படுகிற போதெல்லாம் எந்தத் தூரிகை எனக்கருகே வந்து, என் ரணங்களில் வலிகளில் தீப்புண்ணுக்கு அக்கி எழுதுவது போல் தொட்டுத் தடவுகிறது?

திண்ணியம் ஓவியத்தில் மலம் தின்னும் என் முகத்துக்கெதிரே - இரண்டு திமிரெடுத்த கால்கள். முழங்காலுக்குக் கீழே தெரிகிற இரண்டு கால்கள் மட்டுமே. என்னை மலந்தின்ன வைக்கும் முண்டங்களின் திமிரை சாதி, உயர்குடி, மதம் என்ற தன்னிலைகளின் வெறியை வெளிப்படுத்தியபடியே இரு கால்கள் என்னைப் பயமுறுத்துகின்றன. அடுத்த நொடி அந்தக் கால்களை நான் வாரிவிட்டுவிட முடியும். அந்த வீழ்த்துதலுக்காகவும் நான் ஏறிட்டுப் பார்க்கிறேன், அடுத்த கட்டமாய்.

புகழேந்தியின் ஓவியம் வெறும் கலைபிம்பம் மட்டுமல்ல; கலக பிம்பங்கள்.

- பா.செயப்பிரகாசம் (ஓவியப் போராளி புகழேந்தி சிறப்பு மலர், 2004)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்